திருவிளையாடல் புராணம் - பழிக்கு அஞ்சிய படலம்
நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தால், ஐயோ எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் , எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அலுத்துக் கொள்கிறோம்.
இப்படி நமக்கு நடக்க என்ன காரணம் என்று சிந்திக்கிறோம். ஒரு வேளை போன பிறவியில் செய்த பாவமோ என்று சந்தேகப் படுகிறோம்.
வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதன் காரணமாக , நம் துன்பத்துக்கு என்ன காரணம் என்று சிந்திக்கிறோம். அந்த காரணத்தை விலக்கி விட்டால், சந்தோஷம் வந்து விடும் என்று நினைக்கிறோம்.
நமக்கு வந்த அந்தத் துன்பம் இல்லாதவன் எத்தனை பேர் இருக்கிறான் ? அவனெல்லாம் மகிழ்ச்சியாகவா இருக்கிறான் ? அப்புறம் நாம் மட்டும் காரணம் தேடி ஏன் அலைகிறோம் ?
விதி, கர்மா, பாவம் , புண்ணியம் என்று நாமே நினைத்துக் கொண்டு , சம்பந்தம் இல்லாத விஷயங்களை ஒன்றோடு ஒன்று முடிச்சு போட்டுக் கொண்டு வாழ்கிறோம்.
இது சரிதானா என்ற கேள்வியை திருவிளையாடல் புராணத்தில் உள்ள பழிக்கு அஞ்சிய படலம் விளக்குகிறது.
பாடல்
ஈறிலான் செழிய னன்புக் கெளியவ னாகி மன்றுள்
மாறியா டியகூத் தென்சொல் வரம்பின தாமே கங்கை
ஆறுசேர் சடையான் றானோ ரரும்பழி யஞ்சித் தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றுந் திருவிளை யாடல் சொல்வாம்.
சீர் பிரித்த பின்
ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள்
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித் தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம்.
பொருள்
ஈறு இலான் = இறுதி என்று ஒன்று இல்லாதவன்
செழியன் = பாண்டிய நெடுஞ்செழியனின்
அன்புக்கு எளியவன் ஆகி = அன்புக்கு எளியவன் ஆகி
மன்றுள் = மன்றத்தில்
மாறி = கால் மாறி
ஆடிய = ஆடிய
கூத்து = கூத்து
என்சொல் வரம்பினது ஆமே = என்னுடைய சொல்லின் (பாட்டின்) வரம்புக்குள் வரும்
கங்கை ஆறுசேர் சடையான் தான் = கங்கை ஆற்றை சடையில் கொண்ட அவன்
ஓர் = ஒரு
அரும் = பெரிய
பழிக்கு அஞ்சித் = பழிக்கு அஞ்சி
தென்னன் = பாண்டியன்
தேறலா மனத்தைத் = தெளிவில்லாத மனத்தை
தேற்றும் = தேற்றுவித்த
திருவிளை ஆடல் சொல்வாம் = திருவிளையாடல் பற்றி சொல்வோம்
கால் மாறி ஆடிய கூத்து = அது என்ன கால் மாறி ஆடியது ? எல்லா ஊரிலும், நடராஜர் வலது கால் ஊன்றி , இடது காலை தூக்கி நின்றபடி ஆடும் கோலத்தில் இருப்பார். ஒரு முறை , பாண்டிய மன்னன் ஒருவன், நடன கலை பயின்ற பின் , கோவிலுக்குப் போனான். அங்கே நடராஜர் வலது கால் ஊன்றி , இடது காலை தூக்கி நின்ற கோலத்தைப் பார்த்தான்.
அவன், நடராஜரிடம் வேண்டினான் "நடனம் படிப்பதே மிக கடினமாக இருக்கிறது. நீயோ காலம் காலமாக வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி ஆடிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு கால் வலிக்காதா ? எனக்காக , காலை மாத்தி ஆடக் கூடாதா ? உன் வலது காலுக்கு கொஞ்சம் இளைப்பாறுதல் கிடைக்கும் அல்லவா " என்று வேண்டினான்.
பாண்டியனின் அன்பை எண்ணி, நடராஜர், மதுரையில் மட்டும் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடிய கோலத்தில் காட்சி தருவார்.
பக்தர்களின் பக்திக்கு எளியவனாக வருவான்.
"செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் மாறி ஆடிய கூத்து "
"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.
அவன் "ஈறு இல்லாதவன்" முடிவே இல்லாதவன். பாண்டியனின் அன்புக்கு எளியவனாக வந்தது போல, என் பாட்டுக்குள்ளும் வருவான் என்கிறார்.
"ஈறு இல்லாதவன்" - முடிவு இல்லாதவன்.
"ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே " என்பார் திருநாவுக்கரசர்
"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண - ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே."
மேலும் சிந்திப்போம்.
தொடர்ந்து படியுங்கள். இது ஒரு தொடர் கதை மாதிரி.
http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post.html
இந்த பதிவு என்னை வார்த்தையால் விவரிக்க முடியாதபடி பரவசத்தில் ஆழ்த்தி விட்டது. ஈசன் கருணைக்கு அளவு உண்டோ? மிக்க நன்றி
ReplyDeleteமாறு கால் பற்றிய செய்தி சுவையானது. மதுரையில் எந்த கோவிலில் இப்படி இருக்கிறது?
ReplyDeleteநன்றி.