திருக்குறள் - வான் சிறப்பு - சிறப்பொடு பூசனை செல்லாது
இறை நம்பிக்கை உள்ளவர்கள் அன்றாடம் இறை வழிபாடு செய்வார்கள். பெரிதாக இல்லாவிட்டாலும், ஒரு விளக்கை ஏற்றி, நீர் விளாவி, ஒரு கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வைத்து, இறைவன் மேல் ஓரிரண்டு தோத்திரம் சொல்லி வழி படுவார்கள்.
வழிபடுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அன்றாடம் அந்த முறையில் வழிபட முடியாது. அது வீட்டுக்கும் பொருந்தும், கோவில்களுக்கும் பொருந்தும்.
அன்றாட வழிப்பாட்டின் குறைகளை தீர்க்க, சில விஷேச நாட்களில் விரிவான பூசனைகள் செய்வார்கள்....திருவிழா, குடமுழுக்கு, போன்றவை. வீட்டில் கூட தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல், போன்ற விசேட நாட்களில் சிறப்பான பூஜை செய்யப்படும்.
அன்றாடம் செய்யும் பூஜைக்கு நித்யம் என்று பெயர்.
சிறப்பான பூஜைக்கு நைமித்யம் என்று பெயர்.
இதைத் தமிழில் பூசனை, சிறப்பு என்ற சொற்களால் குறிப்பார்கள்.
மழை இல்லாவிட்டால், இந்த இரண்டு பூசனையும் நடக்காது என்கிறார் வள்ளுவர்.
பாடல்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_27.html
(click the above link to contitnue reading)
சிறப்பொடு = சிறப்பானவற்றோடு
பூசனை = தினப்படி செய்யும் பூஜையும்
செல்லாது = நடக்காது
வானம் = வானம் (மழை)
வறக்குமேல் = வறண்டு போனால்
வானோர்க்கும் = வானில் உள்ள தேவர்களுக்கும்
ஈண்டு = இங்கு
இதில் பரிமேலழகர் சில நுட்பங்கள் சொல்கிறார்.
முதலாவது, "சிறப்பொடு பூசனை செல்லாது" என்ற தொடரில் செல்லாது என்பது ஒருமை. செல்லா என்று இருந்தால் பன்மை. சிறப்பு, பூசனை என்று இரண்டு இருப்பதால் அது பன்மைதானே வர வேண்டும்.
இலக்கணம் சலிப்பு தரும் என்று நினைப்பவர்கள் இதை விட்டு விடலாம். இது இல்லாமலும் பொருள் புரிந்து விடும்.
தமிழிலிலே வேற்றுமை உருபுகள் என்று ஒன்று உண்டு. அதில் மூன்றாம் வேற்றுமை உருபுகளாவன அன், ஆன், ஒடு, ஓடு என்பன.
இதில் ஒடு என்ற வேற்றுமை உருபை மட்டும் பார்போம்.
மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உடனிகழ்ச்சி உருபு என்று ஒரு பெயர் உண்டு. கூடவே நிகழ்வது.
இராமனோடு குகன் வந்தான் என்றால் இருவரும் ஒன்றாக வந்தார்கள் என்று அர்த்தம்.
பூவொடு சேர்ந்த நாரும் மணக்கும் என்றால் இரண்டும் ஒன்றாக மணக்கும் என்று பொருள்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், இராமன், குகன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். அப்படி என்றால் வந்தார்கள் என்ற பன்மை விகுதிதானே இருக்க வேண்டும்.
இராமனோடு குகன் வந்தார்கள் என்றல்லவா இருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்வது தவறு என்று நமக்குத் தெரிகிறது அல்லவா?
இராமனோடு குகன் வந்தான் என்பது தான் சரி. காரணம், ஒடு என்ற உருபு வந்தால் ஒருமை முடிவுதான் வரும்.
தலைவரோடு தொண்டன் வந்தான். தலைவரோடு தொண்டன் வந்தார்கள் என்று கூறினால் பிழை.
இங்கே, சிறப்போடு பூசனை என்று ஒடு உருபு வருவதால் செல்லாது என்ற ஒருமை விகுதி வந்தது.
இரண்டாவது, ஏன் முதலில் சிறப்பைச் சொல்லி பின் பூசனையை சொன்னார் என்ற கேள்விக்கு பரிமேலழகர் உரை செய்யும் போது "சிறப்பு" என்பது பூசனையில் உள்ள குறைகளை நீக்க வந்ததால் அதை முதலில் கூறினார் என்றார்.
எதை முதலில் கூற வேண்டும், எதை பின்னால் கூற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
நாயோடு இராமன் வந்தான் என்று சொல்லக் கூடாது.
இராமனோடு நாய் வந்தது என்று கூற வேண்டும்.
எது உயர்வோ அதை முதலில் சொல்ல வேண்டும் என்பது மரபு.
மழை இல்லாவிட்டால், மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அல்ல, கடவுள்களுக்கு நடக்கும் பூஜையும் நடக்காது என்கிறார்.
தேவர்களுக்கு செல்ல வேண்டிய அவிர் பாகம் போன்றவை சென்று சேராது. அவர்களும் வருந்துவார்கள் என்று கூறுகிறார்.
"இராமனோடு நாய் வந்தது" என்று சொன்னால், ஏதோ இராமனை வாயில் கவ்விக்கொண்டு நாய் வந்த மாதிரிப் பொருள் படவில்லையா?
ReplyDelete"இராமனோடு நாய் நடந்து வந்தது" என்று வைத்துக்கொள்வோம். பொருள் விளங்கும்.
ReplyDelete