Friday, April 23, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய் தொண்டர் சேவடி

நாலாயிர திவ்ய பிரபந்தம்  - சேறு செய் தொண்டர் சேவடி


பக்தி உலகம்.  அது ஒரு தனி உலகம்.  


இப்படி இருக்குமா? இப்படி கூட நடக்க முடியுமா? இது சாத்தியம் தானா? எப்படி அவர்களால் இப்படி உருக முடிகிறது என்று நம்மை வியக்க வைக்கும் உலகம். 


திருவரங்கத்தில் உள்ள பெருமாளின் அவதார லீலைகளை அவனுடைய பக்தர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொன்னி ஆறு போல பாய்கிறது. அது நிலத்தில் விழுந்து, கோயில் முற்றத்தை எல்லாம் ஈரமாக்குகிறது. அப்புறம் வேறு சில பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் நிலையம் அதே தான். ஈரமான நிலத்தில் இன்னும் நீர் ஓடி அது சேறாகிறது. பின் கொஞ்சம் காய்கிறது. முழுவதும் காய்வதற்குள் அடுத்த குழு வருகிறது. நிலம் மீண்டும் சேறாகிறது. 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், அந்த சேற்றை அள்ளி என் தலையில் ஒரு அணிகலனைப் போல அணிந்து கொள்வேன் என்கிறார். 


பாடல் 


ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே

ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்

சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_23.html


(Please click the above link to continue reading)


ஏறடர்த்ததும் = ஏறுகளை சண்டையிட்டு அடக்கியதும் 


ஏனமாய் = பன்றியாய் 


நிலம் கீண்டதும் = நிலத்தைக் பிளந்ததும் 


முன்னி ராமனாய் = முன்பு இராமனாய் 


மாறடர்த்ததும்  = அரக்கர்களுடன் போர் செய்ததும் 


மண்ணளந்ததும் = வாமனனாய் உலகை அளந்ததும் 


சொல்லிப்  = சொல்லி 


பாடி = பாடி 


வண் = பெருமை உடைய 


பொன்னிப் = பொன்னி 


பே ராறு = பெரிய ஆறு 


போல் வரும் = போல வரும் 


கண்ணநீர்  =கண்களில் இருந்து சொரியும் நீர் 


கொண்ட  = கொண்ட 


ரங்கன் கோயில் திருமுற்றம் = திருவரங்க நாதர் கோவில் முற்றம் 


சேறு செய் = சேறாகும் படி செய்த 


தொண்டர் = தொண்டர்களின் 


சேவடிச் = சிவந்த அடிகளின் 


செழுஞ் சேறெஞ்சென்னிக்  கணிவனே = செழுமையான சேற்றை என் தலையில் அணிந்து கொள்வேனே 



அந்தக் காட்சியை மனக் கண்ணின் முன்னால் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பாட்டின் அர்த்தத்தை உணர முடியும். 



1 comment:

  1. மனதில் புன்முறுவலை எழுப்பும் பாடல். நன்றி.

    ReplyDelete