பழமொழி - சொல்லவே இல்லை
நம் நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ சிறிது இடைவெளிக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் சிலவற்றைச் சொல்லுவார்கள். நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் சொல்லவே இல்லையே நம்மிடம் என்று என்று அதிசயப் படுவோம்.
உதாரணமாக, "...அங்க ஒரு வீடு வாங்கினேன்...நல்ல விலைக்கு வந்தது" என்பார்கள். "அடப் பாவி, வீடு வாங்கினதைக் கூட என்னிடம் சொல்லவில்லையே. சொல்லி இருந்தால் நானும் கூட அங்கேயே வாங்கி இருப்பேனே..." என்று உள்ளுக்குள் நினைப்போம்.
அதே போல, பெண்ணுக்கோ, பையனுக்கோ வரன் அமைந்து இருக்கும். வெளியே சொல்லாமல் முடித்து இருப்பார்கள்.
இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் பல விடயங்கள் நடக்கும். எல்லாவற்றையும், எல்லோருடமும் சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார்கள். அவங்களுக்கு எது நல்லதுன்னு படுதோ அதை அவர்கள் செய்வார்கள். எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, அப்படித்தான் செய்வார்கள்.
அதற்காக வருத்தப்படக் கூடாது.
இப்படி வாழ்வின் எதார்த்தங்களை புட்டு புட்டு வைப்பது பழமொழி என்ற நூல்.
ஒவ்வொரு செய்யுளும் நாலு அடி, அதில் கடைசி அடி, ஒரு பழமொழியாக இருக்கும். சில பழமொழிகள் நாம் கேட்டு இருக்க மாட்டோம். இருந்தாலும் மிக உபயோகமான பாடல்கள்.
பாடல்
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_2.html
(pl click the above link to continue reading)
சுற்றத்தார் = உறவினர்கள்
நட்டார் = நண்பர்கள்
எனச்சென் றொருவரை = என்று சென்று ஒருவரை
அற்றத்தால் = மறைத்து செய்யும் காரியங்களைக் கொண்டு
தேறார் = எடை போட மாட்டார்
அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள்
கொற்றப்புள் = புள் என்றால் பறவை. கொற்றப் புள் என்றால் சிறந்த பறவை, அதாவது கருடன்
ஊர்ந்துலகம் = மேல் ஏறி உலகம்
தாவின = தாவி அளந்த
அண்ணலே யாயினும் = திருமாலே என்றாலும்
சீர்ந்தது = தனக்கு சிறந்தது என்று நினைப்பதை
செய்யாதா ரில் = செய்யாதவர்கள் யாரும் இல்லை
எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி சொல்லவில்லையே என்று அவர்கள் மேல் வருத்தம் கொள்ளக் கூடாது. அவங்களுக்கு பிடிச்சதை அவங்க செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுதான் யதார்த்தம்.
அது மட்டும் அல்ல, உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை. சொல்லாமல் செய்தால் அவர்கள் இப்படி நினைப்பார்களோ, தவறாக நினைப்பார்களோ, என்றெல்லாம் நினைக்க வேண்டும். உங்களுக்கு நல்லது என்று படுகிறதா, எதைப் பற்றியும் கவலைப் படாமல் செய்யுங்கள். அது தான் உலக வழக்கு.
Very practical advice....
ReplyDeleteVery good👍
ReplyDelete