திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர்
ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்ப்போம்.
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதுவரை என்ன செய்தோம்?
அதே சாப்பாடு, அதே தூக்கம், அதே வேலை, அதே அரட்டை, அதே உறவுகள், அதே உடை...
அங்கொன்றும் இங்கொன்றும் ஏதோ புதிதாக வரலாம்...நாளடைவில் அதுவும் பழசாகி விடும். இதில் ஒரு அலுப்பு வரவில்லை நமக்கு.
ஒரு தளர்ச்சி வரவில்லை.
ஏன் இதை திருப்பி திருப்பி செய்து கொண்டிருக்கிறோம்? என்ன சாதிக்கப் போகிறோம்? என்ன கிடைத்தது இதுவரை.
நமக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ புதிதாக இருப்பது போல இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக யோசித்தால் தெரியும், ஒரு புதுமையும் இல்லை என்று. நாம் யோசிப்பது இல்லை.
மறந்து விடுகிறோம்.
மணிவாசகர் இன்னும் ஆழமாக யோசிக்கிறார். நேற்று, போன மாதம், போன வருடம் என்று இல்லாமல், இப்படி பிறந்து, வளர்ந்து, இறந்து, பிறந்து என்று போய்க் கொண்டே இருக்கிறதே, இதற்கு ஒரு முடிவு, எல்லை இல்லையா என்று தளர்கிறார்.
"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார்.
"தளர்ந்தேன் என்னை தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார். என்னால் முடியவில்லை, என்னைக் தூக்கிக் கொள் என்று குழந்தை தாயயைப் பார்த்து கெஞ்சுவதைப் போல, கெஞ்சுவார்.
சரி, இதை விட்டு விட்டு என்ன செய்வது? எப்படி செய்வது? நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த சாப்பாடு, தூக்கம், அரட்டை, டிவி, கை பேசி, இவ்வளவு தான். வேறு என்ன செய்வது?
அதையும் அவரே சொல்கிறார் ....
"புலன்கள் பின்னால் போவதை விடுங்கள். இறைவன் திருவடியை நினையுங்கள். யார் என்ன சொன்னாலும், சிரித்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நமக்கு உதவி செய்ய இறைவன் காத்துக் கிடக்கிறான். அவன் திருவடியை நினைந்தால் நம் தளர்ச்சி எல்லாம் நீங்கும்" என்கிறார்.
இறைவன் நமக்கு உதவி செய்ய வருகிறானாம். அப்போது மற்றவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து கேலி செய்கிறார்களாம். "அவனுக்கு போயா உதவி செய்யப் போகிறாய்...அவன் ஒண்ணுக்கும் உதவாதவன், அவனுக்கு உதவி செய்வதும் ஒண்ணு தான் உதவி செய்யாமல் இருப்பதும் ஒண்ணு தான்..." என்று இறைவனை கேலி செய்வார்களாம். இருந்தும், அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல், அவன் நமக்கு உதவி செய்ய வருகிறான் என்கிறார்.
பாடல்
புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே உடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_10.html
(click the above link to continue reading)
புகவே வேண்டா = நுழைய வேண்டாம்
புலன்களில்நீர் = நீங்கள் புலன்கள் செல்லும் வழியில்
புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த பெருமாள்
பூங்கழல்கள் = திருவடிகளை
மிகவே நினைமின் = எப்போதும் நினையுங்கள்
மிக்கவெல்லாம் வேண்டா = மத்தது எல்லாம் வேண்டாம்
போக விடுமின்கள் = போகட்டும், விட்டு விடுங்கள்
நகவே = பிறர் நகை செய்ய, கேலி செய்ய
ஞாலத் துள்புகுந்து = தன் இருப்பிடம் விட்டு, இந்த உலகத்துள் வந்து
நாயே அனைய= நாய் போன்ற
நமையாண்ட = நம்மை, ஆட்கொண்ட
தகவே உடையான் = பெருமை உடையவன்
தனைச்சாரத் = அவனை சார்ந்து இருக்க
தளரா திருப்பார் = தளர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்
தாந்தாமே. = அவரவர்கள்
ஆழ்ந்து யோசித்தால் நாம் செய்யும் அர்த்தமற்ற காரியங்கள் புரியும்.
என்னதான் சொன்னாலும், "என் பிள்ளையை நான் எப்படி விட முடியும்? என் கணவனை/மனைவியை/பெற்றோரை" என்று ஏதோ ஒன்றில் பிடிப்பு அதிகம் இருக்கும். அதை விடுவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது.
மணிவாசகர் சொல்கிறார்
"மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்"
இறைவனைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். அவை எல்லாம் உங்களை விட்டுப் போக துடித்துக் கொண்டு இருக்கின்றன. நீங்கள் தான் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விட்டால் அவை போய் விடும். அவை உங்களை பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் தான் அவற்றை பிடித்துக் கொண்டு இருகிறீர்கள்.
போக விடுங்கள். அவை போய் விடும்.
அது உங்களுக்கும் நல்லது, அவற்றிற்கும் நல்லது.
சிந்திப்போம்.
No comments:
Post a Comment