நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம்
பெண்ணின் அழகில் மயங்காதவர்கள் யார் ?
ஐம்புலன்களுக்கும் இன்பம் தருபவள் அவள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
அவள் ஒரு அழகான பெண். அவள் கிட்ட போனாலே ஒரு இனிய மணம் வீசும்.தாமரை இதழ்கள் போன ஆதாரங்கள். நூல் போல இடை; அன்னம் போல நடை, அழகிய மார்புகள், பிறை சந்திரன் போன்ற நெற்றியும்,மீன் போன்ற கண்கள், பால் போல மொழியும் எல்லாம் அவளிடம் இருக்கும். ஒரு நாள் அவள் இறந்து போனாள் . அவளைத் தேடி சுடுகாடு போனோம். அங்கே இவை ஒன்றும் இல்லை. காய்ந்த குசிகளை அடுக்கி வைத்தது போல சில எலும்புகள் தான் கிடந்தன, தேடிச் சென்ற அழகியைக் காணோம்.
பாடல்
தோல்வாசம் துறந்திறந்து கிடந்தஅழ
கியைக்காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள்ளென்பின் குவையொன்றே
கண்டனஞ்செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையுமன நடையுமணி
தனமுமதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும்பான் மொழியுங்கா
ணாமலுளந் திகைத்தோமன்னோ.
சீர் பிரித்த பின்
தோல் வாசம் துறந்து இறந்து கிடந்த அழகியை
காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள் எலும்பின் குவை ஒன்றே
கண்டனம் செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையும் அன்ன நடையும் அணி
தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும் பால் மொழியும்
காணாமல் உள்ளம் திகைத்தோம் அன்னோ.
பொருள்
தோல் வாசம் = அவள் உடலில் இருந்து வரும் வாசம்
துறந்து = விட்டு
இறந்து கிடந்த அழகியை = இறந்து கிடக்கும் அழகியை
காணச் = காண்பதற்கு
சுடலை சென்றோம் = சுடுகாட்டிற்குப் போனோம்
கோல்போன்ற = குச்சி போன்ற
வெள் எலும்பின் = வெண்மையான எலும்பின்
குவை ஒன்றே கண்டனம் = குவியல் ஒன்றைக் கண்டோம்
செங் குமுத வாயும் = சிவந்த தாமரை போன்ற வாயும் (இதழ்களும்)
நூல்போன்ற இடையும் = நூல் போன்ற சிறிய இடையும்
அன்ன நடையும் = அன்னம் போன்ற நடையும்
அணி தனமும் = ஆபரணங்கள் அணிந்த மார்புகளும்
மதி நுதலும்= நிலவு போன்ற நெற்றியும்
வாய்ந்த = கொண்ட
சேல்போன்ற விழியும் = மீன் போன்ற விழியும்
பால் மொழியும் = பால் போன்ற மொழியும்
காணாமல் உள்ளம் திகைத்தோம் அன்னோ= காணாமல் உள்ளம் திகைத்தோம்
இத்தனயும் ஒரு நாளில் சில பல எலும்புக் குவியலாக மாறிவிடும்.
அந்த எலும்பு குவியலுக்கா இத்தனை உருக்கம், பாடல், காதல், கலவி, வலி, வேதனை, இலக்கியம், சண்டைகள்....?
இதே செய்தி பல பாடல்களில் வந்தாலும், இது ஒரு புது முறையில் சொல்லியிருக்கிறது! நன்றி.
ReplyDelete