Monday, October 6, 2014

திருவிளையாடற் புராணம் - சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன ?

திருவிளையாடற் புராணம் - சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன ?


திருவிளையாடற் புராணம் சாதாரண மனிதர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குக்கிறது.

இறைவன் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான் என்ற நம்பிக்கையைத் தரும் நூல்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்ந்தார்ப் போல மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்த இறைவனால் வந்தி என்ற வயதான பெண்ணும் அருள் பெற்றாள் .

ஒரு நாள் வைகை கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரையை உயர்த்த வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணை இட்டான்.

வந்தி என்ற ஒரு மூதாட்டி மதுரையில் வாழ்ந்து வந்தாள். கணவனும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. பிட்டு விற்று வாழ்ந்து வந்தாள் .

அவளுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது.

சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன என்று இருப்பவள்.

வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவில்லை என்றால் பாண்டிய மன்னன் தண்டிப்பானே, நான் என்ன செய்வேன் என்று வருந்துகிறாள்.

பாடல்

பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை 
                                                            என்பது 
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் 
                                                            நாள் 
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து 
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே.

பொருள்

பிட்டு விற்று = பிட்டு விற்று

உண்டு வாழும் = அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கொண்டு வாழும்

பேதையேன் = பேதையேன்

இடும்பை = துன்பம்

என்பது = என்பது

எள் துணை யேனும் இன்றி = எள் அளவும் இன்றி

இரவி எங்கு எழுகென்று = சூரியன் எந்த பக்கம் எழுந்தால் என்ன என்று

இந்நாள் மட்டு  = இன்று வரை

 நின் அருளால்= இறைவா, உன் அருளால்

இங்கு வைகினேற்கு = இங்கு வாழ்ந்து வந்த எனக்கு

இன்று வந்து விட்டது = இன்று வந்து விட்டது 

ஓர் இடையூறு = ஒரு தடங்கல்

ஐய = ஐயா

மீனவன் ஆணை யாலே.= மீன் கொடி கொண்ட பாண்டிய மன்னவனின் ஆணையால்

துன்பம் வரும் போது துன்பம் வந்து விட்டதே என்று வருந்துகிறோம். வந்தி வருந்தியதைப்  போல. அவளுக்குத் தெரியாது, இந்தத் துன்பம் தான் மிகப் பெரிய, கிடைத்தற்கரிய இறைவனை அவள் வீட்டின் வாசலுக்கு கொண்டு வரப் போகிறது என்று.

துன்பம் வரும் போது துவண்டு  போகாதீர்கள்.

யாருக்குத் தெரியும் உங்கள் துன்பம் உங்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது என்று.

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று இருங்கள்.

துன்பத்தில் கிடந்து வருந்துபவர்களுக்கு , "உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கும்" என்று மீண்டும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டுவது நம் இலக்கியங்கள்.

இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு நன்மை.




No comments:

Post a Comment