இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்
இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டான் என்று நினைத்து பரதன் மேல் போர் தொடுக்க தயாராக நிற்கிறான் குகன். இராமன் மேல் அன்பு கொண்டவன் குகன் என்று மந்திரியாகிய சுமந்திரன் சொல்லக் கேட்டு, குகன் மேல் அன்பு கொண்டு அவனைக் காண எழுகிறான் பரதன்.
அவன் எழுந்தவுடன் அவனுடன் சத்ருக்கணும் கிளம்புகிறான். அருகில் வரும் அவர்களைக் கண்டு துணுக்குறுகிறான் குகன்.
பாடல்
என்று எழுந்த தம்பியொடும்,
எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
துண்ணென்றான்.
பொருள்
என்று எழுந்த தம்பியொடும் = கூடவே எழுந்த தம்பியோடும் (சத்ருக்கனன்)
எழுகின்ற காதலொடும் = மனதில் எழுகின்ற காதலோடும்
குன்று எழுந்து சென்றது எனக் = பெரிய குன்று எழுந்து சென்றது போல
குளிர் = குழறிந்த
கங்கைக் கரை = கங்கையாற்றின் கரையை
குறுகி = அடைந்து, நெருங்கி
நின்றவனை நோக்கினான் = நின்ற பரதனை நோக்கினான்
திரு மேனி நிலை உணர்ந்தான் = பரதனின் உடல் இருக்கும் நிலையை உணர்ந்தான்
துன்று = நெருங்கிய
கரு = கருமையான
நறுங் = நறுமணம் வீசும்
குஞ்சி = தலை முடியை உடைய
எயினர் = வேடர்
கோன் = அரசன்
துண்ணென்றான் = துணுக்குறான்
என்று எழுந்த தம்பியொடும் - "நீயும் என்னுடன் வா" என்று சத்ருகனனிடம் பரதன் சொல்லவில்லை. பரதன் எழுந்தவுடன், அவன் கூடவே சத்ருக்கனனும் எழுந்தான். குறிப்பறிந்து செய்தான்.
பிறர் உள்ளத்தில் இருப்பதை அறிபவனை தெய்வத்தோடு ஒப்பிட்டு கூறுகிறார் வள்ளுவர்.
ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
ஏன் என்றால், சொல்லாமலேயே, மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் தெய்வம் ஒன்றுக்குத்தான் உண்டு. அரசன், மேலதிகாரி, ஆசிரியர், துணைவன், துணைவி, பிள்ளைகள் , பெற்றோர் யாராயிருந்தாலும் அவர்களின் மனதில் உள்ளதை அறிந்து செயல்படுபவன் உயர்ந்தவன்.
சொல்லாமலேயே செய்ய வேண்டும்.
சிலர் , சொன்ன பின் செய்வார்கள்.
வேறு சிலர் சொன்ன பின்னும் செய்ய மாட்டார்கள்.
உயர்வில் இருந்து தாழ்வுக்கு தர வரிசை அப்படியே.
பரதனின் உள்ளக் குறிப்பை சத்ருக்கன் அறிந்தான்.
பயிற்சி செய்து பாருங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களிடம், உங்கள் மேல் அன்பு கொண்டவர்களிடம், நீங்கள் அன்பு செய்பவர்களிடம் அவர்கள் கேட்காமலேயே , சொல்லாமலேயே அவர்களின் மனதை அறிந்து ஏதாவது செய்து பாருங்கள் . வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று தெரியும்.
"உனக்கு பிடிக்கும் என்று இதை வாங்கி வந்தேன்"
"உங்களுக்கு பிடிக்கும் என்று இதைச் செய்தேன் "
என்று செய்து பாருங்கள்.
"துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்"
இதில் துன் என்ற சொல் மிக சுவாரசியமானது.
துன் என்றால் நெருக்குதல்.
துன்னியார் = நண்பர்
துன்னார் = பகைவர்
துன்னர் = தையல்காரர். இரண்டு துண்டு துணிகளை ஒன்றாக சேர்ப்பதால்
துன்னு = உடம்போடு ஒட்டிய தசை
அருகில் வந்த பரதனைக் கண்டு குகன் துணுக்குற்றான்
ஏன் ?
இதில் துன் என்ற சொல் மிக சுவாரசியமானது.
துன் என்றால் நெருக்குதல்.
துன்னியார் = நண்பர்
துன்னார் = பகைவர்
துன்னர் = தையல்காரர். இரண்டு துண்டு துணிகளை ஒன்றாக சேர்ப்பதால்
துன்னு = உடம்போடு ஒட்டிய தசை
அருகில் வந்த பரதனைக் கண்டு குகன் துணுக்குற்றான்
ஏன் ?
மற்றவர் மனம் அறிந்து அவர்கள் சொல்லாமல் இருக்கும்போதே செய்வதின் மேன்மை பற்றி கூறியது இதமாக இருந்தது.
ReplyDeleteதொடர் கதைகளில் முடிப்பது போல் சட்டென்று முடித்து அடுத்தது என்ன என்கிற ஆவலுடன் வாசகர்களை வைத்து விடுகிறீர்கள்.