பட்டினத்தார் பாடல் - விதி ஏட்டை கிழிக்க
இருந்த செல்வம் அத்தனையும் ஒரே நாளில் உதறித் தள்ளிவிட்டு துறவியானார் பட்டினத்தார்.
வாழ்வின் நிலையாமை, செல்வத்தின் நிலையாமை, மனிதர்கள் சிற்றின்பத்தின் பால் அலையும் அர்த்தமற்ற செயல்கள் இவற்றைப் பற்றி வெகுவாகப் பாடி இருக்கிறார்.
நாம் பெரிதாக நினைக்கும் உறவுகள், செல்வம், வாழ்கை தரும் இன்பங்கள், எதிர் காலம் பற்றிய கனவுகள், பயங்கள் இவற்றை எல்லாம் "பூ" என்று ஊதித் தள்ளுகிறார் பட்டினத்தடிகள்.
விதி விதி என்று நாம் சில சமயம் நொந்து கொள்வோம். அந்த பிரமன் எழுதிய விதி என்ற ஏட்டினை கிழித்து எரிய ஒரு வழி இருக்கிறது. திரு ஒற்றியூர் என்ற திருத்தலத்தில் நடக்கும் பக்தர்களின் பாதங்கள் நம் தலை மேல் படும் படி அந்தத் தெருவில் உருள்வதே விதி என்ற ஏட்டினை கிழிக்கும் என்கிறார் பட்டினத்தடிகள்.
பாடல்
சுடப்படு வார் அறி யார், புரம் மூன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே!
பொருள்
சுடப்படு வார் = இறந்த பின் இந்த உடல் சுடுகாட்டில் வைத்து எரிக்கப் படும். சுடப் படும்.
அறி யார் = அதை யாரும் அறிவது இல்லை.
புரம் மூன்றையுஞ் சுட்டபிரான் = திரி புரம் மூன்றையும் சுட்ட பிரான் (சிவன்)
திடப்படு மாமதில் = உறுதியான பெரிய சுவர்களைக் கொண்ட
தென் = தெற்கு
ஒற்றி யூரன் = ஒற்றியூர் என்ற ஊரில்
தெருப்பரப்பில் = தெருவில்
நடப்பவர் = நடப்பவர்கள்
பொற்பதம் = பொன் போன்ற பாதங்கள்
நந்தலை = நம் தலை மேல்
மேற்பட = மேல் பட
நன்குருண்டு = நன்றாக உருண்டு
கிடப்பது = கிடப்பது
காண் மன மே = கண்டு கொள் மனமே
விதி ஏட்டைக் கிழிப்பதுவே! = விதி என்ற ஏட்டை கிழிப்பதுவே
வாழ்வைப் பற்றி ஒரு நிதானம் பிறக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டி இருக்காது - பட்டினத்தார் பாடல்களைப் படித்தால். ஒண்ணுமே பெரிய விஷயம் இல்லை என்று தோன்றும்.
திரு ஒற்றியூரில் உள்ள சிவனின் மேல் "ஒற்றியூர் உடைய கோவே " என்று உருகி உருகி நாவுக்கரசர் பாடி இருக்கிறார். நேரம் இருப்பின் அதையும் படித்துப் பாருங்கள்.
அப்படித் தெருவில் உருண்டால் எப்படி நம் ஆணவம், கவலைகள் எல்லாம் மறந்து போய், ஒரு புது விதத்தில் நம்மை நாம் காண்போம் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிவன் என்று ஒருவர் இருக்கிறாரோ இல்லையோ, நம்மை நாமே எண்ணிப் பார்ப்பது நல்லதுதானே!
ReplyDelete