திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு
மணற் கேணியில் எவ்வாறு தோண்ட தோண்ட நீர் ஊறுகிறதோ அது போல மக்களுக்கு படிக்க படிக்க அறிவு வளரும்.
குறள்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
பொருள்
தொட்டனைத்து = தோண்டிய அளவில்
ஊறும் = ஊற்று எடுக்கும்
மணற்கேணி = மணற் கேணி
மாந்தர்க்குக் = மக்களுக்கு
கற்றனைத்து = கற்ற அளவு
ஊறும் அறிவு. = ஊறும் அறிவு
சரி இது என்ன புது விஷயமா ? இதில் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ?
சிந்திப்போம்.
கல்வி என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது. கல்வி பற்றி சொல்ல வந்து வள்ளுவர் இந்த உதாரணத்தை சொல்கிறார்.
அது என்ன மணற் கேணி ? அதில் என்ன சிறப்பு ?
கேணியை மூன்று இடங்களில் தோண்டலாம்.
நிலத்தில் தோண்டும் கேணி - நிலக் கேணி
பாறையில் அல்லது மலையில் தோண்டும் கேணி = கற் கேணி
மணலில் தோண்டும் கேணி = மணற் கேணி.
இதில் , மணற் கேணியை ஏன் தேர்ந்தெடுத்தார் ?
மணல் கேணியில் , தோண்டிய பின், சிறிது காலத்தில் மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும். அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.
அது போல, ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம் , அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது.
படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மணற்கேணியில் , கொஞ்சம் தோண்டினால் நீர் வரும். அந்த நீரை மொண்டு எடுத்தால் மேலும் நீர் வரும். வற்றி விடாது.
அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும் மேலும் அறிவு வளரும். கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும், தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும்.
படித்ததை பகிர வேண்டும்.
நீர் என்பது குளம், குட்டை, ஆறு, கடல் என்று விரிந்து கிடக்கிறது. மணற்கேணியில் உள்ள நீர் உலகில் உள்ள நீரில் மிகச் சொற்பமானது. எவ்வளவுதான் தோண்டினாலும் அது கடல் நீர் அளவுக்கு ஆகி விடாது. கல்வி கற்று வரும் அறிவு கொஞ்சம் தான். அந்த அடக்கம் வேண்டும்.
கல்லாதது கடலளவு.
முக்கியமாய் கவனிக்க வேண்டியது , தோண்டுதல் என்பது கற்பதற்கு சமம். நாம் தோண்டி நீரை வெளியில் இருந்து கொண்டு வந்து ஊற்றுவது இல்லை. நீர் உள்ளுக்குள் இருந்து வெளியே வருகிறது.
நாம் படிக்க படிக்க , நமக்குள் இருந்து அறிவு வெளியே வர வேண்டும்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் கல்வி.
என்று சொல்லவில்லை.
சொல்லி இருக்கலாம்.
கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது.
அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.
கற்க கற்க உள்ளே இருந்து வெளியே வர வேண்டும்.
விஷயங்களை உள்ளே திணிப்பது அல்ல கல்வி. அதை ஒரு கணிப்பொறி மிகச் சிறப்பாக செய்யும்.
கற்றது உள்ளே போய் , உள்ளே இருக்கும் அறிவை வெளியே கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு குறளுக்கு பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. நிதானமாக சிந்திக்க வேண்டும்.
கற்றனைத்து ஊறும் கல்வி.
என்று சொல்லவில்லை.
சொல்லி இருக்கலாம்.
கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது.
அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.
கற்க கற்க உள்ளே இருந்து வெளியே வர வேண்டும்.
விஷயங்களை உள்ளே திணிப்பது அல்ல கல்வி. அதை ஒரு கணிப்பொறி மிகச் சிறப்பாக செய்யும்.
கற்றது உள்ளே போய் , உள்ளே இருக்கும் அறிவை வெளியே கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு குறளுக்கு பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. நிதானமாக சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment