Thursday, June 4, 2020

கம்ப இராமாயணம் - கொடும் பகை தேடிக் கொண்டாய்

கம்ப இராமாயணம் - கொடும் பகை தேடிக் கொண்டாய்


இராவணனிடம் இந்திரசித்து கூறுகிறான்..."அப்பா, சீதையை விட்டுவிடு. அப்படி விட்டுவிட்டால் இராம இலக்குவனர்கள் அமைதி அடைவார்கள். நம் மீது உள்ள கோபத்தை விடுவார்கள். பயத்தினால் அல்ல உன் மேல் உள்ள காதலினால் கூறுகிறேன் அவளை விட்டு விடு" என்றான்.

மேலும்,

"நான் (இந்திரசித்து) இலக்குவன் மேல் திருமாலின் அஸ்திரங்களை விடுத்தேன். அது மேல் உலகம்,  நில உலகம் எல்லாம் கலக்கி பின் இலக்குவனிடம் வந்து, அவனை வலம் வந்து பின் சென்று விட்டது. அதை விட வலிமையான படைகள் நம்மிடம் இல்லை. நம் குலம் செய்த பாவத்தால் பெரிய பழியை தேடிக் கொண்டாய். கோபம் வந்தால், அந்த இலக்குவன் ஒருவனே இந்த மூன்று உலகத்தையம் அழித்து விடுவான்"

என்று.

பாடல்

'நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் படை, நின்றானை
வலம் செய்து போயிற்றுஎன்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்;
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே 

பொருள்


'நிலம் செய்து = இந்த உலகம் பூராவும் சுற்றி

விசும்பும் செய்து = விண்ணுலகையும் சுற்றி

நெடிய மால் படை = உயர்ந்த திருமாலின் படை (ஆயுதங்கள்)

நின்றானை = (எதிரில்) நின்றவனை (இலக்குவனை)

வலம் செய்து போயிற்று என்றால் = சுற்றி வந்து வணங்கி விட்டு போயிற்று என்றால்

மற்று இனி வலியது உண்டோ? = அதை விட வலிய படை நம்மிடம் உண்டோ ? (இல்லை)

குலம் செய்த பாவத்தாலே = நம் குலம் செய்த பாவத்தால்

கொடும் பகை தேடிக் கொண்டாய்; = கொடிய பகையை தேடிக்  கொண்டாய்

சலம் செயின் = கோபம் வந்தால்

உலகம் மூன்றும் = மூன்று உலகங்களையும்

இலக்குவன் முடிப்பன், தானே  = தனி ஒருவனே அழித்து விடுவான்

எதிரியை துல்லியமாக எடை போட்டு இருக்கிறான் இந்திரசித்து.

அது மட்டும் அல்ல,  "இராவணா , நீ செய்கின்ற இந்த பழியால் நீ மட்டும் அல்ல, உன் குலமே  அழியப் போகிறது" என்றான்.

நாம் செய்யும் பாவங்கள் நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையே, குலத்தையே அழிக்கும்.

"ஐயோ, நான் ஒரு பாவமும் செய்ய வில்லையே...யாருக்கும் மனசு அறிந்து ஒரு  துன்பமும் செய்ய வில்லையே, எனக்கு ஏன் இந்தத் துன்பம்" என்று புலம்பும் போது , நினைக்க வேண்டும்....பெற்றோர் செய்த பாவம், குல முன்னோர் செய்த  பாவம், நம்மை வந்து  தாக்கும்.

இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்ட பலர் புலம்புகிறார்கள்.  முன்னோர் செய்த  வினை. இங்கு வந்து, இன்று வந்து மூள்கிறது.

தெய்வம் நின்று கொல்லும். அவசரப் படாது.

தவறு செய்யும் போது நினைக்க வேண்டும்.   நாம் இன்று தப்பி விடலாம். பணம் இருக்கிறது, செல்வாக்கு இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எங்கு வந்து யாரைப் பிடிக்குமோ  தெரியாது.

என்றோ யாரோ செய்த வினை, பட்டினத்தாரை கழு மரத்தில் ஏற்றியது.

"முன்பு செய்த வினைதான் இங்கு வந்து மூண்டதுவே" என்பார் பட்டினத்தார்.

யார் செய்த பிழையோ, இராமனை பதினான்கு ஆண்டு காட்டுக்கு அனுப்பியது.

"மைந்த, விதி செய்த பிழை" என்பான் இராமன்.


வருங்கால சந்ததிக்கு நல்லது செய்ய வேண்டுமா? இன்று நல்லது செய்யுங்கள்.

இன்று மாங்கன்றை நட்டால் இருபது வருடம் கழித்து பழம் தரும், பலன் தரும்.

வினை மட்டும் விட்டு விட்டா போய்விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_4.html


1 comment:

  1. 'குலம் செய்த பாவத்தாலே' என்கிற வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தம் பொதிந்து இருக்கிறது.
    கம்பர் ஒவ்வொரு வார்த்தையையும் யோஜித்து எடுத்து உபயோகித்து இருப்பது பிரமிப்பை தருகிறது..
    ஒன்றை கவனித்தீரா? குலம்,நிலம், வலம், என்கிற வார்த்தை பிரயோகங்கள் திருமங்கை ஆழ்வாரின் 'குலம் தரும்...' பாசுரத்தை நினைவூட்டுகிறது. கம்பனின் தாக்கமா அல்லது ஆழ்வாரின் தாக்கமா என்பது தெரியவில்லை.

    ReplyDelete