Thursday, April 29, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - நீர் இன்றி அமையாது உலகு

 திருக்குறள் - வான் சிறப்பு - நீர் இன்றி அமையாது உலகு 


நீர் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. அது நமக்குத் தெரிகிறது. ரொம்ப தூரம் போக வேண்டாம், வீட்டில் ஒரு நாள் குழாயைத் திறக்கிறீர்கள், நீர் வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி இருக்கும் ? பதறிப் போய் விட மாட்டீர்கள். உடனே தொலை பேசியில் யார் யாரையெல்லாமோ கூப்பிட்டு தண்ணீர் வர வழி செய்வீர்கள் அல்லவா? வீட்டில் கை கால் கழுவ தண்ணீர் வராவிட்டால் இந்தப் பாடு என்றால் மழை பெய்யாவிட்டால் என்ன ஆகும். உணவு இல்லை. பசி. செடி கொடி தாவரங்கள் இல்லை. நாடே வறண்டு பாலைவனமாகி விடும் அல்லவா. அது தெரிகிறது. நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆனால், அவ்வளவு தெளிவாக தெரியாத இன்னொன்றும் இருக்கிறது. அதாவது, மழை இல்லை என்றால் உலகில் ஒழுக்கம் கெட்டு விடும் என்பது. உலகில் தர்மமும், அறமும், ஒழுக்கமும் நிலைத்து வாழ மழை தேவை. அது நேரடியாகத் தெரியாது. 


மழை இல்லாவிட்டால் உணவு இல்லை. உணவு இல்லாவிட்டால் பசி. பசி வர பத்தும் பறந்து போகும். அது என்ன பத்து 


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் 

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் 

பசி வந்திடப் பறந்து போம் 


என்று ஔவை கூறுகிறாள். 


பாடல் 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_29.html


(please click the above link to continue reading)


நீர்இன்று = நீர் இன்றி 


அமையாது  = அமையாது, இருக்காது 


உலகெனின் = உலகு எனின் 


யார்யார்க்கும் = எவருக்கும் 


வான்இன்று = மழை இன்றி 


அமையாது ஒழுக்கு = ஒழுக்கம் இல்லை 


நீர் இன்றி அமையாது உலகு என்ற தொடரில் உலகு என்பதற்கு உலகியல் சார்ந்த இன்பங்கள், அது சார்ந்து வரும் வீடு பேறு போன்றவை என்று பரிமேலழகர் பொருள் கொள்கிறார். உலகம் என்றால் ஏதோ மலை, பாறை, மண் என்று சொல்லவில்லை. மழை இல்லாவிட்டாலும்  அவை இருக்கும். உலகியல் சார்ந்த இன்பங்களும் அறங்களும். 


எப்படி வானம் (மேகம்) இல்லாமல் மழை இல்லையோ, அது போல நீர் இல்லாமல் ஒழுக்கம் இல்லை. 


நாம் நினைக்கலாம், மழை இல்லாவிட்டால் என்ன, ஆறு, குளம், கிணறு, கண்மாய், என்று நீர் நிலைகள் இருக்கின்றனவே என்று. அவற்றிற்கும் நீர் மழையில் இருந்துதான் வர வேண்டும். ஊற்று நீர், ஆற்று நீர் எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் வரும். அப்புறம் வறண்டு விடும். 


அமையாது ஒழுக்கு என்பதற்கு "எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது " என்று பொருள் கொள்கிறார்.  


எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனுக்குச் சொன்ன ஒழுக்க நெறிகள் மழை இல்லாவிட்டால் அவனால் கடைபிடிக்க முடியாது போய் விடும் என்கிறார். 


எனவே உலகில் தர்மம் நிலைத்து நிற்க, அறம் செழித்துஓங்க, மழை இன்றி அமையாதது என்று கூறினார். 


மழையையும், அதன் மூலம் கிடைக்கும் நீரையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். உடலை மட்டும் அல்ல, உயிருக்கு துணையான அறம், ஒழுக்கம் போன்றவற்றிற்கும் துணையாக இருப்பது மழை. 


இந்தக் குறளோடு வான் சிறப்பு என்ற அதிகாரம் முடிவடைகிறது.  


இருபது குறள் படித்து விட்டோம். 


அடுத்த அதிகாரம், நீத்தார் பெருமை. 


களைத்துப் போனால், கொஞ்சம் இடைவெளி விடுவோமா? வேறு ஏதாவது படித்துவிட்டு பின் மீண்டும் குறளுக்கு வரலாம். 


அல்லது அப்படியே தொடரலாமா?

4 comments:

  1. அண்ணா ....(அவ்வாறு அழைக்க அனுமதியுங்கள் )

    தொடருங்கள் ......

    இதனை உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக சொல்ல இயலாது ....

    தயவு கூர்ந்து தொடருங்கள்...

    ReplyDelete
  2. தயவுசெய்து தொடரவும். மிக்க நன்றி!

    ReplyDelete
  3. தயவுசெய்து தொடரவும். மிக்க நன்றி!

    Reply

    ReplyDelete
  4. குறளும் பிற இலக்கியப் பாடல்களும் மாற்றி மாற்றிக் கலந்து தந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete