திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?
சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலோ , அல்லது வீட்டிலேயே கும்பிட்டாலோ சிலருக்கு பக்தி இருக்கும், சிலருக்கு பயம் இருக்கும், சிலருக்கு குழப்பம் இருக்கும்....
யாருக்காவது இறைவன் மேல் அன்பு இருக்கிறதா ?
அன்போடு யார் வழி படுகிறார்கள் ?
இறைவனை வழிபடுதல் என்றால் இந்த அனைத்தையும் வழிபடுதல் என்றே பொருள்.
இந்த உலகம், இதில் உள்ள உயிர்கள் அனைத்தின் தொகுதி இறைவன்.
மரம், செடி, கொடி , மழை, மலை, காதலன், காதலி, பிள்ளைகள், யுத்தம், சத்தம்...எல்லாம்...எல்லாம் ...நிறைந்த ஒன்றுதான் இறைவன்.
அவனை, அவளை, அதை நினைத்தால் அன்பு பிறக்காதா ?
நீங்கள் எதன் மேல் அன்பு செலுத்தினாலும் அது இறைவன் மேல் அன்பு செலுத்தியதாகததான் அர்த்தம் ஏன் என்றால் அணித்திலும் இறைவன் இருக்கிறான்.
எதிலுமே அன்பு இல்லாதவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.
என்பில் அதனை வெயில் போலச் சுடுமே
அன்பிலதனை அறம்
என்பார் வள்ளுவர்.
அன்பில்லாதவனை, அறம் சுடும் எப்படி என்றால் புழுவை வெயில் சுடுவது போல.
அன்பு இல்லாதவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அவனைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும்.
பாடல்
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பொருள்
வன்புலால் வேலும் அஞ்சேன் = மாமிசம் ஒட்டி இருக்கும் வேலுக்கு அஞ்சேன்
வளைக்கையார் = வளையல் அணிந்த கையை உள்ள பெண்களின்
கடைக்கண் அஞ்சேன் = கண்ணுக்கு அஞ்சேன்
என்பெலாம் = எலும்பு எல்லாம்
உருக = உருக
நோக்கி = பார்த்து
அம்பலத் தாடு கின்ற = அம்பலத்தில் ஆடுகின்ற
என் = என்னுடைய
பொலா மணியை = துளை இடப்படாத மணியை
ஏத்தி = புகழ்ந்து
இனிதருள் = அவனுடைய இனிய அருளை
பருக மாட்டா = பருகாமல் இருக்கும்
அன்பிலா தவரைக் கண்டால் = மனதில் அன்பு இல்லாதவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே = நான் அச்சப் படுகிறேன்
அன்பில்லாதவர்களை கண்டால் விலகிப் போங்கள்.
அன்பு செய்யுங்கள். பக்தி வரும் பின்னால்.
அன்பு கருணையாக மாறும்.
கருணை துறவில் கொண்டு விடும்.
துறவு முக்தி தரும்.
ஆரம்பம் அன்புதான்.
அன்பே சிவம்.
Nice
ReplyDeleteஅருமை!
ReplyDeleteAnbu, Bakhthi, Karunai Thuravu Mukhthi.Arindhu anubhavika vendiya vishayam.
ReplyDelete