இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்
இராவணனிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தன. இருந்தாலும், அவனை அரக்கன் என்று தான் உலகம் கூறுகிறது. அவன் தம்பி வீடணனை விபீஷண ஆழ்வார் என்று உலகம் கொண்டாடுகிறது. குலம் ஒன்றுதான். ஒருவன் அரக்கன், இன்னொருவன் சிறந்த பக்திமான். இவை பிறப்பினால் வருவது இல்லை.
பின் எதனால் வருகிறது ? ஏதோ சில குணங்களால் வருகிறது. அவை என்னென்ன குணங்கள் ? அந்த குணங்கள் இருப்பவர்கள் அரக்கர்கள் தான் அவர்கள் பிறப்பால் எந்த குலமானாலும்.
அப்படி என்றால் அந்த குணங்களை கட்டாயம் தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து வாழ வேண்டும் அல்லவா ?
அவற்றை தவிர்த்து வாழ்ந்தால் தான் நாம் அரக்கர்களாக மாட்டோம்.
முதல் அரக்க குணம்...அன்பை காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது. இராவணனுக்குள் அன்பு இருக்கிறது. மகன் இறந்த போது கல்லும் கறையும்படி அழுகிறான். இருந்தும் அதை அவன் வெளிப் படுத்துவதில்லை. எப்போதும் ஒரு முரட்டுத்தனம். ஒரு நெகிழ்வு கிடையாது, நேசிப்பவர்களுக்காக விட்டு கொடுப்பது கிடையாது. அது கூட ஒரு தோல்வி என்று நினைப்பது.
பாடல்
புலியின் அதள் உடையானும், பொன் ஆடை
புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
யாவர் இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள்,
சேய் அரிக்கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
மகுடம் நிரை வயங்க, மன்னோ.
பொருள்
புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை அணிந்த சிவனும்
பொன் ஆடை புனைந்தானும் = பொன் ஆடை அணிந்த திருமாலும்
பூவினானும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்
நலியும் வலத்தார் அல்லர் = இராவணனை நலிய வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் அல்ல
தேவரின் = தேவர்களில்
இங்கு = இங்கு
யாவர் இனி நாட்டல் ஆவார்? = யார் அவனை வெற்றி கொள்ள முடியும்
மெலியும் இடை = நாளும் மெலிகின்ற இடை
தடிக்கும் முலை = நாளும் பூரிப்படையும் மார்பகங்கள்
வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள்
சேய் அரிக்கண்,= சிவந்த வரிகளைக் கொண்ட கண்கள்
வென்றி மாதர் = எவரையும் வெல்லும் பெண்கள்
வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட புணர்ச்சியிலும்
வணங்காத மகுடம் = வணங்காத மகுடம்
நிரை = வரிசை
வயங்க = ஒளிவீசும்
மன்னோ = அசைச் சொற்கள்
படுக்கையிலும், பெண்களிடம் வணங்காத முடி கொண்டவன்.
தான் தான் பெரிய ஆள். சக்ரவர்த்தி. வீரன் என்று மனைவியோடு தனித்து இருக்கும் போதும் வணங்காத முடி.
படுக்கை அறையிலேயே விட்டு கொடுக்காதவன் மற்ற இடத்தில் பணிந்து விடுவானா ?
தான் தான் பெரிய ஆள், எல்லோரும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம்.
சரி, பணியாதது, விட்டுக் கொடுக்காதது அரக்க குணம் என்றால், விட்டு கொடுப்பது, மனைவியிடம் தனிமையில் பணிவது தெய்வ குணமா ?
ஆம் என்கிறார் அருணகிரிநாதர்.
ஒரு முறை அல்ல பல முறை...
அவை என்ன என்று அடுத்த பிளாக்கில் பார்ப்போமா ?
No comments:
Post a Comment