Monday, April 19, 2021

திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும் - பாகம் 2

 

திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும்  - பாகம் 2 


வீடு பேறு அடைய வேண்டுமானால், துறவறம் வேண்டும். வீடு, மனைவி, மக்கள், செல்வம், என்று மேலும் மேலும் பற்றுக்களை வளர்த்துக் கொண்டிருந்தால் வீடு பேறு கிட்டாது. 

துறவறம் வேண்டும் என்றால், பொதுவாக, இல்லறம் வேண்டும். 

இந்த இரண்டு அறங்களும் வேண்டும் என்றால் மழை வேண்டும்.  மழை இல்லாவிட்டால் அனைத்து அறங்களும் சிதைந்து போகும். எனவே, கடவுள் வாழ்த்துக்கு அப்புறம் வான் சிறப்பு பற்றி கூற மேற்கொள்கிறார் வள்ளுவர். 


பாடல் 


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று



பொருள் 



(click the above link to continue reading)



வானின்று  = வானத்தில் இருந்து 

உலகம் = உலகத்திற்கு 

வழங்கி வருதலால் = கொடுத்து வருவதால் 

தான் = அது 

அமிழ்தம் என்றுணரற் பாற்று = அமிழ்தம் என்று உணரக் கூடியதாக இருக்கிறது. 


வானத்தில் இருந்து உலகிற்கு கொடுத்து வருவதால், அது அமிழ்து என்று உணரப் படுகிறது என்கிறார். 

இனி பரிமேலழகர் உரையை பார்ப்போம். 


"அமிழ்து" : அமிழ்தம் உடலையும் உயிரையும் ஒன்றாக வைக்க உதவுவது. அதாவது, சாகாமல் இருக்க உதவுவது.  சாதல் என்றால் என்ன ? உடலை விட்டு உயிர் பிரிவது தானே? அப்படி பிரியாமல் சேர்த்து ஒட்டி வைத்து விட்டால், சாகாமல் இருக்கலாம் தானே?   

அமிழ்தம் உண்டவர்கள் சாக மாட்டார்கள்.  

மழைதான் அமுதம் என்கிறார். 

எப்படி சரியாகும்.  நாம் தினம் தினம் பார்க்கிறோம் எவ்வளவோ பேர் சாகிறார்கள்.  மழை அமுதம் என்றால் யாரும் சாகக் கூடாது அல்லவா?  அங்குதான் பரிமேலழகரின் நுட்பம் நமக்குப் புரியும். 

"அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்"


ஒரு தனி நபர் இறக்கலாம். ஒரு இராமசாமி இறந்தால் ஒரு குப்பு சாமி பிறப்பார்.  ஒரு மரம் வெட்டப் பட்டால், வேறு எங்கோ இன்னொரு மரம் முளைக்கும்.  பிறப்பும் இறப்பும் இடையறாது நிகழ மழை வேண்டும்.  மழை இல்லை என்றால் இறப்பு இருக்கும். பிறப்பு இருக்காது. செடி கொடி மரங்கள் இருக்காது. உணவு இருக்காது. பருக நீர் இருக்காது. உயிர்கள் மடிந்து கொண்டே இருக்கும். பிறப்பு என்பது இருக்காது. சில காலங்களில் பூமியே சுடுகாடாகி விடும். 

அப்படி ஆகாமல், உயிர்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதால், அது அமிழ்தம் என்கிறார். 


"அமிழ்தம் என்றுணரற் பாற்று":  சரி, வள்ளுவர் சொல்கிறார். மழை தான் அமுதம் என்று வேறு எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்டால். இதை எல்லாம் சொல்ல முடியாது.  "உணர்ந்து " கொள்ளலாம் என்கிறார்.  

காதலினிடம் அவனுடைய காதலி கேட்கிறாள். " நீ என்னை உண்மையிலேயே காதலிக்கிறாயா" என்று. அவன் "ஆம்" என்கிறான். "இல்லை, நான் நம்ப மாட்டேன், நிரூபித்து காண்பி" என்று கேட்டால் என்ன செய்வது? இதை எல்லாம் நிரூபணம் பண்ண முடியாது. அன்பை, காதலை உணரத்தான் முடியும். 


"வானின்று உலகம் வழங்கி" : உலகம் என்றால் என்ன? இங்குள்ள மலை, நிலம், கடல் எல்லாமா? மழை இல்லாவிட்டால் மலை என்ன ஆகும்? அது பாட்டுக்கு இருக்கும். பரிமேலழகர் "'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை" என்று உரை செய்கிறார். 

உயிர்கள் என்றால், மனிதர்கள் மட்டும் அல்ல. விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் எல்லாமே உயிரில் அடங்கும். 

மழையின் சிறப்பு கூறுகிறார். 



2 comments:

  1. அழகிய சிற்றோடையாக கருத்துகள் ....தங்கள் எழுத்தில் ...வணக்கம்.

    ReplyDelete
  2. மிகத் தெளிவான விளக்கம். நன்றி.

    ReplyDelete