Wednesday, April 21, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி 


அன்பு அதிகமாகிக் கொண்டே போகும் போது ஒரு இடத்தில் வார்த்தைகள் பயனற்றுப் போய், கண்ணீர் ஒன்றே அந்த அன்பை வெளிப்படுத்தும் ஊடகமாக மாறி விடுகிறது. 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவப் பெருந்தகை. 


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பார் திரு ஞானசம்பந்தர். 


அன்பின் உச்சம் கண்ணீராகத்தான் இருக்கிறது. 


கிணறு வெட்ட நிலத்தை தூர்த்துக் கொண்டே போவோம். ஒரு இடத்தில் நிலத்தடி நீர் மேலே வந்து விடும். பெருமாள் மேல் பக்தர்கள் கொண்ட காதல் இருக்கிறதே அது எவ்வளவு தூரம் ஆழமாகப் போகும் என்று யாருக்கும் தெரியாது. தூராத மனக் காதல் அது. 


தாய்ப் பசுவைக் கண்டதும் கன்றுக் குட்டி துள்ளி குதித்துக் கொண்டு ஓடும். அதுக்கு ஆனந்தம் தாங்காது. சரியாக குதிக்கிரோமா என்று கூடத் தெரியாது. கண் மண் தெரியாமல் குதிக்கும். கீழே விழும். புரண்டு எழும். மீண்டும் துள்ளும். அப்படி ஒரு பாசம். அன்பு. துடிப்பு. 


ஆண்டவனைக் கண்டதும் பக்தர்களுக்கும் அப்படி ஒரு பரவசம் வருமாம். கண்ணில் நீர் தாரை தாரையாக வழியும். அவனை கண்டு கொண்டேன் என்று ஒரே ஆனந்தம். துள்ளிக் கொண்டு ஒடுவார்களாம். தரையில் விழுந்து புரள்வார்களாம். 


அப்படி ஒரு பரவச நிலை எனக்கு வரவில்லையே.  அவர்களோடு சேர்ந்து தானும் அவ்வாறு பரவசம் அடையும் நாள் அது என்று வருமோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி


ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்


சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_34.html


(click the above link to continue reading)


தூராத மனக்காதல்  = ஆழம் காண முடியாத காதல் 


தொண்டர் தங்கள் = தொண்டர்கள் 


குழாம் = குழு 


குழுமித் = ஒன்றாகச் சேர்ந்து 


திருப்புகழ்கள் பலவும் பாடி = இறைவனுடைய திருப்புகழ்கள் பலவும் பாடி 


ஆராத  = தீராத 


மனக்களிப்போ டழுத  கண்ணீர் = தீராத மனக் களிப்போடு அழுது கண்ணீர் 


மழைசோர = மழை போல வடிய 


நினைந்துருகி யேத்தி = நினைந்து உருகி போற்றி 


நாளும்= ஒவ்வொரு நாளும் 


சீரார்ந்த முழவோசை = சிறந்த வாத்தியங்களின் முழவு ஓசை 


பரவை காட்டும் = கடல் போல் ஒலிக்க 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும் 


போராழி யம்மானைக் = பெரிய சக்கரத்தை உடைய அம்மானை 


கண்டு = கண்டு 


துள்ளிப் = பரவசத்தில் துள்ளி 


பூதலத்தி லென்றுகொலோ  = இந்த பூமியில் என்றோ 


புரளும் நாளே = புரளும் நாளே 


உலகியல் இன்பங்கள் கொஞ்ச நேரத்தில் ஆறி விடும். திருப்தி வந்து விடும். இன்னும் சொல்லப் போனால் ஆசை மாறி வெறுப்பே வந்து விடும். 


லட்டு நன்றாக சுவையாக இருக்கும். ஒன்றிரண்டு உண்ணலாம். அதற்கு மேல் முடியாது. அந்த ஆசை ஆறி விடும். 


ஆனால், இறைவனை கண்டு மகிழும் ஆசை ஆறவே ஆறாது. மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் என்கிறார். 


"ஆறாத  மனக் களிப்பு " 


அதே போல், "தூராத மனக் காதல்" ஆழம் காண முடியாத காதல். 


பிரபந்தத்தை வார்த்தைகளால் உணர முடியாது. வார்த்தைகளைத் தாண்டிய அனுபவம் அது.  


வாய்த்தால் நல்லது. 


2 comments:

  1. அருமை. இது நம் போன்றோருக்கு குலசேகராழ்வார் அருளியது. நமக்கந்த பேரு என்றுகோலோ

    ReplyDelete
  2. ஒரு பாடலில் எத்தனை காட்சிகள்:

    தோண்டத் தோண்டத் தீராத...
    குழுமிப் பாடி...
    ஆராத மனக்களிப்பு...
    அழுத...
    மழை போல...
    நினைந்து, ஏத்தி, உருகி...
    பரவசத்தில் துள்ளி ...
    புரளும்...

    கடவுள் உண்டோ இல்லையோ, இந்த மாதிரிக் களிக்கும் பாடலைப் படித்தால் மனம் நெகிழத்தான் செய்கிறது.

    ReplyDelete