ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம்
கவிதை என்பது ஒரு அனுபவம். அதை அனுபவித்துத் தான் அறிய முடியும். சொல்லி விளங்க வைக்க முடியாது.
ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உரை சொல்லி விடலாம். எல்லா சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து விட்டால், கவிதை புரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல.
ரோஜா மலரின் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாக பியித்து பியித்து பார்த்தால் இறுதியில் காம்புதான் மிஞ்சும்.
ஒரு குழந்தையின் அழகு எங்கே இருக்கிறது? அதன் கண்ணிலா? மூக்கிலா? என்று தேடக் கூடாது.
சொல்லின் அர்த்தம் தெரியாமல் அழகு புரியுமா என்றால் புரியாதுதான். ஆனால், சொல்லின் அர்த்தம் மட்டும் அல்ல கவிதையின் அழகு.
பலபேர் சொல்லின் அர்த்தத்தோடு நின்று விடுகிறார்கள்.
எந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்? இதுவா அர்த்தம்? அது கூட சரியாக வரும் போல் இருக்கிறதே? அப்படிச் சொன்னால் என்ன? என்று சொல்லுக்குள் நின்று விடுகிறார்கள்.
பாடல்
இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்
மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்
நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ
தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_7.html
(Please click the above link to continue reading)
இலக்கணக் கவிஞர் = நெறிமுறை அறிந்த கவிஞர்கள்
சொல்லின்பம் தேடுவர் = சொல்லின் இன்பத்தைத் தேடுவார்கள்
மலக்கும் சொல் = மயக்கும் சொற்களை
தேடுவர் வன்க ணாளர்கள் = தேடுவார்கள் கீழானவர்கள்
நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டத் = நிலத்தில் உள்ள வண்டு நீரில் உள்ள கமலத்தை (தாமரையை) நாடி அதில் உள்ள தேனை அனுபவிக்கும்
ஈ = வண்டு
தலைக்குறை = முதல் குறைந்த
கமலத்தைச் = கமலத்தை
சாரும் தன்மைபோல் = தேடுவதைப் போல
ஔவையார் குசும்பு.
தலைக்குறை என்றால் தலை இல்லாத. அல்லது தொடக்கம் இல்லாத.
கமலம் - இதில் முதல் எழுத்து இல்லை என்றால்?
மலத்தை தேடும் ஈ போல என்று அர்த்தம்.
வார்த்தைகளை விட்டுவிட வேண்டும். அர்த்தத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
என்னைக் கேட்டால், கவிதையின் அர்த்தத்தையும் விட்டுவிடலாம். கவிஞனின் மனதை, அவன் உணர்சிகளை பிடிக்க வேண்டும்.
அபிராமி பட்டர் சொல்லுவார்
"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" என்று அபிராமியை.
மூப்பு இல்லாத முகுந்தனுக்கு இளையவள் என்றால் என்ன அர்த்தம் என்று மண்டையை போட்டு கசக்கக் கூடாது.
அவருக்கு, அவள் எப்போதும் இளமையானவள். அவளுக்கு வயதே ஆகாது. அதை எப்படியோ சொல்கிறார். வார்த்தைகளை தாண்டி உணர்சிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அது தான் சொல்லின் இன்பம்.
மனைவி செய்த சமையலின் சுவை அவள் தரும் உணவில் இல்லை. அதை நமக்காக நேரம் செலவழித்து, பொறுமையாக, ஒவ்வொரு பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்யும் கனிவில் இருக்கிறது. அந்த அன்பு மனம் புரிந்தால் சமையல் சுவைக்கும். இதில் உப்பு இல்லை, அதில் காரம் கூட இருக்கிறது என்று சொல்லுவது அந்த ஈயை போன்ற செயல்.
அப்பா அல்லது அம்மா, பிள்ளையைத் திட்டுகிறார்கள். சொல்லின் அர்த்தத்தைக் கொண்டா அதைக் கணிப்பது. நாம் நன்றாக வேண்டும் என்ற காதலில் அல்லவா திட்டுகிறார்கள் என்ற அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கவிதையை புரிந்து கொள்ள முயல்வதெல்லாம் ஒரு வாழ்க்கைப் பயிற்சி.
புன்முறுவல் வரவழைக்கும் கவிதை! நன்றி
ReplyDelete