இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?
இராமனை மீண்டும் அழைத்து வந்து ஆட்சியை ஒப்படைக்க நினைத்து பரதன் வருகிறான். அவன் ஏதோ இராமன் மேல் படை எடுத்து வருவதாக எண்ணி பரதன் மேல் போர் தொடுக்க துணிகிறான் குகன். பரதன் அருகில் வந்த பின், அவனுடைய தோற்றத்தைக் கண்டு தான் நினைத்தது தவறென்று நினைக்கிறான் குகன்.
"பரதனைப் பார்த்தால் இராமனைப் போல இருக்கிறான். பக்கத்தில் இருக்கும் சத்ருகன் , இலக்குவனைப் போல இருக்கிறான். பாரதனோ ஒரு முனிவன் போல தவ வேடம் கொண்டு நிற்கிறான். துன்பத்தில் தோய்ந்த முகம். இராமன் இருக்கும் திசை பார்த்து தொழுகிறேன். இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா ?"
என்று எண்ணுகிறான்.
பாடல்
நம்பியும் என் நாயகனை
ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்.
பொருள்
நம்பியும் = ஆடவர்களில் சிறந்தவனான பரதனும்
என் நாயகனை = என் நாயகனான இராமனை
ஒக்கின்றான்; = போல இருக்கிறான்
அயல் நின்றான் = அருகில் நிற்கும் சத்ருக்கனன்
தம்பியையும் ஒக்கின்றான் = இலக்குவனைப் போல இருக்கின்றான்
தவம் வேடம் தலைநின்றான் = தவ வேடம் புனைந்து நிற்கின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை = அளவற்ற துன்பத்தில் இருக்கிறான்
திசை நோக்கித் தொழுகின்றான்= இராமன் இருக்கும் திசையைப் பார்த்து வணங்குகிறான்
எம்பெருமான் = என்னுடைய பெருமானாகிய இராமனின்
பின்பிறந்தார் = பின்னால் பிறந்தவர்கள்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான் = தவறு இழைப்பார்களா ? (மாட்டார்கள்)
குகன் பரதனை பற்றி தவறாக நினைத்து இருந்தான். என்னதான் இராமன் என்னை தம்பி என்று சொன்னாலும், நான் தவறு செய்து விட்டேனே. பரதனை தவறாக நினைத்து விட்டேனே. இராமனுக்குப் பின் பிறந்தவர்கள் எப்படி தவறு செய்வார்கள். நான் இராமானுக்குப் பின் பிறக்கவில்லை. அதனால் தான் இந்த தவற்றை செய்து விட்டேன் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.
இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம் ?
ஒன்று, இராமனின் நல்ல குணங்களை பார்த்து அவர்களும் அதைப் பின் பற்றுவார்கள் என்று ஒரு பொருள்.. இராமாயணம் என்றாலே அது தானே. இராமன் + அயனம். அயனம் என்றால் பாதை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று சூரியனின் பாதையை சொல்லுவதைப் போல. இராமன் பின் பிறந்தவர்கள் இராமன் வழி நடப்பார்கள். தவறு செய்ய மாட்டார்கள்.
இரண்டாவது, தவறு செய்தால் இராமானுக்குப் பிடிக்காது. அவன் மனம் வருந்தும் என்று நினைத்து தவறு செய்ய மாட்டார்கள். கானகம் செல்லும் படி தசரதன் ஆணை இட்டதும், இராமன் கிளம்பி விட்டான். இலக்குவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கோபம் கொள்கிறான். கொந்தளிக்கிறான். இராமன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கேட்கவில்லை.
இறுதியாக, பெரியவர்கள் சொல்வதை கேட்பது என் கொள்கை. உனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை என்று வருந்திச் சொன்னவுடன், தன் சினத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இராமன் பின்னாலேயே கிளம்பி விடுகிறான் இலக்குவன்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பாடம் இங்கே நடக்கிறது.
தவறு செய்யும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு வரும். பொய் சொல்ல, பிறர் பொருளை எடுத்துக் கொள்ள, கோபம் கொள்ள, இன்ன பிற தீய செயல்களில் ஈடுபட சந்தர்ப்பம் வரும்.
பிள்ளைகள் இரண்டு விதமாய் தங்களை தடுத்துக் கொள்ள முடியும்.
ஒன்று, பெற்றோருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், அடி பின்னி விடுவார்கள் எனவே செய்யக் கூடாது என்பது ஒரு வழி.
இரண்டாவது, நான் இதைத் செய்தால் என் பெற்றோர்கள் வருந்துவார்கள். அவர்களை நான் வருத்தம் கொள்ளச் செய்யக் கூடாது என்று நினைத்து செய்யாமல் இருப்பது இரண்டாவது வழி.
இரண்டாவது வழி எப்போதும் துணை நிற்கும். எத்தனை நாள் பிள்ளையை அடிக்க முடியும் ?
ஆனால்,பிள்ளைகள் அப்படி நினைக்க வேண்டும் என்றால் பிள்ளைகள் மேல் அன்பைக் கொட்டி வளர்க்க வேண்டும். எப்போதும் கண்டிப்பு என்றால், பிள்ளைகள் சலித்துப் போவார்கள்.
இராமனின் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் அந்தத் தவறு இராமனுக்கு வருத்தம் தரும் என்ற காரணத்தால்.
இராமனின் ஆளுமை, அவன் தோற்றம், அவன் நடத்தை எல்லாம் அவனைச் சேர்ந்தவர்களை அவன் மேல் அன்பு கொள்ளச் செய்கிறது. எனவே, அவர்கள் தவறு செய்யய மாட்டார்கள்.
இந்த 'பின் பிறந்தார்' என்பதை சற்று விரித்து பொருள் கொண்டால் , இராமனை பின் பற்றப் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.
இராமனை வணங்குபவர்கள், அவன் காட்டிய வழியைப் பின் பற்றுபவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பது முடிவு.
அப்படியே தவறு செய்தாலும், உணர்ந்து வருந்தி திருத்திக் கொள்வார்கள். குகனைப் போல.
பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு ?
பிள்ளைகள் தவறு செய்தால் திருத்திக்கொள்ள இரண்டு வழிகள் பற்றி எழுதியது மிக அற்புதமாக இருந்தது.
ReplyDeleteபின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு'' என்கிற வார்த்தைகளுக்கு ஒசத்தியாக பல அர்த்தங்களை விவரித்து ராமனின் சிறப்பையும் அவன் கூடப்பிறந்தவர்களின் நல்ல குணங்களையும் காண்பித்து விட்டீர்கள்
ReplyDeleteஇப்படியெல்லாம் என்னால் யோஜித்து பார்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தையும் உண்டாக்கி விட்டீர்கள்!!
மிக அழகாக எழுதுகிறீர்கள், படிக்கும் போது கண்கள் பனித்து விடுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், முக்கியமாக தனிமை, அமைதி வேண்டும்போதெல்லாம் உங்கள் எழுத்தை படிப்பது தான் என் பொழுது போக்கு. உங்கள் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ReplyDelete