திருக்குறள் - இறைவன் அடி சேராதார்
நான் இறைவனை நம்பவில்லை. இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா இல்லையா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது நான் ஏன் இறைவனை வணங்க வேண்டும் என்று நாத்திகவாதிகள் கேட்கலாம்.
இறைவன் இருக்கிறான். அவன் நல்லவன். உயர்ந்தவன். கருணை உள்ளவன். அப்படிப் பட்டவன் நான் ஏன் வந்து அவனை வணங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். இந்த கோஷம் போடுவது, கும்பிடு போடுவது, பல்லைக் காட்டி இளிப்பது என்பதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கு வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம். ஆண்டவனும் இந்த புகழுக்கு அடிமையானவன் தானா. இருக்க முடியாது. அப்படி இருக்க, நான் ஏன் அவனை வணங்க வேண்டும் என்று ஆத்திகவாதிகளும் கேட்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் வணங்க வேண்டியது இல்லை என்று தான் தோன்றுகிறது.
வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்.
பாடல்
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_17.html
(click the above link to continue reading)
பிறவிப் = பிறவி என்கின்ற
பெருங் கடல் = பெரிய கடலை
நீந்துவர் = நீந்துவர்
நீந்தார் = நீந்தாதார்
இறைவன் அடி சேராதார் = இறைவனின் திருவடிகளை சேராதவர்கள்
இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்கள் இந்த பிறவி என்ற பெரிய கடலை நீந்தி கரை சேர்வார்கள். மற்றவர்கள் நீந்த மாட்டார்கள்.
இனி பரிமேலழகரின் உரையை பார்ப்போம்.
பெருங் கடல்: பிறவியை ஏன் பெரிய கடலுக்கு ஒப்பாக சொன்னார்? பிறந்து, இறந்து, பிறந்து இறந்து முடிவில்லாமல் போய்க் கொண்டே இருப்பதால், அதைக் கடல் என்றார். நடுக் கடலில் தத்தளிப்பவனுக்கு கரை எந்தப் பக்கம் என்று தெரியாது.
நீந்தார்: கடலுக்குள் விழுந்தாகி விட்டது. நீந்தாவிட்டால் என்ன ஆகும்? கடலுக்குள்ளே அழுந்திச் சாக வேண்டியது தான். நான் நீந்த மாட்டேன் என்று அடம் பிடித்தால், யார்க்கு நட்டம்?
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
குறளிலே "நீந்தார் இறைவன் அடி சேராதார்"என்று இருக்கிறது. அப்படியானால் நீந்துபவர் என்ன ஆவார்கள் என்ற கேள்விக்கு குறளில் விடை இல்லை. "பிறவிப் பெருங்கடல் நீந்துவர்" என்று மொட்டையாக நிற்கிறது.
பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு எழுதுகிறார்.
சிலருக்கு இலக்கணம் என்றாலே எட்டிக் காயாக இருக்கும். இலக்கணம் படிக்காமல் இலக்கியம் படிக்க முடியாது. இலக்கணம் வேண்டாம் என்றால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், கேள்விக்கு விடை கிடைக்காது.
இலக்கணமும் படிக்க ஆவல் உள்ளவர்கள் மேலே தொடரலாம்.
"சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்": அதாவது ஒரு சொல் இன்னொரு சொல்லைக் கூட்டிக் கொண்டு வரும்.
உதாரணமாக:
வந்த என்று சொல்லி நிறுத்தினால் அடுத்து என்ன சொல் வரும்?
வந்த பையன்
வந்த பெண்
வந்த மாடு
என்று ஏதோ ஒரு பெயர்ச் சொல் வர வேண்டும் அல்லவா? வந்த என்ற சொல்லுக்குப் பின் ஒரு வினை வருமா?
வந்த ஓடு, வந்த நட, வந்த சாப்பிடு என்று கூற முடியாது.
எனவே வந்த என்பது பெயரெச்சம். பெயர் வர வேண்டும். வராமல் எச்சமாக (மிச்சமாக) நிற்கிறது.
பொதுவாக, 'அ' என்ற ஈற்றுச் சொல் வந்தால் அது பெயரச்சமாகத்தான் இருக்கும்.
வந்த, சென்ற, நின்ற, ஓடிய, வாடிய (பயிரை கண்ட போதெல்லாம்),
அது போல் வினையெச்சம் என்று ஒன்று இருக்கிறது.
வந்து என்ற சொல்லைப் பாருங்கள். அது ஒரு வினையை கூட்டிக் கொண்டு வரும்.
வந்து சென்றான், வந்து நின்றான். வந்து வணங்கினான், வந்து சாப்பிட்டான்
என்று வினையை கொண்டு வரும்.
வந்து பையன், வந்து பெண், வந்து மாடு, வந்து தலைவர் என்று சொல்ல முடியாது.
'உ' என்ற ஈற்று எழுத்து வினை எச்சத்தைக் குறிக்கும்.
இங்கே,
இறைவன் அடி (சேர்ந்தார் ) , நீந்துவர்
இறைவன் அடி சேராதார், நீந்தார்
என்று பொருள் கொள்ள வேண்டும்.
'சேர்ந்தார்' என்பது சொல்லெச்சம்.
கடவுள் வாழ்த்து அதிகாரம் முடிந்தது. இதில் ஒரு குறளில் ஒரு புது செய்தி தோன்றியது. சரியா தவறா என்று தெரியவில்லை.
அதை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.
இலக்கணம் தெரிந்து படித்தால் நன்றாக புரிகிறது்
ReplyDeleteநன்றி