Saturday, January 29, 2022

திருக்குறள் - துன்பம் இல்லாமல் போகும்

 திருக்குறள் - துன்பம் இல்லாமல் போகும் 


துன்பம் வேண்டுவார் யாரும் இல்லை. இருந்தும் துன்பம் இலாதார் யாரும் இல்லை. ஏதோ ஒரு வழியில் துன்பம் வந்து வாசல் கதவை தட்டுகிறது. 


துன்பத்திற்கு பெருமாலான காரணம் செல்வம்.


செல்வம் இல்லாமை ஒரு துன்பம். 


இருக்கும் செல்வதை இன்பமாக அனுபவிக்கத் தெரியாமல் அதை காக்க பாடுபவது இன்னொரு துன்பம். 


" எல்லோரிடத்தும் இனிய சொல் சொல்பவர்களுக்கு துன்புறுத்தும் வறுமை அல்லது வெறுப்பு இல்லாது போகும்" என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_29.html


(please click the above link to continue reading)


துன்புறூஉம்  = துன்பம் தரும் 


துவ்வாமை = வறுமை, வெறுப்பு 


இல்லாகும் = இல்லாது போகும் 


யார்மாட்டும் = எல்லோரிடத்தும் 


இன்புறூஉம் = இன்பம் தரும் 


இன்சொ லவர்க்கு = இனிய சொற்களை சொல்பவர்களுக்கு 


வள்ளுவர் சொல்லி விட்டார். அது எப்படி என்று நாம் யோசிக்கலாம். 


நமக்கு துன்பம் எப்படி வருகிறது?


வறுமையால் வரும் - எல்லோரிடமும் இனிய சொல் பேசுபவர்களுக்கு எல்லோரும் உதவி செய்வார்கள். ஏதோ ஒரு வேலை, பொருள் உதவி என்று தருவார்கள். எனவே அந்தத் துன்பம் இல்லாமல் போகும் 


எதிரிகளால் வரும் - எதிரி என்றால் ஏதோ கொலைகாரன், கொள்ளைக் காரன் என்று இல்லை. அலுவலகத்தில் நமக்கு எதிராக வேலை செய்பவர்கள், உறவில் நம் முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள்,  என்று அருகிலேயே இருப்பார்கள். எல்லோரிடமும் இனிமையாக பேசி வாழ்ந்தால், நமக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். எதிரிகளே இல்லாவிட்டால் அவர்களால் வரும் துன்பம் இல்லாமல் போகும் தானே. 


நண்பர்களால் துன்பம் வராது. 


எதிரிகளால் துன்பம் வராது. 


நம் இலக்கியங்களில் மூன்றாவதாக ஒரு பகுதியினரைப் பற்றி கூறுகிறார்கள். 


நட்பு, எதிரி, நொதுமல் என்று. 


நொதுமல் என்றால் நட்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லாதவர்கள். தெருவில் போகும் முன் பின் தெரியாதவரிடம் உள்ளது நொதுமல். 


இனிய சொல் பேசுபவர்களிடம் அப்படி முன் பின் தெரியாதவர்கள் கூட அன்பு பாராட்டத் தலைப்படுவார்கள். அவர்களின் நட்பை விரும்புவார்கள். 


யோசித்துப் பாருங்கள், இந்த உலகில் உள்ள அனைவரும் உங்களுக்கு நட்பு என்றால் அது எவ்வளவு உயர்வைத்தரும் என்று.  அப்படி இருக்கும் போது துன்பம் எங்கிருந்து வரும் ?


அதெல்லாம் சரி, இப்படிச் செய்தால் அப்படி நடக்கும் என்று என்ன உத்தரவாதம்?


ஒரு உத்தரவாதமும் இல்லை. செய்துதான் பார்க்க வேண்டும்.  


காசா பணமா? நட்டப் பட ஒன்றும் இல்லை. 


முயன்றுதான் பார்ப்போமே. ஒரு வேளை சரியாக இருந்தால்?....







No comments:

Post a Comment