நாலடியார் - இம் என பெய்யும் மழை
காமம் !
காமம் என்றால் ஏதோ பேசக் கூடாத ஒன்று, மறைத்து வைக்கப் படவேண்டியது என்று ஒதுக்கி வைக்கிறோம்.
பெற்றோரும் பிள்ளைகளும், சகோதரனும் சகோதரியும், ஆசிரியரும் மாணவரும் ஒன்றாக படிக்கும் காமம் சம்பந்தப் பட்ட புத்தகம் ஏதேனும் இருக்கிறதா ?
திருக்குறளில் உள்ள காமத்துப் பாலை, ஒரு தகப்பனும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். அதில் இல்லாத காமம் இல்லை. காதல் , காமம் , ஊடல், பிரிவு, கனவு, நாணம், வெட்கம், கூடல், களவு, ஊர் பேசும் பேச்சு என்று எல்லாம் இருக்கிறது.
இருந்தும், கொஞ்சம் கூட விரசம் இல்லாதது.
நம் இலக்கியம், காமத்தை விலக்கி வைக்க வில்லை.
அறம் - பொருள் - இன்பம் என்று அறவழியில் நின்று ஈட்டிய பொருளை குடும்ப வாழ்வில் நின்று எப்படி இன்பம் அனுபவிப்பது என்று சொல்கிறது நம் இலக்கியம்.
நாலாடியாரில் வரும் ஒரு பெண்.
காதலனை பிரிந்து இருக்கிறாள்.
மழைக் காலம்.
"சோ " மழை பெய்கிறது.
இடி மின்னல்.
காதலனின் நினைவு அவளை வாட்டுகிறது.
இந்த இடி சத்தம் ஏதோ இழவு வீட்டில் அடிக்கும் பறை ஒலி போல இருக்கிறது அவளுக்கு.
பிரிவு அவ்வளவு வாட்டுகிறது அவளை.
பாடல்
தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
கொஞ்சம் சீர் பிரிப்போம்
தம் தமர் காதலர் தார் சூழ் அணி அகலம்
விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு - "இம்" என
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
பொருள்
தம் = தம்முடைய
தமர் = உறவான
காதலர் = காதலர்
தார் = மாலை
சூழ் = அணிந்த
அணி அகலம் = அணிகலன்களை அணிந்த அகன்ற மார்பில்
விம்ம முயங்கும் = விம்மி எழும் மார்பு அழுந்த கட்டி அணைக்கும்
துணை இல்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு (பிரிந்து இருப்பவர்களுக்கு)
"இம்" என = "இம்" என்ற ஒலியோடு
பெய்ய = பெய்யும்
எழிலி = மழை மேகம் (என்ன அழகான பெயர் சொல்)
முழங்கும்= ஒலிக்கும்
திசை எல்லாம் = எல்லா திசைகளிலும்
நெய்தல் = மழை
அறைந்தன்ன நீர்த்து = பறை அறைவது போல இருக்கிறது
அப்பா...! ரொம்ப நாளைக்கு அப்புறம், நீத்தல், பக்தி, இப்படி எல்லாம் இல்லாமல், உள்ளத்தைத் தொடும்படியான ஒரு பாடல்! நன்றி.
ReplyDelete