திருவாசகம் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
பாடல்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
இந்த பாடல் அநேகமாக எல்லோரும் கேட்டு அறிந்தது தான். இதை பற்றி சொல்லும் பலரும், டார்வின் பரிணாம கொள்கையை சொல்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அதை சொல்லிவிட்டார் என்று கூறி இந்த பாடல் வரிகளை சொல்வார்கள்.
பரிணாம வளர்ச்சியில் புல் , பூண்டு, புழு , மரம், மிருகம், பறவை என்று ஆகி , பின் மனிதராய், பேயாய், கணங்களாய் , அசுரராகி, தேவராக ஆவோம் என்று அர்த்தம் சொல்லுவார்கள்.
அப்படி ஒரு அர்த்தம் கொள்ளலாம்.
அதில் ஒரு சின்ன சிக்கல் என்ன என்றால், பரிணாம வளர்ச்சியில் உயிர்கள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் போவதைப் பார்க்கிறோம். புழுவில் இருந்து மரம் வருமா ? பாம்பில் இருந்து உயிரில்லாத கல் வருமா ?
வராது.
பின் மணிவாசகர் இந்த பட்டியலை எந்த வரிசையில் தந்திருப்பார் ?
ஒரு வரிசையும் இல்லை, சும்மா செய்யுளின் இலக்கணத்திற்கு ஏற்ப பாடி இருப்பார் என்று சொல்லலாம்.
மணிவாசகர் போன்ற ஞானிகள் சும்மா அப்படி எழுதுவார்களா ? அவர்கள் ஒன்றும் பணத்துக்கும், புகழுக்கும் எழுதியவர்கள் அல்ல. பின், இந்த பட்டியலின் தர வரிசை என்ன ?
இப்படி யோசித்தால் என்ன ?
இது அத்தனையும் ஒரே பிறவியில் நாம் பிறந்து , மறைந்து , மறுபடியும் பிறந்து மறைந்து நிகழும் செயல் என்று சிந்தித்தால் என்ன ?
என்ன, குழப்புகிறதா ?
அது எப்படி, ஒரே பிறவியில் பல பிறவிகள் முடியும் ?
சிந்திப்போம்.
ஒரு நாள் ரொம்ப கோபம் வருகிறது. எல்லோர் மேலும் எரிந்து எரிந்து விழுகிறோம். வீட்டில் மனைவியோ, அம்மாவோ, "ஏன் இப்படி நாய் மாதிரி குலைக்கிற " என்று சொல்வதை கேட்டு இருக்கிறோம்.
" ஏதாவது சொல்லு...இப்படி கல்லு மாதிரி இருந்தா என்ன அர்த்தம் "
"அவன் சரியான கழுவுற மீன்ல , நழுவுற மீன் "
" பாம்புக்காவது பல்லில் மட்டும் தான் விஷம் , அவனுக்கு உடம்பு பூரா விஷம் "
"பணம் பணம் என்று ஏண்டா இப்படி பேயா அலையிற "
" அந்த பெண்ணை இப்படி கெடுத்திருக்கானே , அவனெல்லாம் ஒரு மனுஷனா, சரியான மிருகம் "
" நல்ல நேரத்தில உதவி செஞ்சீங்க , நீங்க தெய்வம் சார் "
" தெய்வம் மனுஷ ரூபே னு சொல்லுவாங்க, கடவுள் போல வந்து எங்களை காப்பாத்துனீங்க "
என்று நாம் தான் சில சமயம் மரமாகவும், கல்லாகவும், மனிதனாகவும், தேவனாகவும் இருக்கிறோம்.
இப்படி மாறி மாறி, நாளும் பிறந்து இறந்து கொண்டு இருக்கிறோம்.
நேற்று இருந்த தெய்வம் இன்று காணோம். குரங்கு புத்தி. ஒன்றில் இருந்து மற்றொன்றாக தாவிக் கொண்டே இருக்கிறது.
இதில் உண்மையான நாம் யார் ?
நல்லவனா ? கெட்டவனா ? மிருகமா ? தெய்வமா ?
புரியாமல் தவிக்கிறோம்.
"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் " என்று தளர்ந்து சொல்கிறார் மணிவாசகர்.
சில உண்மைகள், சில வேஷங்கள், சில வேஷங்களை நாமே நம்பி விடுகிறோம்.
உண்மை எது , பொய் எது என்று தெரியாமல் போய் விடுகிறது.
"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் "
என்கிறார் மணிவாசகர்.
இது ஒரு சிந்தனை.
ஒரு பிறப்புக்குள்ளே இத்தனை பிறப்புகள். மற்றவர்களை விடுங்கள். நம்மால் தாங்க முடியுமா ?
ஒரு நாளைக்கு பத்து வேடம் போட்டு நடிக்கிறோம்.
சில நாமே போட்டு கொள்வது. சில வேடங்கள் நம் மீது திணிக்கப் படுகிறது.
மனிதனாய் பிறக்கிறோம். கொஞ்ச நேரத்தில் மிருகமாய் உருவெடுக்கிறோம். பின் அது இறந்து, தேவனாய் பிறக்கிறோம்.
நாளுக்குள் ஆயிரம் முறை பிறந்து இறந்து பிறந்து ....
மெய் எது என்பதை அறிந்தால் வீடு பேற்றை அடையலாம்.
முயற்சி செய்வோம்.
மிக நல்ல சிந்தனை. பல பிறப்புகள் என்பது, நாம் மன நிலைக்கு ஒரு குறிப்பாக ஆகி விடுகிறது. நல்ல பொருள்.
ReplyDeleteநன்றி.