திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ
வேதியன் ஒருவன் மதுரை வரும் வழியில் , கானகத்தில் மனைவியையும் பிள்ளையையும் ஒரு ஆல மரத்தின் கீழ் தங்க வைத்து விட்டு நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் என்றோ , யாரோ விட்ட அம்பு ஒன்று தொங்கிக் கொண்டு இருந்தது. அது காற்றில் ஆடி கீழே விழுந்தது. விழுந்த அம்பு, நேரே சென்று அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் தைத்தது. அவள் இறந்து போனாள் . அதே சமயம் ஒரு வேடன் , நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் வந்து நின்றான். அதே சமயம் நீர் கொண்டு வந்த வேடன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். அருகில் இருக்கும் வேடனைப் பார்த்தான். அந்த வேடன் தான் அவளை கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அந்த வேடனை இழுத்துக் கொண்டு பாண்டியன் இருக்கும் அரண்மனை வருகிறான்.
தோளில் பசித்து அழும் பிள்ளை. மனதில் மனைவி இறந்த சோகம். கையில் வேடனை பிடித்துக் கொண்டு அரண்மனை வாசலில் நின்று ஓலமிடுகிறான்.
மன்னா, உன் நாட்டில் இப்படி நடப்பது முறையோ முறையோ என்று கதறுகிறான்.
பாடல்
கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையையோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையையோ
மாமதி வானோன் வழிவரு மைந்தர முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.
பொருள்
கோமுறை = கோ + முறை = அரச முறை
கோடாக் = கோட்டம் என்றால் வளைவு. கோடா என்றால் வளையாத, நேரான.
கொற்றவ ரேறே = கொற்றவ + ஏறே = அரசர்களில் சிங்கம் போன்றவனே
முறையையோ = இது முறையா ?
தாமரை யாள்வாழ் = தாமரையில் இருக்கும் திருமகள் வாழும்
தண்கடி = குளிர்ந்த மலர் மாலை அணிந்த
மார்பா = மார்பை உடையவனே
முறையையோ = இது முறையோ
மாமதி = பெரிய நிலவு. சந்திரன்
வானோன் = வானில் இருக்கும்
வழிவரு = வழியில் வந்த
மைந்தா = மைந்தனே
முறையேயோ = இது முறையா ?
தீமைசெய் தாய்போற் = தீமை செய்தால் போல
செங்கை = சிவந்த கைகளை
குறைத்தாய் = குறைத்தவனே
முறையேயோ = முறையோ
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.
என்ற இந்த கடைசி வரிக்கு ஒரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது.
முன்பொரு காலத்தில் ஒரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் நகர் வலம் வரும் போது ஒரு மறையவன் வீட்டின் வாசலில் , நடு இரவு நேரத்தில் பேச்சு சத்தம் கேட்டது. என்ன என்று , மாறு வேடத்தில் இருந்த மன்னன் ஓட்டு கேட்டான்.
அந்த வீட்டின் பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்
"நீங்கள் ஊரை விட்டுப் போய் திரும்பி வர கொஞ்ச நாள் ஆகும். எனக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது. நானும் உங்கள் கூடவே வந்து விடுகிறேன் " என்று கூறிக் கொண்டிருந்தாள்.
அதற்கு அந்த மறையவன் " ஒன்றும் பயப்படாதே....பாண்டிய மன்னன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை , நமக்கு ஒரு தீங்கும் வராது " என்று சொல்லி அவளை தேற்றிக் கொண்டிருந்தான்.
மன்னனுக்கு பெருமிதம். " அடடா, நம் மக்கள் நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்" என்று மகிழ்ந்து சென்றான்.
அன்றிலிருந்து தினமும் அவள் வீட்டை , மாறு வேடத்தில் வரும் போது கவனித்து வந்தான்.
அப்படி இருக்கும் போது ஒரு நாள், திடீரென்று அந்த வீட்டில் இரவில் பேச்சுக் குரல் கேட்டது.
மன்னனுக்கு சந்தேகம். கணவன் வெளியூர் போயிருக்கிறான். ஆண் குரல் கேட்கிறது. யாராக இருக்கும் என்று என்று சந்தேகப் பட்டு, வீட்டின் கதவை தட்டினான்.
"யாரது " என்று குரல் கேட்டது. கேட்டது யாரும் அல்ல, அந்த பெண்ணின் கணவன். போன காரியம் முடிந்து விட்டதால் கொஞ்சம் சீக்கிரம் ஊர் திரும்பி விட்டான்.
மன்னனுக்கு தர்ம சங்கடம். உள்ளே போனால், ஒரு வேளை அந்த வேதியன் தன் மனைவியை சந்தேகப் பட்டு விடுவானோ என்று பயந்து, வேக வேகமாக அங்கிருந்து விலகினான். போகிற வழியில் அங்குள்ள எல்லா வேதியர் வீட்டின் கதவையும் தட்டி விட்டு சென்றான்.
மறு நாள் , வேதியர்கள் எல்லோரும் அரண்மனை வந்து, மன்னனிடம் முறையிட்டார்கள். "மன்னா, யாரோ தெரியவில்லை, நடு இரவில் எங்கள் வீட்டின் கதவை தட்டுகிறார்கள் " என்று முறையிட்டார்கள்.
அப்போது மன்னன், "சரி, அவனை பிடித்து விடலாம். பிடித்தால் அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது " என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் "இப்படி நள்ளிரவில் வந்து மற்றவர்கள் வீட்டின் கதவை தட்டிய அவன் கையை வெட்டி விட வேண்டும் " என்று கூறினார்கள்.
மன்னவனும் , "அப்படி தட்டியது வேறு யாரும் அல்ல, நான் தான் " என்று கூறி, தன் கையை தானே வெட்டிக் கொண்டான்.
நீதி என்றால் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த மன்னன் அவன்.
அவன் வழியில் தோன்றிய மன்னா, உன் நாட்டில் இப்படி நடக்கலாமா , இது முறையா என்று இந்த வேதியன் முறையிட்டான்.
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.
தீமை செய்யவில்லை. செய்தால் போல சிவந்த கைகளை குறைத்தாய் என்று முன்பு நடந்ததை நினைவு படுத்துகிறான்.
நீதி பரிபாலனம் நாட்டில் அப்படி இருந்தது.
மக்களை , கண்ணை இமை காப்பது போல மன்னர்கள் காத்தார்கள்.
தவறு , தானே செய்திருந்தாலும், தண்டனை கொடுத்துக் கொண்டார்கள்.
அடுத்து என்ன நடந்தது ?
No comments:
Post a Comment