Wednesday, February 13, 2019

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க 


நரை வந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்? முதல் நரை கண்டவுடன் நமக்கெல்லாம் தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கும். அதை யாருக்கும் தெரியாமல் பறித்து எறிந்து விடுவோம். அப்புறமும் அது வந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு வயதாவதை கட்டியம் கூறும் அது.

கம்பர் நரை முடிக்கு ஒரு பாடலே எழுதி இருக்கிறார். தசரதன் காதின் ஓரம் ஒரு நரை முடி கண்டான். மறு வினாடி , நாட்டை இராமனுக்கு கொடுத்து விட்டு கானகம் போக முடிவு செய்தான். கொஞ்சம் வெட்டி விடுவோம். கொஞ்சம் டை அடித்துக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. வயதாவதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று.

அதற்கு அவர் சொன்னார் "என் மனைவியும் பிள்ளைகளும் மாண்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரில் உள்ள மற்றவர்களும், அரசனும் அறம் பிறழாமல் வாழ்கிறார்கள். அறிவு நிறைந்த சான்றோர் அடக்கத்துடன் இருக்கிறார்கள் என் ஊரில். எனவே எனக்கு முடி நரைக்கவில்லை" என்றார்

பாடல்

யாண்டுபல  வாக  நரையில  வாகுதல்
யாங்கா  கியரென  வினவுதி  ராயின்
மாண்டவென்  மனைவியொடு  மக்களு  நிரம்பினர்
யாண்கண்  டனையரென்  னிளையரும்  வேந்தனும்
அல்லவை  செய்யான்  காக்கு  மதன்றலை
ஆன்றவிந்  தடங்கிய  கொள்கைச்
சான்றோர்  பலர்யான்  வாழு  மூரே.

கொஞ்சம் கடினமான பாடல் தான்.

சீர் பிரித்தால் எளிமையாக இருக்கும்.

ஆண்டு  பலவாக நரை இல  ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்ட அனையர் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.


பொருள்

ஆண்டு = வருடங்கள்

பலவாக = பல கழிந்தாலும்

நரை இல = நரை இல்லாமல்

 ஆகுதல் = இருப்பது

யாங்கு = எப்படி

ஆகியர் = ஆகினாய்

என  = என்று

வினவுதிர் = கேட்பீர்கள்

ஆயின் = ஆனால்

மாண்ட = மாட்சிமை பொருந்திய

என் மனைவியோடு = என் மனைவியோடு

மக்களும் = பிள்ளைகளும்

நிரம்பினர் = நிரம்பி இருந்தனர். மாட்சிமை பொருந்தி விளங்கினார்கள்

யான் கண்ட = நான் பார்த்த

அனையர்  = அனைவரும்

இளையரும் = இளையவர்களும்

வேந்தனும் = அரசனும்

அல்லவை = நல்லது அல்லாததை

செய்யான் = செய்யாமல்

காக்க = காப்பாற்றி வந்தார்கள்

அதன்தலை = அது மட்டும் அல்ல

ஆன்று  = நிறைந்து

அவிந்து = பணிவுடன்

அடங்கிய = அடக்கமான

கொள்கைச் = கொள்கையை கொண்ட

சான்றோர் = பெரியவர்கள்

பலர் = பலர்

யான் வாழும் ஊரே = நான் வாழும் ஊரில் இருக்கிறார்கள்

எனவே எனக்கு வயதே ஆகவில்லை என்கிறார்.

மனிதனுக்கு கவலையால் வயதாகிறது.

சிறந்த மனைவி. நல்ல பிள்ளைகள். செங்கோல் செலுத்தும் அரசன். அடாவடி பண்ணாத  ஊர் மக்கள். நல்லதை எடுத்துச் சொல்லும் பெரியவர்கள் இருந்தால் ஏன் கவலை வருகிறது. ஏன் முதுமை வருகிறது.

நமக்கு முதுமை வந்திருக்கலாம். நம்மால் மற்றவர்களுக்கு முதுமை வராமல் இருக்க  என்ன செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

சிறந்த மனைவியாக, கணவனாக இருக்க முடியுமா ?

நல்ல பிள்ளையாக இருக்கும் முடியுமா ?

நாம் செய்யும் வேலையை (அரசன்) திறம்பட செய்ய முடியுமா ?

நாளும் அறிவைப் பெருக்கி நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வை வாழ முடியுமா ?

மண்டை கனம் இல்லாமல், அடக்கமாக இருக்க முடியுமா ?

என்று சிந்திப்போம்.

நல்லது தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_13.html


3 comments:

  1. என் தலை முற்றும வெள்ளையாகி விட்டது. இருப்பினும் புலவர் பிசிராந்தையார் சொன்னபடி சான்றோர்போல பணிவுடனும் அடக்கத்துடனும் இருக்க முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எனக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல் இது. அதன் நிமித்தமாய் எனது ஓரிரு வரிகள் இங்கே:

    நரை

    ReplyDelete