திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார் - பாகம் 3
பாடல்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/3_12.html
(click the above link to continue reading)
பொறி = கண், மூக்கு, வாய், செவி, உடல் என்ற புலன்கள்
வாயில் = வழியாக
ஐந்தவித்தான் = ஐந்தையும் அவித்தான்
பொய்தீர் = பொய் தீர்ந்த
ஒழுக்க = ஒழுக்க
நெறிநின்றார் = வழியில் நின்றார்
நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்கள்
ஐந்தவித்தான் = ஐந்து + அவித்தான்.
யார் அந்த ஐந்தையும் அவித்தான்? முனிவர்களா ? துறவிகளா? ரிஷிகளா?
ஒரு பொருளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை மூன்று விதமாக பிரிக்கிறார்கள்.
தற்கிழமை
பிறிதின் கிழமை
செய்யுட் கிழமை
என்று மூன்று விதமான தொடர்பு உண்டு.
கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
சனிக் கிழமை என்றால் சனிக்கு உரிய கிழமை.
வியாழக் கிழமை என்றால் வியாழன் என்ற கோளுக்கு உரிய கிழமை.
முருகன் குறிஞ்சி நிலக் கிழவன் என்றால் முருகன் குறிஞ்சி நிலத்துக்கு உரிய தெய்வம் என்று பொருள்.
தற்கிழமை என்றால் என்னை விட்டு பிரிக்க முடியாது.
உதாரணமாக - என் கால், என் கை, என் ஞாபகங்கள், என் அனுபவங்கள்...இவற்றை என்னை விட்டு பிரிக்க முடியாது. என்னோடு சேர்ந்தது அது.
பிறிதின் கிழமை என்றால் , என்னுடையதுதான் ஆனால் என்னை விட்டு பிரிக்க முடியும்.
உதாரணமாக, நான் பையில் பணம் வைத்து இருக்கிறேன். அது என் பணம் தான். ஒரு திருடன் அதை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். இப்போது அது அவன் பணமாகி விட்டது அல்லவா.
மூன்றாவதான செய்யுட் கிழமை எதுவென்றால், என்னுடையதுதான், அதை என்னை விட்டுப் பிரித்தாலும் அது என்னுடையது தான்.
உதாரணமாக, கம்ப இராமாயணம் எழுதியது கம்பர். கம்ப இராமாயண புத்தகத்தை நான் வாங்கி விட்டால், அது நான் எழுதிய பாடல்களாகி விடுமா. யார் என்ன செய்தாலும், அது கம்பரின் பாட்டுத் தான். அவரை விட்டு பிரிந்து விட்டது. இருந்தாலும் அவர் அவரின் பாட்டுத் தான்.
அதற்கு, செய்யுட் கிழமை என்று பொருள்.
அதைத்தான் பரிமேலழகர் "ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல" என்கிறார்.
செய்யுட் கிழமை என்று அவர் மேலே சொன்னதன் அர்த்தம் விளங்குகிறதா?
"ஆறனுருபு" - அது என்பது
"செய்யுட் கிழமை" என்பது பிரித்தாலும் உரிமை மாறாது என்பது. கபிலரது பாட்டு என்பது போல என்கிறார்.
இப்போது குறளுக்கு வருவோம்.
அறம், தர்மம், "பொய் தீர் ஒழுக்க நெறி" எல்லாம் இறைவன் செய்தது. அதை வள்ளுவர் போன்றோர் எடுத்துச் சொல்லல்லாம். அனால், அது அவனுக்குரியது.
"நீடுவாழ் வார்" - நீண்ட நாள் வாழ்வார் என்றால் நூறு, இருநூறு வருடம் வாழ்வது அல்ல. முடிவில்லாத நீண்ட நாள். மிக மிக நீண்ட நாள் வாழ்க்கை என்பது வீடு பேற்றையே குறிக்கும்.
முதலில், மனதால் வழிபடுவது பற்றிக் கூறினார்.
பின், வாக்கால் வழி படுவது பற்றிக் கூறினார்.
இங்கே, உடலால் வழிபடுவது பற்றிக் கூறுகிறார்.
இந்த வழிபாட்டால், வீடு பேறு அடைவது பற்றிக் கூறினார்.
வழி படாவிட்டால்?
எனக்கு வீடு பேறு வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள் தானே. வீடாவது, பேறாவது அதெல்லாம் சும்மா கதை. எனக்கு அது வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு என்ன சொல்வது ?
வள்ளுவர் அதையும் யோசித்து அதற்கும் பதில் சொல்கிறார்.
அருமை.ஓரளவு நன்றாக புரிந்த மாதிரி தோன்றுகிறது!!
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteநன்றி.
கிழமை என்பதன் பொருள் இப்போதுதான் புரிந்தது.
ReplyDeleteநம் தமிழ் இலக்கியத்தில் எத்தனை முத்துக்கள் இருக்கின்றன!