திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - வான் தடவும் ஆல மரம்
திருப்பத்தூரில் இருந்து மதுரையில் இருக்கும் தன் மாமன் வீட்டுக்கு ஒரு வேதியன் தன் மனைவியோடும், பச்சிளம் குழந்தையோடும் வந்து கொண்டிருந்தான் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.
வரும் வழியில் பெரிய காடு. அந்த காட்டை கடந்து மதுரைக்கு வர வேண்டும்.
வருகின்ற வழியில் , அவனுடைய மனைவிக்கு தாகம் எடுத்தது. கணவனிடம் நீர் கொண்டு வரும்படி கேட்டாள் . அவனும், தன்னுடைய மனைவியையும், பிள்ளையையும் ஒரு பெரிய ஆல மரத்தின் நிழலில் அமரச் செய்துவிட்டு, நீர் தேடித் போனான்.
நீரை எடுத்துக் கொண்டு வரும் போது .....
பாடல்
வருவானுண் ணீர்வேட்டு வருவாளை வழிநிற்கும்
பெருவானந் தடவுமொரு பேராலி னீழலின்கீழ்
ஒருவாத பசுங்குழவி யுடனிருத்தி நீர்தேடித்
தருவான்போய் மீண்டுமனை யிருக்குமிடந் தலைப்படுமுன்.
பொருள்
வருவான் = வரும் போது
உண்ணீர்வேட்டு = உண்ணுகின்ற நீரை தாகத்திற்காக வேண்டி
வருவாளை = உடன் வருகின்ற அவளை (மனைவியை)
வழிநிற்கும் = வழியில் நிற்கும்
பெருவானந் தடவுமொரு = பெரு வானம் தடவும் ஒரு
பேராலி னீழலின்கீழ் = பெரிய ஆலின் (ஆல மரத்தின்) கீழ்
ஒருவாத = விட்டுப் பிரியாத
பசுங்குழவி = பச்சிளம் குழந்தையை
யுடனிருத்தி = அவளோடு உடன் இருக்கும் படி செய்து
நீர்தேடித் = நீரைத் தேடி
தருவான்போய் = தருவதற்காக போய்
மீண்டு = திரும்பி வந்து
மனை = மனைவி
யிருக்குமிடந் தலைப்படுமுன் =இருக்கும் இடத்தை நோக்கி வருவதற்கு முன்
ஒருவாத பசுங்கிளவி = விட்டுப் பிரியாத பச்சிளம் குழந்தை. அம்மாவின் இடுப்பிலேயே இருக்கும்.
ஒருவாதக் கோலத்து ஒருவா என்பார் வள்ளலார்
திருவாத வூரெம் பெருமான்
பொருட்டன்று தென்னன்முன்னே
வெருவாத வைதிகப் பாய்பரி
மேற்கொண்டு மேவிநின்ற
ஒருவாத கோலத் தொருவாஅக்
கோலத்தை உள்குளிர்ந்தே
கருவாத நீங்கிடக் காட்டுகண்
டாய்என் கனவினிலே.
"உண்ணு நீர் வேட்டு வருவாளை" = தாகத்தோடு வந்து கொண்டு இருக்கிறாள். பாவம். பச்சிளம் குழந்தை. அதை வேறு தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருப்பாள். பேருந்தா , காரா ? நடந்துதான் வர வேண்டும். காடு வேறு. சரியான சாலை இருக்காது. எடை வேறு. பச்சிளம் குழந்தை என்பதால் பிரசவம் ஆகி கொஞ்சம் காலம் தான் ஆகி இருக்கும். வலியும் களைப்பும் இருக்கும் அல்லவா ? தாகம் எடுக்கிறது. பாவம்.
அவளை , பெரிய ஆல மரத்தின் கீழ் அமரச் செய்துவிட்டு நீர் கொண்டு வர சென்றான். அது வானத்தை தடவிப் பார்க்கும் ஆல மரமாம். அவ்வளவு பெரிய ஆலமரம்.
தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறான்.
அதற்குள் ....
http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_14.html
No comments:
Post a Comment