திருக்குறள் - நூல் கட்டமைப்பு
அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கில் வீடு என்பதை இலக்கண வகையால் சொல்ல முடியாது என்பதால் அதை நேரடியாக சொல்லவில்லை என்று பார்த்தோம்.
திருக்குறளின் கட்டமைப்பிலே இன்னும் இரண்டு செய்திகள் விடுபட்டுப் போய் விட்டன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
வாழ்வின் நான்கு கூறுகளான பிரமச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம் என்ற நான்கு இருக்கிறதே அதில் வள்ளுவர் இல்லறம் மற்றும் துறவறம் மட்டும் தான் எடுத்துக் கொள்கிறார்.
ஏன்?
மற்ற இரண்டும் கிடையாதா என்றால்,
பிரமச்சரியம் என்பது இல்லறத்தின் ஒரு கூறு, அது போல வானப்ரஸ்தம் என்பது துறவறத்தின் ஒரு கூறு என்பதால், நான்கான அறங்களை இரண்டாக சுருக்கிக் கொள்கிறார் வள்ளுவர்.
அடுத்தது, குறளின் கட்டமைப்பிலே முதலில் பால் என்ற பிரிவு (அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால்) உள்ளது.
அதற்குக் கீழே, இயல் என்ற பிரிவு இருக்கிறது. அறத்துப் பாலில் இல்லறவியல், துறவறவியல் என்று இரண்டு இயல்கள்.
நூல் தொடங்கிய பின், நூலுக்கு முன்னுரை எழுத வேண்டும். பாயிரம் என்பது மிக முக்கியமான ஒன்று. வள்ளுவர் பாயிரம் எழுதி இருக்கிறாரா?
வள்ளுவர் தனியே பாயிரம் எழுதவில்லை. முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரவியல் என்று சொல்லிவிட்டார்.
அதாவது, திருக்குறளுக்கு முன்னுரையாக நான்கு அதிகாரங்கள்.
அவையாவன
- கடவுள் வாழ்த்து
- வான் சிறப்பு
- நீத்தார் பெருமை
- அறன் வலியுறுத்தல்
என்ற நான்கும்.
இந்த நான்கு அதிகாரங்களும் குறளுக்கு முன்னுரை அல்லது பாயிரம்.
அந்தப் பாயிரவியலில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் முதல் குறளுக்கு கொஞ்சம் அர்த்தம் நேற்று சிந்தித்தோம்.
மேலும் சிந்திக்க இருக்கிறோம்.
இந்த செய்தி விட்டுப் போய் விட்டதால், நடுவில் இதைக் சொல்ல வேண்டி இருந்தது.
நாளை, குறளை தொடர்வோம்.
No comments:
Post a Comment