திரிகடுகம் - முன் செய்த வினை
சில சமயம் நம்மால் தீர்க்க முடியாத சில துன்பத்தில் மாட்டிக் கொள்வோம். என்ன செய்தாலும், அதை தீர்க்க முடியாது. அப்போது நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தத் துன்பம் முன் செய்த வினையால் வந்தது என்று.
அப்படிப்பட்ட மூன்று துன்பங்களை பட்டியலிடுகிறது திரிகடுகம்.
"எதிர்த்துப் பேசும் மனைவி, ஒழுக்கம் இல்லாத வேலையாள், பகைக் கொண்ட சுற்றம். இந்த மூன்றும் முன் செய்த வினையால் வந்து நின்று ஒருவனது இறுதிக் காலம் வரை வந்து துன்பம் தரும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது"
பாடல்
எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்
செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப
முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்தது இல். . .
பொருள்
எதிர்நிற்கும் பெண்ணும் = என்ன சொன்னாலும், எதிர் வாதம் செய்யும் மனைவியும். எதிர்த்துப் பேசும் மனைவியும்.
இயல்பில் தொழும்பும் = இயல்பு + இல் + தொழும்பும் = ஒழுக்கம் இல்லாத வேலையாட்களும்
செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி = எப்போதும் பகை கொண்டு இருக்கும் சுற்றத்தாரும்
மயிர்நரைப்ப = முடி நரைக்கும் வயதான காலம் வரை
முந்தை = முன்பு செய்த
பழவினையாய்த் = பழைய வினைகளாக வந்து
தின்னும் = ஒருவனது இன்பத்தை தின்றுவிடும், கொன்று விடும்
இவைமூன்றும் = இந்த மூன்றும்
நொந்தார் = நினைத்துத் துன்பப் படுபவர்கள்
செயக்கிடந்தது இல் = செய்யக் கூடியது ஒன்றும் இல்லை
இனி வரும் பிறவிகளில் நல்ல அன்பான மனைவி, ஒழுங்காக வேலை செய்யும் பணியாள், அன்பு பாராட்டும் சுற்றத்தார் இவை வேண்டுமானால், நல்ல வினைகளை இப்போதே செய்ய வேண்டும்.
இந்த பிறவியில் கூட நல்லது நடக்கும் மனது இருந்தால்
ReplyDeleteபணியாள் என்பது இந்திய சமுதாயத்தில் தான். விரைவில் வரும் ரோபாட்(robot) முந்திய நல்வினைப்பயன்.
ReplyDeleteஅருமையான விளக்கம்
ReplyDeleteRobot பற்றி மேலே ஒரு நேயர் எழுதியிருப்பது சிரிப்பைக் கிண்டுகிறது. ஆ ஹா!
ReplyDelete