பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும்
சுந்தரர் திருமணத்துக்கு தயாராக இருக்கிறார். அப்போது , சிவ பெருமான், ஒரு முதிய அந்தணன் வடிவில் வந்து , "நீ எனது அடிமை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது. என் பின்னே வா " என்று அழைக்கிறார். அதனால் கோபம் கொண்ட சுந்தரர் "ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆகும் வழக்கம் உண்டா. நீ என்ன பித்தனா " என்று கேட்கிறார்.
அதுவரை முந்தைய ப்ளாகுகளில் பார்த்ததோம்.
சுந்தரர் , "நீ பித்தனா?" என்று கேட்டவுடன் சிவ பெருமான் சொல்கிறார்
"நான் பித்தனோ, பேயனோ ..நீ என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். உனக்கு என்னைப் பற்றித் தெரியாது. சும்மா வள வள என்று பேசிக் கொண்டிருக்காதே. புறப்படு , நிறைய வேலை இருக்கிறது உனக்கு செய்ய " என்றார்.
பாடல்
‘பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்;
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம்; பணி செய வேண்டும்’ என்றார்.
பொருள்
‘பித்தனும் ஆகப் = பித்தன் என்றாலும் சரி
பின்னும் பேயனும் ஆக, = பேயன் ஆகவும் இருந்து விட்டுப் போகிறேன்
நீ இன்று = நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் = எத்தனை தீய வார்த்தைகளால் என்னை நிந்தித்தாலும்
யாதும் மற்று அவற்றால் நாணேன்; = அதுக்கெல்லாம் நாம் வெட்கப் பட மாட்டேன்
அத்தனைக்கு = அனைத்துக்கும் மேலாக
என்னை ஒன்றும் அறிந்திலை = நீ என்னை அறிய மாட்டாய்
ஆகில் = எனவே
நின்று = இங்கே வெட்டியாக நின்று கொண்டு
வித்தகம் பேச வேண்டாம்; = எல்லாம் தெரிந்தவர் போல பேச வேண்டாம்
பணி செய வேண்டும்’ = எனக்கு நீ பணி செய்ய வேண்டும்
என்றார். = என்று கூறினார்
எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், சுவர்க்கம் போக வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.
"சரி, கிளம்புங்கள் போவோம் " என்று கூறினால், எத்தனை பேர் அப்படியே கிளம்பி வருவார்கள்.
"இப்ப எப்படி வர முடியும்...பிள்ளைகளை தனியா விட்டு விட்டு எப்படி வர முடியும் ? அதுகளுக்கு ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்" என்பார்கள்.
அப்புறம் கொஞ்ச நாள் கழித்து "சரி , இப்போது தான் பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடித்து வாழ்வில் வழி கண்டு விட்டார்களே, கிளம்பலாமா ?" என்று கேட்டால் ..."ஐயோ, வயதான பெற்றோரை எப்படி விட்டு விட்டு வர முடியும்? அது மட்டும் அல்ல, நான் இல்லா விட்டால் என் கணவன் / மனைவி தனியா என்ன செய்வார்/செய்வாள் ..." என்று தட்டிக் கழிப்பார்கள்.
யாருக்கும் இதை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சொல்வது என்னவோ இறைவன் திருவடி, சுவர்க்கம் என்று.
இறைவன் நேரில் வந்து, "கிளம்பு என்னோடு" என்று கூப்பிட்டார். சுந்தரர் போகாதது மட்டும் அல்ல...அப்படி கூப்பிட்ட இறைவனை ஏசவும் தலைப் படுகிறார்.
சரி, இந்த சுவர்க்கம், இறைவன் திருவடி என்று சொல்கிறார்களே, ஒரு வேளை அங்கு போய் சேர்ந்து விட்டால், அப்புறம் என்ன செய்வது ? எந்நேரமும் பாட்டு, பஜனை, இறைவனை பார்த்துக் கொண்டே இருப்பது ...இது தானா வேலை. சலித்துப் போகாதா. எவ்வளவுதான் சுவையாக இருந்தாலும் , எவ்வளவு சர்க்கரை பொங்கல் சாப்பிட முடியும், எவ்வளவு பாயசம் குடிக்க முடியும்.
சொர்க்கம் என்பது சோம்பேறிகளின் இருப்பிடமா ? ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு , நடனமாடும் பெண்களை சைட் அடித்துக் கொண்டு இருப்பது தான் வேலையா? சரி, ஆண்களுக்காவது சில பல அழகாகன பெண்களை பார்த்து இரசிக்கலாம்...பெண்கள் பாவம் என்ன செய்வார்கள் ?
சுவர்க்கம் என்பது அது அல்ல. இறைவன் திருவடி என்றால் சும்மா போய் உட்கார்ந்து இருப்பது அல்ல.
வேலை செய்வது. பணி செய்வது.
என்ன பணி, யாருக்குப் பணி?
நல்ல வேலை, நல்லவர்களுக்கு வேலை செய்வது.
வேலை செய்வது ஒன்று தான் சுவர்க்கம். அது தான் இறைவன் திருவடி.
சுந்தரரிடம் , சிவன் சொன்னது அது தான். "வா சொர்கத்துக்ப் போகலாம் " என்று சொல்ல வில்லை. "வா , வேலை இருக்கிறது " என்றார்.
மணிவாசகர் சொல்லுவார் " எது எமை பணி கொள்ளுமாறு, அது கேட்போம் " என்று.
அதாவது, "இறைவா, எங்களுக்கு ஏதாவது வேலை கொடு. நீ என்ன வேலை கொடுத்தாலும் அப்படியே செய்கிறோம்" என்கிறார்.
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
"அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே "
என்பார் தாயுமான சுவாமிகள்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே " என்பார் அப்பரடிகள்.
எங்களுக்கு எதாவது சின்ன சின்ன வேலைகள் கொடு என்று ஆண்டாள் , கண்ணனிடம் வேண்டுகிறாள் "குற்று ஏவல் எங்களை கொள்ளாமல் போகாது "
ஏவல் = ஏவுதல். அதைச் செய், இதைச் செய் என்று ஏவுதல்.
சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
சுவர்க்கம், இறைவன் திருவடி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
பணி செய்து பழகுங்கள். அங்கே போனாலும் அது தான் செய்ய வேண்டி வரும்.
பணி செய்யுங்கள். பணிந்து செய்யுங்கள். அதுவே இறைவனை அடியும் வழி.
சுந்தரர் போனாரா ?
https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post.html
பணி செய்வது என்பது நல்ல வேலை செய்து. சரிதான்.
ReplyDeleteஆனால், நல்ல வேலை என்பது என்ன? சும்மா இறைவன் பாடலை பஜனை செய்வதா?!?!?
(பின்குறிப்பு - பெண்களும் ஆண்களை சைட் அடிக்கலாம். அதை மறுத்து, அவர்களின் இயற்கைத்தனத்தை ஒடுக்க வேண்டாம்!)