கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி
வாழ்க்கை என்பதே ஒரு போர் தான். போர் என்றால் கத்தி, துப்பாக்கி எடுத்துக் கொண்டு போர் முனை சென்று போர் செய்வது மட்டும் அல்ல, படித்து நல்ல மதிப்பெண் எடுப்பதும் ஒரு போர் தான், வேலையில் சம்பள உயர்வு பெற, பதவி உயர்வு பெற பாடுபடுவதும் போர் தான், கணவன்/மனைவி மன வேற்றுமைகளை வென்று எடுப்பதும் போர் தான்.
பலர் நினைப்பது உண்டு, நான் நிறைய படித்த அறிவாளி, என்னிடம் செல்வம் இருக்கிறது, ஆள், அம்பு, சேனை, அதிகாரம் எல்லாம் இருக்கிறது, நான் நினைத்தால் எதையும் வெல்வேன் என்று.
முதல் நாளில் போரில் இராவணன் எல்லாம் இழந்து நிற்கிறான். இராமன் வெற்றி பெற்று விட்டான்.
அப்போது இராமன், இராவணனைப் பார்த்துக் கூறுகிறான்
"அறம் வழியில் அல்லாது தன் திறமையால், வலிமையால் வெற்றி கொள்வது என்பது தேவர்களாலும் முடியாத ஒன்று. இதை நீ மனதில் வைத்துக் கொள். உன் ஊருக்கு திரும்பிப் போக பறக்கிறாய். போ. நான் நினைத்தால் உன்னை இப்போது கொன்று விட முடியும். நான் உன்னை கொல்ல நினைக்கவில்லை. உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது"
என்று.
பாடல்
'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_25.html
(click the above link to continue reading)
'அறத்தினால் அன்றி = அறத்தின் வழி செல்லாமல்
அமரர்க்கும் = தேவர்களுக்கும்
அருஞ் சமம் கடத்தல் = பெரிய போர்களை வெல்வது
மறத்தினால் அரிது = வலிமையால் என்பது கடினம்
என்பது = என்பதை
மனத்திடை வலித்தி; = நீ (இராவணா) மனதில் ஆழ பதிந்து கொள்
பறத்தி, = பறக்கிறாய் (அவசரப் படுகிறாய்)
நின் = உன்னுடைய
நெடும் பதி =பெரிய ஊருக்கு
புகக் = செல்ல
கிளையொடும்; = உறவினர்களோடு
பாவி! = பாவச் செயல்கள் புரிந்தவனே
இறத்தி; = இப்போது நான் நினைத்தால் நீ இறந்து போவாய்
யான் அது நினைக்கிலென், = உன்னைக் கொல்வதைப் பற்றி நான் நினைக்கவில்லை
தனிமை கண்டு இரங்கி. = உன் தனிமையை கண்டு இரக்கப்பட்டு
இந்தப் பாடலில் உள் புதைந்து கிடக்கும் அர்த்தங்கள் பல.
முதலாவது, எப்போவாவது நாம் வெற்றி பெற்றால் என்ன நினைப்போம்? என் திறமை, என் உழைப்பு, என் சாமர்த்தியம் என்று நினைப்போம். தோல்வி அடைந்தால் ? விதி, மற்றவர்களின் சூழ்ச்சி, சதி என்று மற்றவற்றின் மேல் பழி போடுவோம். இங்கே இராமன் வென்று நிற்கிறான். அவன் சொல்கிறான், "இது என் வெற்றி அல்ல. அறத்தின் வெற்றி" என்று. அந்த நிதானம் வேண்டும்.
இரண்டாவது, இராவணன் தோற்றுப் போய் நிற்கிறான். அவனிடம் திறமை இல்லாததால் அவன் தோற்கவில்லை. அவனிடம் ஏராளமான வீரம் இருக்கிறது, படை பலம் இருக்கிறது, வர பலம் இருக்கிறது. எல்லாம் இருந்தும் தோற்றான். ஏன்? "பாவி" என்கிறான் இராமன். பாவம் செய்ததால் தோற்றான். பாவம் செய்து வெற்றி பெற முடியாது.
மூன்றாவது, நமக்கு தீமை செய்த ஒருவனுக்கு தீமை நாம் திருப்பி அவனுக்கு ஒரு தீமை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் தீமை செய்யாமல் விடுவோமா? சந்தோஷமாக செய்வோம் அல்லவா? இராமன் அவ்வாறு செய்யவில்லை. இராமன் நினைத்து இருந்தால், போர் முதல் நாளிலேயே முடிந்து இருக்கும். "உன்னை கொல்ல நான் நினைக்கவில்லை" என்கிறான். அந்த பகைவனுக்கும் இரங்கும் பண்பு வேண்டும்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் , அவர் நாண நன்னயம் செய்து விடல்
என்று கூறிய மாதிரி.
ஒரு நண்பனிடமோ, கணவன்/மனைவியிடமோ ஒரு வாதத்தில் நாம் வென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம், அதை பெரிதாக்கி, "பார்த்தாயா, நான் சரி, நீ தவறு" என்று மேலும் அவர்களை வெறுப்பு ஏத்தக் கூடாது. சரி தோற்று விட்டாயா, பரவாயில்லை. நாம் அன்போடு இருப்போம் என்று இருக்க வேண்டும்.
இராவணனிடம் இராமன் அவ்வாறு இருந்தான்.
உறவுகளுக்குள் நம்மால் அவ்வாறு இருக்க முடியாதா?
கதை ஒரு புறம். கவிதை ஒரு புறம். வாழ்கை தத்துவம் இன்னொரு புறம். எவ்வளவு பெரிய பொக்கிஷம் இராமாயணம். படிப்போம். உயர்வோம்.
மிக்க அருமையான பாடல். நன்றி.
ReplyDelete