Sunday, April 25, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - பசும் புல் தலை காண்பது அரிது

 திருக்குறள்  - வான் சிறப்பு - பசும் புல் தலை காண்பது அரிது 


மழை இல்லாவிட்டால், ஒரு புல்லு கூட முளைக்காது என்று சுருக்கமாக சொல்கிறார். 



பாடல் 



விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_25.html

(click the above link to continue reading)


விசும்பின் = ஆகாயத்தின் 

துளிவீழின் = (மழை) துளி வீழ்வது 

அல்லால் = இல்லாவிட்டால் 

மற் றாங்கே = மற்று ஆங்கே 

பசும்புல் = பச்சை புல்லின் 

தலைகாண்பு அரிது = நுனியைக் கூட பார்க்க முடியாது 


இனி பரிமேலழகரின் உரைக்குள் நுழையலாம். 


தமிழிலே ஆகு பெயர் என்று ஒன்று உண்டு. ஒன்றின் பெயர் மற்றதற்கு ஆகி வருவது. 


தை பொறந்தா வழி பிறக்கும் என்று ஒரு பழமொழி இருக்கிறது அல்லவா? தை என்பது  இங்கே தை மாதத்தை குறிக்கும். தை என்ற சொல் தை மாதத்திற்கு ஆகி வந்தது. 


"அப்புறம் அந்த கணக்கு வந்தார்னா அவர் கிட்ட வரி கட்டறத பத்தி கொஞ்சம் ஞாபகப் படுத்துங்க " என்று சொல்லும் போது இங்கு கணக்கு என்பது கணக்கப் பிள்ளைக்கு ஆகி வருவது போல.


விசும்பு என்பது மேகத்துக்கு ஆகி வந்ததால் அது ஆகு பெயர் என்று குறிக்கிறார். 


வானத்தில் இருந்தா மழை வருகிறது? மேகத்தில் இருந்துதானே மழை வருகிறது. இங்கே விசுப்பு என்பது மேகத்திற்கு ஆகி வந்தது. 


"பசும் புல் தலை காண்பது அரிது" என்கிறார். சரி போயிட்டுப் போகட்டும். புல்லு இல்லாட்டி என்ன? நாம என்ன புல்லையா உண்கிறோம்? இல்லையே. புல்லு முளைக்கவில்லை  நமக்கு என்ன நட்டம்?


உரை எழுதும் பொழுது பரிமேலழகர் 

"பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது"

"இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது" 


தலையை"யும்" என்று ஒரு 'உம்" ஐ சேர்கிறார். குறளில் இல்லை. அது தொக்கி நிற்கிறது என்கிறார். தொக்குதல் என்றால் மறைந்து நிற்கிறது. நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இந்த 'உம்' என்ற சொல்லுக்கு தனி இலக்கணமே இருக்கிறது. 


உயர்வு சிறப்பு உம்மை = பள்ளி இலக்கிய மன்ற திறப்பு விழாவிற்கு தலைமை நீதிபதியும் வந்திருந்தார் என்றால் அது உயர்வு சிறப்பு உம்மை. 


விழாவிற்கு பேட்டை தாதாவும் வந்திருந்தான் என்றால் அது இழிவு சிறப்பு. 


இன்னொரு உம்மை இருக்கிறது. இறந்தது தழியீய எச்ச உம்மை என்று அதற்குப் பெயர். 


"....இந்த மூணாவது வீட்டில் இருக்கும் அவர் மருத்துவரா..நிறைய நோயாளிகள் வந்து போகிறார்களே?" என்ற கேள்விக்கு

"அவர் மகனும் மருத்துவர்" என்று கூறினால் அவர் மருத்துவர் என்று நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா? 


ஒரு நண்பன் மற்றவனிடம் கேட்கிறான் "...ஏண்டா உனக்கும் பசிக்கிறதா..." என்று. அப்படி என்றால் எனக்குப் பசிக்கிறது. பசி முன்பே வந்து விட்டது. இறந்த காலம். 


இலக்கணம் படிக்காவிட்டால், இந்த பசும் புல்லின் தலையையும் காண்பது அரிது என்று நம்மால் உணர முடியாது. ஏதோ வள்ளுவர் தப்பா எழுதி இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு போய் விடுவோம். 


புல் என்பது, ஓரறிவு ஜீவன். ஓரறிவு என்றால் குறைந்த அறிவு என்று அர்த்தம் அல்ல. ஒரே ஒரு புலனின் வழியாக அறிவைப் பெறும் உயிரினம். 


நம்மை நாம் ஆறறிவு ஜீவன் என்று கூறிக் கொள்கிறோம். ஏன்? அது என்ன ஆறறிவு?


ஆறுவிதமான அறிவு அல்ல. மெய் வாய் செவி என்ற ஐந்து புலன்கள் வழியாகவும் அறிவு வந்தால் அது ஐந்து அறிவு. அது போக மனம் அல்லது புத்தி என்றும் வேலை செய்து அதன் மூலம் அறிவு வந்தால் அது ஆறாம் அறிவு. 


மனம் வேலை செய்யாவிட்டால் அது ஐந்தறிவு தான். 


மனம் வேலை செய்வதால் தான் அவன் "மனிதன்" என்று அழைக்கப் படுகிறான். 


புல்லு கூட முளைக்காது என்பதால் வேறு ஒன்றும் முளைக்காது என்று அர்த்தம். 


ஓரறிவு ஜீவன் கூட இருக்காது என்றால் மற்ற ஜீவன்களும் இருக்காது என்று அர்த்தம். 





பரிமேலழகர் உரை: விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.

(' 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)


சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  

ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*

ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 

வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே. 

1 comment:

  1. ஆறறிவு என்பதன் பொருள் இதுதானா? நன்றாக இருக்கிறது.

    புல் ஓரறிவு என்றால், தொட்டால் மட்டுமே புல் உணரும் என்பது பொருளா?

    அப்படியானால், ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு கொண்டவை எவையோ?

    நன்றி.

    ReplyDelete