Wednesday, November 1, 2023

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி 


வானரப் படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். 


கம்பன் இரசித்து, நிறுத்தி, நிதானமாக கவிதைகளப் படைக்கிறான். 


"சீதை சிறைகியிருக்கிறாள். அவளை மீட்டு அவள் துயரைத் துடைக்க வேண்டும். அப்படி என்றால் இராவணனை கொல்ல வேண்டும். இராவணன் கொல்லப் பட்டால் தேவர்களின் துயரும் தீரும். இப்படி சீதை மற்றும் தேவர்களின் துயர் தீர வில் ஏந்தி வந்து நிற்கும் இராமனை தன் அலை என்ற கைகளால் வா வா என்று அந்தக் கடல் வரவேற்பது போல இருந்ததாம்".


பாடல் 


கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,

வெங் கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேல்செல்லும

கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களி கூர,

அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது-அணி ஆழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post.html


(pl click the above link to continue reading)


கொங்கைக் குயிலைத் = மார்பகங்களை கொண்ட குயில் போன்ற சீதையின் 


துயர் நீக்க = துன்பம் நீங்க 


இமையோர்க்கு = தேவர்கள். தேவர்கள் கண் சிமிட்ட மாட்டார்கள். இமை மூடாது. எனவே, இமையோர் 


உற்ற = உள்ள 


குறை முற்ற = துன்பம் நீங்க 


வெங் கைச் சிலையன் = பயத்தைத் தரும் வில்லை கையில் கொண்டவன்  


தூணியினன் = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை கொண்டவன் 


விடாத முனிவின் = நீங்காத கோபம் கொண்டவன் 


மேல்செல்லும = அந்தப் பகைவர்கள் மேல் படை எடுத்துச் செல்லும் 


கங்கைத் திரு நாடு உடையானைக் = கங்கை பாயும் கோசல நாட்டின் தலைவனை 


கண்டு = பார்த்து 


நெஞ்சம் களி கூர = மனம் மகிழ்ந்து 


அம் = அந்த 


கைத் = கை போன்ற 


திரள்கள் = அலையை 


எடுத்து ஓடி = எடுத்துக் கொண்டு ஓடி வந்து 


ஆர்த்தது = பொங்கி வந்ததை 


ஒத்தது = போல 


அணி ஆழி= அழகிய கடல் 


ரொம்ப நாள் கழித்து நமக்கு வேண்டியவர்கள் வந்தால், எப்படி இரண்டு கைகளையும் விரித்து ஓடி சென்று அவர்களை தழுவி வரவேற்போமோ, அது போல இராமனைக் கண்டு மகிழ்ந்து, அலை எனும் கை நீட்டி ஆராவராத்தோடு அந்த கடல் பொங்கி வந்ததது போல இருந்ததாம். 


என்ன ஒரு கற்பனை!


எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு. 


இராமன் அவதாரம் எடுத்தது இராவணனை அழிக்க. அவன் தவறு செய்தான், தேவர்கள் முறையிட்டார்கள். திருமாலும் ஒத்துக் கொண்டுவிட்டார். 


நேரே சென்று அழிக்க வேண்டியதுதானே. 


கதைப்படி, இராமன் தேவர் துயர் தீர்கவில்லை. தன் மனைவியை சிறைப் பிடித்தவனை கொன்று மனைவியை மீட்டான். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி, சீதையை விட்டிருந்தால், இராமன் அவளை கூட்டிக் கொண்டு அயோத்தி வந்திருப்பான். இராவணன் அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருப்பான். 


அப்படி நடந்திருக்காது என்று  சொல்ல முடியாது. 


பின்னால் ஒருவர் மாத்தி ஒருவர் சொல்கிறார்கள் - வீடணன், இந்திரசித்து, கும்பகர்ணன் - எல்லோரும் சொல்கிறார்கள். சீதையை விட்டு விடு. இராமன் மன்னித்து விடுவான் என்று. நீ சீதையை சிறை விட்டாலும், இராமன் உன்னை கொல்லாமல் விடமாட்டான் என்று யாரும் சொல்லவில்லை. 


பின் அவதார நோக்கம் என்ன ஆயிற்று?  


அவதார நோக்கம் என்பது சீதையை சிறை மீட்பதாக முடிந்து இருக்கும். 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....




1 comment:

  1. வினாச காலெ விபரீத புத்தி. விதி அவனை அது மாதிரி செய்ய விட்டிருக்காது என்று தோன்றுகிரது

    ReplyDelete