Saturday, December 29, 2018

திருப்பாவை - தீயினில் தூசாகும்

திருப்பாவை - தீயினில் தூசாகும் 



நாம் பல நல்ல காரியங்களை செய்ய முனையும் போது ஏதோ ஒரு தடங்கல் வந்து சேர்த்திருக்கும். ஏதோ ஒண்ணு தட்டிப் போகும். இது நமக்கு மட்டும் நடப்பது அல்ல.

நாள், கிழமை, முகூர்த்தம் எல்லாம் பார்த்து, வசிட்டன் குறித்த பட்டாபிஷேகமே இராமனுக்கு தட்டிப் போனது என்றால் நம் ஊரு பஞ்சாங்கம், ஜோசியம் எல்லாம் என்ன செய்வது.

முடி சூட்டு தள்ளிப் போனது போகட்டும், இருக்கிற எல்லாவற்றையும் இழந்து, மர உரி உடுத்து, காட்டுக்குப் போனான். நாள் குறிக்கச் சொன்ன தசரதன் மாரடைப்பால் மாண்டு போனான்.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ? இதற்கு என்ன காரணம் ?

ஆண்டாள் கூறுகிறாள் பதில்.

எல்லாம் வினை.

தசரதன் செய்த வினை. யானை என்று நினைத்து ஷ்ரவணன் என்ற அந்தணப் பையனை கொன்றதால் வந்த வினை.

"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்பான் இலக்குவனிடம் இராமன்.

விதி. செய்த வினை.

கோபியர்கள் குளிக்கும் போது அவர்கள் ஆடைகளை கவர்ந்து அவர்களை சங்கடப் படுத்தியதால், பின்னொரு நாள் ஆற்றில் குளிக்கும் போது தன் கீழ் ஆடை  ஆற்றில் போக தவித்து நின்றான் கண்ணன். அவன் செய்த வினை.

அப்படி ஆற்றில் தவித்து நின்ற கண்ணனுக்கு தன் சேலையில் இருந்து ஒரு முழத்தை கிழித்து கொடுத்து மானம் காப்பாற்றினாள் பாஞ்சாலி. பின்னொரு நாள் அவளுக்கு சபையில் சேலை பறி போகும் போல் இருந்த போது , முழ சேலைக்கு பதிலாக கோடி கோடியாக சேலை கொடுத்தான் கண்ணன். அது அவள் செய்த நல் வினை.


விதி யாரையும் விடாது.

அப்படி என்றால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா? எல்லாம் விதி விட்ட வழி தானா என்றால், இல்லை. அந்த விதியையும் மாற்றலாம் என்கிறாள் ஆண்டாள்.

செய்த வினை, செய்கின்ற வினை எல்லாம் தீயில் போட்ட தூசு போல இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்கிறாள்.

அதுக்கு என்ன செய்ய வேண்டும் ?

பாடல்


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


பொருள்



மாயனை   = மாயங்கள் செய்பவனை

மன்னு வடமதுரை மைந்தனைத்  = என்றும் இருக்கும் வட மதுரையின் மைந்தனை



தூய பெருநீர் யமுனைத் துறைவனை   - தூய்மையான நீரைக் கொண்ட யமுனை ஆற்றின் துறையில் உறைபவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்  - ஆயர் குலத்தில் தோன்றும் அழகிய விளக்கை


தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் - தான் பிறந்ததால் தாய்க்கு பெருமை தேடித் தந்தவனை

தூயோமாய்  - தூய்மை உடையவர்களாய்

வந்து நாம் = நாம் வந்து

தூமலர்தூ வித்தொழுது = மலர் தூவி தொழுது

வாயினால் பாடி = வாயினால் பாடி

மனத்தினால் சிந்திக்கப் = மனதில் சிந்திக்க

போய பிழையும் = முன்பு செய்த பாவங்களும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது செய்த பாவங்களும்

தீயினில் தூசாகும் = தீயில் போட்ட துரும்பு போல் ஆகும்

செப்பேலோர் எம்பாவாய். = சொல்லுவாய் என் பாவையே


இறைவனைத் தொழுதால் முன்பு செய்த பாவங்களும், இப்பிறவியில் செய்த பாவங்களும் தீயில் போட்ட தூசு போல எரிந்து சாம்பலாகும்.

அட, இது ரொம்ப easy யா இருக்கே. செய்றதெல்லாம் செஞ்சிட்டு, இறைவனை தொழுதால் போதுமா ? எல்லா பாவங்களும் போயிருமா ? அப்படினா இன்னும் கொஞ்சம் பாவம் செஞ்சிட்டு ஒண்ணா போய் தொழுதுருவோம்...அப்படின்னு சில பேர் நினைக்கலாம்.

தொழுவதற்கு ஆண்டாள் சில நிபந்தனைகள் வைக்கிறாள்.

முதலில் "தூயோமாய்".

செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி, இனி செய்வது இல்லை என்று உறுதி பூண்டு, மனதில் கூட பாவங்களை நினையாமல் இருக்க வேண்டும். அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அது முதல் நிபந்தனை.

இரண்டாவது, நம்ம கிட்ட நிறைய பணம் இருக்கு. சில பல இலட்சங்களை உண்டியலில் போட்டு விட்டால் போதுமா ? ஒரு வைர கிரீடம், ஒரு தங்க சங்கிலி, ஒரு tube light வாங்கிப் போட்டு விட்டால் போதுமா ? பணம் எல்லாம் நடக்காது. இறைவன் எளிமையை விரும்புபவன்.

"ஏழை பங்காளனை பாடேலோர் எம்பாவாய் "

என்பார் மணிவாசகர். ஏழையிடம் பங்கு போட என்ன இருக்கிறது, வறுமையைத் தவிர ?

ஆண்டாள் சொல்கிறார், "தூ மலர் தூவி"

மலர் போதும். பணம் காசு வேண்டாம்.

"வாயினால் பாடி" - வாயால் தான் பாட முடியும். அது என்ன வாயினால் பாடி ?  பொறுங்கள். அடுத்த வரியையும் சேர்த்து பார்த்துவிடலாம்.

"மனதினால் சிந்திக்க"

மனம் + வாக்கு + காயம் என்பார்கள். திரிகரண சுத்தி.

பூ போடுவது - கை - உடல்

பாடுவது = வாய்

சிந்திப்பது = மனம்

மூன்றும் ஒன்றாக செயல் பட வேண்டும்.


கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார். ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றாகி வணங்கினால்

'போய பிழை" = முன்பு செய்த பிழையும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது வந்து நிற்கும் பிழைகளும்

தீயில் தூசாகும்.

ஏன் தீயில் தூசாகும் ? ஏன் நீரில் கரைந்து போகும் என்று சொல்லவில்லை ?

நீரில் கரைந்தாலும் அது நீர் வற்றிய பின் எது கரைந்ததோ அது மீண்டும் தெரியும்.

தீயில் விட்டு பொசுக்கி விட்டால் இருந்த இடம் தெரியாமல் போகும்.

"அவன் தாள் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே "

என்பார் அருணகிரிநாதர்.

தலை எழுத்து மாறும். செய்த வினை அழியும்.

செய்து பாருங்கள். ஆண்டாள் என்ன பொய்யா சொல்லப் போகிறாள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_29.html

1 comment: