இராமாயணம் - பெண்களின் மடியில்
பதவி வந்தால் மனிதன் எப்படி மாறிவிடுகிறான் !
இராமனின் துணையோடு வாலியோடு சண்டை போட்டு, கிஷ்கிந்தையை பிடித்து விட்டான் சுக்ரீவன்.
சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்னவன் அதை அப்படியே மறந்து விட்டான்.
இராமன் இலக்குவனை தூது அனுப்புகிறான்.
இலக்குவன் மிகுந்த கோபத்தோடு வருகிறான்.
இலக்குவன் வரும் செய்தியை சுக்ரீவனிடம் சொல்ல அங்கதன் சுக்ரீவன் இருக்கும் மாளிகைக்குச் செல்கிறான்.
அங்கே சுக்ரீவன் இருந்த நிலை .....
பெரிய படுக்கை. அதில் மலர்கள் தூவப் பட்டிருகின்றன. படுக்கை எல்லாம் எல்லாம் இளம் பெண்கள். நீண்ட கூந்தல் உள்ளவர்கள். இளமையான மார்புகளை கொண்டவர்கள். அவர்கள் மடியில் கிடக்கிறான் சுக்ரீவன். தூக்கத்திற்கு விருந்தாக இருந்தான் என்கிறார் கம்பர்.
பாடல்
நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,
தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர,
விளை துயிற்கு விருந்து விரும்புவான்.
பொருள்
நளன் இயற்றிய = நளன் கட்டிய
நாயகக் கோயிலுள் = அரண்மனையில்
தள மலர்த் தகைப் = நிறைய மலர்கள் உள்ள
பள்ளியில் = படுக்கையில்
தாழ் குழல் = நீண்ட கூந்தலை உடைய
இள முலைச்சியர் = இளமையான பெண்கள்
ஏந்து அடி தைவர = மடியில் ஏந்த
விளை துயிற்கு = விளையும் துயிலுக்கு (தூக்கத்திற்கு)
விருந்து விரும்புவான் = விருந்தாக விரும்புவான்
சொன்ன வாக்கை மறந்து இன்பத்தில் மிதக்கிறான்.
அப்புறம் என்ன ஆச்சு ?
No comments:
Post a Comment