தேவாரம் - சொல்லாய் கழிகின்றது
பெரும்பாலானோர் வாழ்க்கை என்பது என்ன ?
பிறந்தார் - வளர்ந்தார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்
என்ற இந்த நான்கு செயல்களில் அடங்கி விடுகிறது. கல்யாணம் கட்டி, பிள்ளைகள் பெற்று, வேலை பார்த்து, சம்பளம் பெற்று என்று கொஞ்சம் நீட்டிக்கலாம். அவ்வளவுதான்.
பிறந்தார் - படித்தார் - வேலை பார்த்தார் - மணந்தார் - பிள்ளைகள் பெற்றார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்.
அவ்வளவுதான். 7 சொற்கள். வாழ்க்கை முடிந்து விட்டது.
வேறு ஏதாவது நடக்கிறதா?
நம் வாழ்க்கை எல்லாம் இந்த சொற்களாய் போய் விட்டது. வேறு ஒன்றும் இல்லை.
இப்படி என் வாழ்வும் போய் விடக் கூடாது. நான் இந்த சூழலில் இருந்து தப்பிக்க வழி சொல் என்று இறைவனை வேண்டுகிறார் சுந்தரர்.
"மலையில் இருந்து அகிலும், ஒளி வீசும் மணிகளையும் கலந்து வரும் ஆற்றின் கரையில் இருக்கும் நெல் வாய் என்ற ஊரில் உறைபவனே, இந்த பிறவியில் பிறந்து, வளர்ந்து, மூப்பு அடைந்து, இறந்து போகும் இந்த சூழலில் இருந்து நான் உய்ய வழி சொல்வாய்"
என்கிறார்.
பாடல்
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
பொருள்
கல்வாய் = மலை
அகிலுங் = அகில் (மணம் வீசும் மரம்)
கதிர்மா மணியுங் = கதிர் ஒளி வீசும் மணிகளை
கலந்துந் தி = கலந்து + உந்தி = கலந்து வேகமாக
வருந் = வரும்
நிவவின் = நிவா நதியின்
கரைமேல் = கரையில்
நெல்வா யில் = நெல் வாய் என்ற திருத்தலத்தில்
அரத் துறை = அரத்துறையில்
நீ டுறையும் =நீடு + உறையும் = நீண்ட நாள் இருக்கும்
நிலவெண் மதிசூ டிய = வெண்மையான நிலவை சூடிய
நின் மலனே = நிர்மலமானவனே
நல்வாயில் = நல்ல வீட்டினை
செய்தார் = கட்டினார்
நடந்தார் = நடந்தார்
உடுத்தார் = உடுத்தார்
நரைத்தார் = நரைத்தார்
இறந்தா ரென்று = இறந்தார் என்று
நா னிலத்திற் = இந்த உலகில்
சொல்லாய்க் = வெறும் சொல்லாய்
கழிகின் றதறிந் = கழிகின்றது அறிந்து
தடியேன் = அடியேன்
தொடர்ந்தே = தொடர்ந்து
னுய் யப் = உய்ய
போவ தோர் = போவது ஓர்
சூழல் சொல்லே. = வழி சொல்லேன்
இதற்கு கி வா ஜா உரை சொல்லுவார்
ஒருவன் ரொம்ப கஷ்டப் பட்டு ஒரு வீடு கட்டினான். சிறுக சிறுக சேர்த்து கட்டிய வீடு. பார்த்து பார்த்து கட்டினான்.
வீடு அருமையாக வந்து விட்டது. அவனுக்கு பெருமை தாளவில்லை. தன் வீட்டைப் பார்த்து பார்த்து பெருமிதம் கொள்கிறான்.
காலையிலும் மாலையிலும் வீட்டின் முன் புறம் நடப்பான். வருகிற போகிற ஆட்களை பார்ப்பான். முற்றத்தில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பான்.
நல்ல உடை உடுத்திக் கொண்டு வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பான்.
கொஞ்ச நாள் கழித்து வயதாகிப் போனது. அடிக்கடி வெளியே வர முடியவில்லை. படுத்த படுக்கையாகி விட்டான்.
அப்புறம் சில வருடங்களில் இறந்தும் போனான்.
இப்போது தேவாரத்தைப் படியுங்கள்.
"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்று"
வீட்டைக் கட்டி - வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து - உடை உடுத்தி - நரை பருவம் எய்தி - இறந்து போனான்.
வீடு என்பது இங்கே ஒரு உபமானம்.
வீடுதான் நம் உடம்பு. வீட்டைக் கட்டி,
நடத்தல் - படித்தல், வேலையை செய்தல் போன்றவை
உடுத்தார் - அனுபவித்தல்,மனைவி, மக்கள், சுற்றம், செல்வம் என்று கொஞ்ச நாள் அனுபவித்து
நரைத்தல் - வயதாகிப் போதல்
இறத்தல் - முடிவு
இப்படியா நம் வாழ்க்கையும் செக்கு மாடு போல இந்த வட்டத்துக்குள் சுத்தி சுத்தி வர வேண்டும்.
இதைத் தானே எல்லோரும் செய்கிறார்கள்.
பத்தோடு பதினொன்றாக நாமும் அப்படியே போக வேண்டியதுதானா .
பிறந்தான், வளர்ந்தான், இறந்தான் என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல், பயனின்றி இந்த வாழ்க்கை முடிய வேண்டுமா?
நான் உய்ய வழி சொல் என்று சுந்தரர் வேண்டுகிறார்.
நாம எப்படி?
https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_27.html
அருமை
ReplyDeleteஅற்புதமான பாடல்.
ReplyDeleteஆனால் எனக்கு என்ன பிரச்சினை என்றால், இந்த மாதிரி வாழ்க்கையில் இருந்து உய்விக்க என்ன வழி என்று கேட்டால், "இறைவனுக்கு வழிபாடு செய்" என்று சொல்லி விடுகிறார்கள். அந்தப் பதில் மிகக் குறைவுபடட பதிலாகத் தோன்றுகிறது.
மகாத்மா காந்தி, "ஏழைகளின் உருவில் என் இறைவனைக் காண்கிறேன்" என்றாராம். அது போல, ஏதோ தெரியாத இறைவனுக்கு வழிபாடு செய்வதை விட, வாழ்க்கையைத் தனக்கும் பிறருக்கும் பயனுள்ள வழியில் வாழ்வது மேல் என்று எண்ணுகிறேன் .
அறியாமை
Delete