குறுந்தொகை - நோமென் நெஞ்சே
வீட்டில் பிள்ளைகள் சில சமயம் சொன்ன பேச்சு கேட்காமல் ஓடி ஆடி கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக் கொண்டு வந்து நிற்பார்கள். ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் "வேணும், சொன்னா கேட்டாத்தான...இப்படி ஒரு தடவை காயம் பட்டுக்கிட்டு வந்தா தான் உனக்கு புத்தி வரும் " என்று அவர்கள் மேல் நாம் கோபம் கொள்வதும் உண்டு. என்ன தான் கோபம் வந்தாலும், பிள்ளை பாசம் போகுமா. "வா இங்க...எப்படி அடி பட்டுக்கிட்டு வந்திருக்க பாரு...பாத்து விளையாடக் கூடாதா" என்று ஆறுதலும் சொல்லுவம், அடி பட்ட இடத்துக்கு மருத்துவமும் செய்வோம்.
காதலன் அவளை விட்டு பிரிந்து விட்டான். ஒரேயடியாக இல்லை. என்னமோ கொஞ்ச நாளா பேச்சே இல்லை. அவளுக்கு வருத்தம் தாங்கவில்லை. அழுகிறாள். யாரிடம் சொல்ல முடியும் ?
அவள் நெஞ்சிடம் கூறுகிறாள்
"நல்லா அழு. இவ்வளவு கண்ணீர் விட்டு அழுதாலும் வராத காதலர் நமக்கு அமைந்திருக்கிறார். அதை நினைத்து நல்லா அழு. எனக்கென்ன " என்று தன் நெஞ்சோடு நொந்து கொள்கிறாள் அவள்.
பாடல்
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவில ராகுத னாமென் னெஞ்சே.
சீர் பிரித்த பின்
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
பொருள்
நோம் = நொந்து கொள்
என் நெஞ்சே = என் மனமே
நோம் = நொந்து கொள்
என் நெஞ்சே = என் மனமே
இமை = இமைகள்
தீய்ப்பு அன்ன = தீய்ந்து போகும் அளவுக்கு
கண்ணீர் தாங்கி = கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த = இருக்கும்படி நமக்கு கிடைத்த
நம் காதலர் = நம்முடைய காதலர்
அமைவிலர் ஆகுதல் = நமக்கு சரியாகவில்லை என்றால்
நோம் என் நெஞ்சே = நொந்துகொள் என் நெஞ்சே
சூடான கண்ணீர். அது கண்ணிலேயே தங்கி விட்டது. கண்ணீர் காயவே இல்லை. அந்த சூட்டில் கண் தீய்ந்து விடும் போல் இருக்கிறது.
என்ன அழுது என்ன பயன்? அவன் தான் வரவே மாட்டேன் என்கிறானே.
"நீ வருத்தப் பட்டுக் கொள் . வேறு என்ன செய்ய "
நம் முன்னவர்கள் உருகி உருகித்தான் காதலித்து இருக்கிறார்கள்.
அவர்களின் மரபணு நம்மிடமும் இருக்கும் அல்லவா. எங்கே போகும்?
அந்த காதல் என்ற ஜீவ நதி அன்றில் இருந்து வரை , வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண், அதனால் தான் இன்னமும் ஈரமாகவே இருக்கிறது.
அவள் அன்று அழுத கண்ணீர் இன்னமும் காயவில்லை. இந்த பிளாகின் மூலம் இன்றும் கசிந்து கொண்டே இருக்கிறது.
தமிழ் நாட்டில், ஏதோ ஒரு கிராமத்தில், என்றோ அவள் அழுத கண்ணீர், காலம் பல கடந்து, இன்று இன்டர்நெட்டில் , கண்டம் விட்டு கண்டம் போய் கொண்டிருக்கிறது.
அவள் இல்லை. அவன் இல்லை. அந்த கண்ணீர் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது.
https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_16.html
இதைப் படித்தால் அதே கண்ணீர் நமக்கும் வருகிறது! மனிதர்கள் மறையலாம், அவர்கள் உணர்வுகள் இன்னும் வாழ்கின்றனவே.
ReplyDelete