திருக்குறள் - அன்பிலதனை அறம்
அன்பு செய்ய வேண்டும் என்பது கட்டாயமா? அன்பு செய்யாவிட்டால் என்ன? எவ்வளவு அன்பு செய்தாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இவர்கள் மேல் அன்பு செய்து என்ன பலன்? பேசாமல் நம்ம வேலையை பார்த்துக் கொண்டு போகலாம்.
திருப்பி அன்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாம் செய்யும் அன்புக்கு களங்கம் கற்பிக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். உலகில் அன்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. எல்லாமே ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத் தான் நடக்கிறது. எல்லாம் வியாபாரம். பண்டமாற்றாக இருக்கிறது....
என்று நமக்கு ஒரு அலுப்பு தோன்றலாம்.
என்னத்துக்கு அன்பு செய்வானேன்...பின் வருந்துவானேன்...சும்மா இருந்துவிட்டுப் போகலாம் என்று தோன்றும்.
ஆனால், வள்ளுவர் சொல்கிறார், அன்பு செய்ய வேண்டியது கட்டாயம் என்று. அன்பு செய்யாவிட்டால் அதற்கு தண்டனை உண்டு என்கிறார். ஆங்கிலத்தில் fine / penalty என்று கூறுவார்களே அது போல அன்பு செய்யாவிட்டால் தண்டனை உண்டு.
யார் தண்டிப்பார்கள்? குறளை வாசிப்போம்.
பாடல்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_12.html
(Please click the above link to continue reading)
என்பி லதனை = என்பு + இல் + அதனை = எலும்பு இல்லாத அதை
வெயில்போலக் காயுமே =வெயில் எவ்வாறு வருத்துமோ
அன்பி லதனை அறம் = அன்பு + இல் +அதனை = அன்பு இல்லாத அதை அறம்
பரிமேலழகர் துணை இல்லாமல் புரிந்து கொள்வது கடினம்.
உடம்பு, உயிர் என்று இரண்டு இருக்கிறது அல்லவா?
இதில் எதற்கு எலும்பு இருக்கும்? உடம்புக்கா? உயிருக்கா?
உடம்புக்கு எலும்பு இருக்கும். உயிருக்கு எலும்பு இல்லை.
எலும்பு இல்லாத உடலை வெயில் எப்படி காயுமோ, அது போல அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் தண்டிப்பார் என்கிறார் பரிமேலழகர்.
அன்பு செய்வது எது ? உடலா? உயிரா?
உயிர்தானே அன்பு செய்யும். உயிர் போய் விட்டால் உடம்பு அன்பு செய்யுமா? அல்லது நம்மால்தான் உயிரில்லாத உடல் மேல் அன்பு செய்ய முடியுமா?
உயிரின் வேலை அன்பு செய்வது. அதன் கடமை. அந்தக் கடமையில் இருந்து அது தவறினால், அறக் கடவுள் அந்த உயிரை தண்டிப்பார்.
உயிரின் இயற்கைக் குணம் அன்பு செய்வது. நாம் முயற்சி செய்து அந்த அன்பை கட்டுப்படுத்துகிறோம்.
வெயில் எதற்கு வருகிறது? உலகில் உள்ள மக்களை சுட்டு எரிக்க வேண்டும் என்றா வருகிறது? இல்லை. அது பாட்டுக்கு வருகிறது. நாம் வெயிலில் போய் அலைந்து திரிந்து விட்டு, "சீ, இந்த வெயில் என்னமா சுடுது...வறுத்து எடுக்கிறது, மண்டையைப் பிளக்கிறது" என்று வெயிலை குறை கூறுகிறோம். நம்மை வெளியில் வா என்று வெயில் அழைத்ததா? இல்லையே? நாமே வெளியில் போய் சூடு வாங்கிக் கொண்டு வருகிறோம்.
அது போல, அறக் கடவுள் நம்மை தண்டிக்க கிளம்பி வர மாட்டார். நாமே போய் தண்டனை அடைவோம். அன்பு செய்யாவிட்டால், தண்டனை தானே நிகழும்.
"ஐயோ, நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்தத் துன்பம்" என்று நினைத்தால், எங்கோ அன்பு செய்யாத குற்றத்திற்கு கிடைத்த தண்டனை அது என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
துன்பத்தை நாமே வலிய சென்று வாங்கி வருவோம். வெயிலில் அலைந்து துன்பப் படுவது போல.
துன்பத்தில் இருந்து தப்ப வேண்டுமா?
அன்பு செய்வது ஒன்றுதான் வழி.
என்ன ஒரு சிந்தனை !
No comments:
Post a Comment