Friday, April 20, 2018

திருக்குறள் - நினைத்துப் பார்க்க வேண்டும்

திருக்குறள் - நினைத்துப் பார்க்க வேண்டும் 


கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வந்தால் என்ன செய்வது ?

எவ்வளவுதான் அன்யோன்யமாக இருந்தாலும், எங்காவது ஒரு தவறு நிகழத்தான் செய்கிறது.

கணவனுக்கு இன்னொரு பெண்ணின் மேல் ஏதோ ஈர்ப்பு. கொஞ்சம் நெருங்கி பழகுகிறான். தவறுதான். இருந்தாலும், ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, தவறி விடுகிறான்.

அது மனைவிக்குத் தெரிய வருகிறது. அவளுக்கு தாங்க முடியாத கோபம். அவனின் துரோகத்தை அவளால் சகிக்க முடியவில்லை. அவள் இவ்வளவு நாளாக கட்டி காத்து வந்த கோட்டை தகர்த்த வலியை அவளால் பொறுக்க முடியவில்லை. அனைத்தையும் தீ வைத்து கொளுத்தி விடலாமா என்று நினைக்கிறாள். பிள்ளைகள் எப்படியும் போகட்டும். யார் எப்படி போனால் என்ன என்று கோபத்தின், வெறுப்பின் உச்சியில் இருக்கிறாள் அவள்.

அவள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ? கணவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? அல்லது விவாகரத்து பெற்று தனித்து வேறு வாழ்க்கை தொடங்க வேண்டுமா ? யோசித்துக் கொண்டிருங்கள்.

நெருங்கிய நண்பர்தான். நீண்ட நாள் நண்பர். நீங்கள் அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள். ஏதோ ஒரு ஆசையில், உங்களுக்கு வர வேண்டிய ஒரு வாய்ப்பை அவர் எடுத்துக் கொள்கிறார். அல்லது உங்களிடம் சொல்லாமல்  ஏதோ ஒன்றை செய்து விடுகிறார். உங்களால் அதைத் தாங்க முடியவில்லை. "நீ எல்லாம் ஒரு மனுஷனா, உன்னை போய் நம்பினேனே , என்னைச் சொல்ல வேண்டும் " என்று நட்பை உதறி விட வேண்டுமா ? அல்லது, அந்த செயலை சகித்துப் போக வேண்டுமா ?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

இப்படி வாழ்வில் பல சிக்கல் வரலாம்.

கணவன் மனைவி உறவில்
நண்பர்களுக்குள்
உறவினர்களுக்குள்
தொழில் முதலீடு செய்தவர்களுக்குள்
மேலதிகாரியின் துரோகம்

என்று எத்தனையோ வகைகளில் நாம் வஞ்சிக்கப் படலாம்.

அப்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும் ? உறவை, நட்பை, தொடர்பை  துண்டித்துக் கொள்ள வேண்டுமா ?

இல்லை.

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்


பொருள்

கொன்றன்ன = கொலைக்கு ஒப்பான

இன்னா செயினும் = துன்பம் செய்யினும்

அவர்செய்த = அவர் செய்த

ஒன்று நன்று = நல்லது ஒன்றை

உள்ளக் கெடும் = நினைக்கக் கெடும்

உலகிலேயே ஒருவனுக்கு மிக உயர்ந்தது உயிர் தான். அந்த உயிரை பறிப்பதற்கு ஒப்பான ஒரு காரியத்தைச் செய்யினும், அவர் நமக்கு முன்பு செய்த ஒரு நல்ல காரியத்தை மனதில் நினைத்தால் அந்த தீய காரியத்தால் வந்த  துன்பம் கெடும்.

முதல் உதாரணத்தில், கணவன் செய்தது கொலைக்கு ஒப்பான ஒரு கொடிய காரியம் தான். அவன் செய்த தீய செயலை நினைக்கும் போது , அதற்கு முன் அவன் செய்த நல்ல  காரியங்களை நினைத்தால் , தீய செயலின் துன்பம் கெடும். மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் அவன் எவ்வளவோ நல்லது செய்து இருக்கலாம். எவ்வளவோ அன்பை கொட்டி இருக்கலாம். சுயநலம் இல்லாமல் , தன்னை கரைத்து இருக்கலாம். அதை எண்ணிப் பார்த்தால், இந்தத் தவற்றின் துன்பம் குறையும்.

ஒருவர் செய்த நல்லதை எல்லாம் மறந்து விட்டு, அவர் செய்த ஒரே ஒரு தவறான காரியத்தை மட்டும்  பிடித்துக் கொண்டு மல்லு கட்டக் கூடாது.

அது ஒரு அர்த்தம்.

இன்னொன்று, உறவில் சிக்கல்கள் வரும். தவறுகள் நிகழலாம்.  அது எப்படி சரியாகும் என்றால்,  முன்பு செய்த நல்லதை நினைத்தால். எனவே,  உறவு சரியாக இருக்க வேண்டும் என்றால், நல்லது செய்து கொண்டே இருங்கள். பின்னாளில், ஏதாவது தவறு நிகழ்ந்தால், இந்த நல்லவைகள் , அந்தத் தவற்றின் தாக்கத்தை குறைக்கப் பயன் படும்.

ஒருவர் செய்த தவறை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

உறவுகளில் வரும் பெரும் சிக்கல்களை தீர்க்க ஒண்ணே முக்கால் அடியில் வழி சொல்கிறார் வள்ளுவர்.

யோசித்துப் பாருங்கள். எத்தனை உறவுகளை முறித்துக் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.  இது முன்பே தெரிந்து இருந்தால், அந்த உறவுகள் முறிந்திருக்காது அல்லவா ? இனியேனும் உறவுகள் முறியாமல் பார்த்துக் கொள்ள இந்த குறள் உதவட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_20.html

1 comment:

  1. அப்படிக் குற்றம் செய்தவர், உணர்ந்து வருந்துகிறாரா என்று பார்க்க வேண்டாமா?

    ReplyDelete