Tuesday, June 13, 2017

திருக்குறள் - வலிமையையும் காலமும்

திருக்குறள் - வலிமையையும் காலமும் 


எதற்கும் ஒரு காலம் வேண்டும். காலம் பார்த்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாடல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்

பகல்வெல்லும் = பகலில் வெல்லும்

கூகையைக் காக்கை = ஆந்தையை காக்கை

இகல்வெல்லும் = எதிர்ப்பை வெல்ல நினைக்கும்

வேந்தர்க்கு = அரசர்களுக்கு

வேண்டும் பொழுது = வேண்டும் சரியான காலம்

இது எல்லோருக்கும் தெரிந்தா ஒன்று தானே. இதில் புதிதாக என்ன இருக்கிறது. எதற்கு இதை வேலை மெனக்கெட்டு வள்ளுவர் சொல்கிறார் ?

நமக்கு வாழ்வில் வெற்றி தோல்வி வருவது இயல்பு.

வெற்றி வரும்போது நம் திறமையால் நிகழ்ந்தது என்று நினைக்கிறோம்.

தோல்வி வரும் போது ஏதோ நம் திறமையில் குறை என்று நினைக்கிறோம்.  நம் திறமையின் மீது நமக்கு சந்தேகம் வருகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. பதற்றம் வருகிறது.

ஆனால் , முக்கியமான ஒன்றை நாம் மறந்து விடுகிறோம்.

காலம் என்ற ஒன்றை நாம் மறந்தே விடுகிறோம்.

பகலில் காக்கை ஆந்தையை வெல்லும். இரவில் , ஆந்தை ,காக்கையை வெல்லும். 

காரணம், பகலில் காக்கைக்கு கண் தெரியும். ஆந்தைக்குத் தெரியாது. 

அதே போல, இரவில் ஆந்தைக்கு கண் தெரியும். காக்கைக்குத் தெரியாது. 

வெல்லுதல் என்பது உடல் வலிமை / திறமை மட்டும் காரணம் அல்ல.  பகலில் காக்கை  வலிமையாகவும், இரவில் ஆந்தையை வலிமையாகவும் இருப்பது இல்லை. 

இரவில் காக்கைக்கு கண் தெரியாது என்பதால் காக்கையின் கண்ணில் குறை என்று  சொல்ல முடியாது. அந்த நேரத்தில் அதனால் பார்க்க முடியாது.  

என்ன தான் வலிமை இருந்தாலும், காலம் சரியாக இல்லாவிட்டால் அந்த திறமை  சரிவர எடுபடாது. 

தோல்வி வந்தால், நினைத்தது நடக்கவில்லை என்றால் , உங்கள் திறமையை சந்தேகப் படாதீர்கள். உங்கள் திறமையை சரியான காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தவில்லை  என்று அர்த்தம். 

சரி, அதற்காக நல்ல காலம் வரும் என்று சும்மா உட்கார்ந்து இருப்பதா ?

இல்லை. 

வள்ளுவர் சொல்கிறார் ....இகல் வெல்லும் வேந்தற்கு வேண்டும் பொழுது.

எல்லாவற்றையும் திட்டமிடும் போது காலத்தையும் சேர்ந்து திட்டம் இட வேண்டும். 

காலம் தவறினால் , நல்ல திறமையும், வலிமையையும் கூட வியர்த்தமாகி விடும். 

எப்போது உழ வேண்டும், எப்போது விதைக்க வேண்டும், எப்போது நீர் பாய்ச்ச வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டும். 

காலம் தவறினால் விளைச்சல் வராது. 

எந்த காரியத்தையும் செய்யத் தொடங்குமுன் அதை செய்யப்போகும் காலம் சரிதானா என்று சிந்தித்து செயல்படுங்கள். 

வெற்றி நிச்சயம். 

வள்ளுவர் ஏழு வார்த்தையில் சொன்னதை ஔவையார் மூன்றே வார்த்தையில் சொல்கிறார் 

"பருவத்தே பயிர் செய்" 

காலம் அறிதல் பற்றி பத்து குறள் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

மற்றவற்றையும் பார்ப்போமா ?

No comments:

Post a Comment