Friday, April 3, 2015

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை 


விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழரின் பண்பாடு. விருந்தோம்பல் என்று அதற்கு ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்  வள்ளுவர். விருந்தோம்புதலை ஒரு அறம் என்றே நம் முன்னவர்கள் கொண்டார்கள்.

இன்று நம் பிள்ளைகளுக்கு விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று தெரிவதில்லை.

வீட்டிற்கு ஒருவர் வந்தால் கூட, அவர்கள் பாட்டுக்கு அவர்கள் அறையில் இருக்கிறார்கள். ...அவர்களின் கை பேசி, கணணி, youtube , facebook என்று இருக்கிறார்கள்.

இப்படி ஒரு இரண்டு தலைமுறை சென்றால் விருந்து என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்.

அவர்களை விட்டு விடுவோம். எதற்கு எடுத்தாலும் இளைய தலைமுறையையே ஏன் குற்றம் சொல்ல வேண்டும். எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று  நமக்கே சரியாகத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தால் அல்லவா  அதை பிள்ளைகளுக்குச் சொல்லி தர.

விவேக சிந்தாமணி சொல்லித் தருகிறது....எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று.

முதலில் விருந்தினரை ஆவலோடு, ஆச்சரியத்தோடு, வியந்து நோக்க வேண்டும்.

இரண்டாவது, நல்ல வார்த்தைகளை இனிமையாக சொல்ல வேண்டும்.

மூன்றாவது, அவர்களை நன்றாகப் பார்க்க வேண்டும். முகத்தை எங்கேயோ வைத்துக் கொண்டு, டிவி பார்த்துக் கொண்டு, கை பேசியில் chat பண்ணிக்கொண்டு "ம்ம்..சொல்லுங்க...அப்புறம் " என்று விருந்தினர்களோடு பேசக் கூடாது. சில பேர் விருந்தினர்களை அழைத்துக் கொண்டு உயர்ந்த உணவு விடுதிக்குப் (hotel ) போவார்கள்..அங்கு போய் அமர்ந்து கொண்டு, ஆளாளுக்கு ஒரு   கை பேசியில் (cell போன்) குறுஞ் செய்தி (sms ) அனுப்பிக் கொண்டு இருப்பார்கள். எல்லார் கவனமும் அவர்களின் கை பேசி மேல். அப்படி அல்ல, வந்த விருந்தினர்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்.

நான்காவது, அவர்களை "வாருங்கள்" என்று அழைக்க வேண்டும்

ஐந்தாவது, அவர்களை எழுந்து சென்று வரவேற்க வேண்டும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே "வாங்க" என்று சொல்லக் கூடாது.

ஆறாவது, அவர்களோடு முன்னாளில் எப்படி எல்லாம் மகிழ்வாக இருந்தோம் என்று நினைவு படுத்த வேண்டும்.

ஏழாவது, விருந்தினர்களின் அருகில் இருக்க வேண்டும். அவர்களை விட்டு விலகக் கூடாது. "இது தான் உங்கள் அறை ...ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் " என்று சொல்லிவிட்டு நாம் பாட்டுக்கு நம் வேலையை பார்க்கக் போய் விடக் கூடாது.

எட்டாவது, அவர்கள் செல்லும் போது அவர்கள் கூடவே கொஞ்ச தூரம் போய் வழி அனுப்ப வேண்டும். "சரி, கிளம்புறீங்களா, அப்புறம் பாக்கலாம், போகும் போது அந்த கதவை அப்படியே சாத்தி விட்டு போங்க " என்று சொல்லக் கூடாது.

ஒன்பதாவது, அவர்கள் போகும் போது நல்லதாக அவர்கள் மனம் மகிழும்படி சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும் "நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்....அடிக்கடி வந்து போங்க...வீட்டுல எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்க..பத்திரமா போயிட்டு வாங்க " என்று சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும்.

பாடல்

"விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே."


பொருள்

"விருந்தின னாக = விருந்தினனாக

ஒருவன் = ஒருவன்

வந் தெதிரில் = எதிரில் வந்தால்

வியத்தல் = முக மலர்ச்சியுடன் வரவேற்றல்

நன் மொழியினி துரைத்தல் = நல்ல வார்த்தைகளை இனிமையாக உரைத்தல்

திருந்துற நோக்கல் = நன்றாக அவர்களை பார்த்தல்

வருகென வுரைத்தல் = "வருக" என்று உரைத்தல்

எழுதல் = இருந்த இடத்தை விட்டு எழுந்திரித்தித்தல்

முன் மகிழ்வன செப்பல் = முன்பு மகிழ்ந்த நிகழ்வுகளை சொல்லுதல்

பொருந்து = பொருந்தும்படி

மற் றவன்தன்  அருகுற இருத்தல் = அவர்கள் அருகில் இருத்தல்

போமெனிற் = திரும்பி போகின்ற போது

பின்செல்வ தாதல் = பின்னால் போதல்

பரிந்து = அன்போடு

நன் முகமன் வழங்கல் = நல்ல புகழுரைகளை கூறுதல்

இவ் வொன்பான் =  இந்த ஒன்பது

ஒழுக்கமும் = ஒழுக்கமும்

வழிபடு பண்பே. = விருந்தினர்களை போற்றும் முறை

இதை ஒரு ஒழுக்கமாகவே சொல்லி இருக்கிறார்கள் நம்  முன்னவர்கள்.



1 comment:

  1. .I think mostly I follow them. But now I will be very careful to treat guests properly. But my parents followed it same way.

    ReplyDelete