Wednesday, April 25, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இப் பிறவி போக்குதும்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இப் பிறவி போக்குதும் 


தான் சொல்லியதை இராவணன் கேட்கவில்லை என்பதால் வீடணன் இலங்கையை விட்டு வெளியேறினான். இராம இலக்குவர்களை அடைய வேண்டும் என்பது அவன் எண்ணம். அவனுடைய அமைச்சர்களிடம் கேட்டான். அவர்களும் வீடணன் நினைப்பதே சரி என்றார்கள்.

வீடணன் அந்த அமைச்சர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்

"நல்லது சொன்னீர்கள். இராமனை சென்று சேராமல் இருந்தால் நாமும் அரக்கர்கள் ஆவோம். எல்லை இல்லாத பெரும் கருணை கொண்ட இராமனின் திருவடிகளை நாடி இந்த பிறவிப் பிணியை போக்குவோம் " என்று.


பாடல்

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

பொருள்


'நல்லது சொல்லினீர் = (அமைச்சர்களே) நல்லது சொன்னீர்கள்

நாமும், = நாமும்

வேறு இனி = வேறு ஏதாவது

அல்லது செய்துமேல் = நல்லது அல்லாததைச் செய்தால்

அரக்கர் ஆதுமால் = அரக்கர்கள் ஆவோம் என்பதால்

எல்லை இல் = எல்லை இல்லாத

பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய

இராமன் தாள் இணை = இராமனின் திருவடிகளை

புல்லுதும்; = அடைவோம்

புல்லி, = அடைந்து

இப் பிறவி போக்குதும். = இந்த பிறவிப் பிணையில் இருந்து விடு படுவோம்


மாத்திரையின் மேல் சர்க்கரை தடவி இருப்பார்கள். சர்க்கரையை மட்டும் நக்கிப் பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறது என்று மாத்திரையை விட்டு விடக் கூடாது.

கதை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும்.

அது சர்க்கரை போல.

அடியில் உள்ள கருத்து மருந்து போல. பிறவிப் பிணிக்கு மருந்து சொல்கிறான் கம்பன்.  பிணிகளில் பெரிய பிணி இந்தப் பிறவிப் பிணி.


இராமனை சென்று சேராவிட்டால் நாமும் அரக்கர்கள் ஆவோம் என்கிறான்.  அரக்கர் என்பது பிறப்பினால் அல்ல. செய்யும் செயல்களால். இராமனே நேரில் வந்திருக்கிறான். அப்போதும் அவனை சரண் அடையாவிட்டால் அது அரக்க குணம் என்று சொல்கிறான்.

இறைவனை அடைய வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிரார்கள். எப்படி அடைவது. என்னதான் தலை கீழாக நின்றாலும், இறைவன் இருக்கும் இடத்துக்கே போய் விட்டாலும், இறைவனை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தது எல்லாம் நாம் பார்த்த சிலைகள், வீட்டில் உள்ள சில படங்கள். யாரும் இறைவனை நேரில் கண்டு வந்து இந்த சிலைகளையோ படங்களையோ உருவாக்கவில்லை.

எனவே இறைவன் இருக்கும் இடமும் நமக்குத் தெரியாது. அவன் உருவமும் நமக்குத் தெரியாது.

எனவே தான், இறை அவதாரம் எடுத்து நம்மிடம் வருகிறது. நமக்கு இறைவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியுமே. எனவே அவனே நம்மிடம் வருகிறான்.

நம் வினை. நேரில் இறையே வந்தாலும், நாம் அடையாளம் காண முடியாமல் அலைகிறோம்.

இராமனை மானுடன் என்று நினைத்துக் கேட்டான் இராவணன்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கேட்டான் துரியோதனன்

முருகனை பாலன் என்று சொல்லிக் கேட்டான் சூர பத்மன்.

இறைவன் நேரில் வந்து உபதேசம் செய்தும் அவனை அறியமாட்டாமல் விட்டு விட்டார் மணிவாசகர். அந்த ஆதங்கத்தின் புலம்பல் தான் திருவாசகம்.

இராமன் நேரில் வந்த போது , அவன் இறைவன் என்று வீடணன் கண்டு கொண்டான். இராவணன் கண்டு கொள்ள வில்லை.

கண்டு கொண்ட வீடணனை வீபிஷண ஆழ்வார் என்று வைணவம் கொண்டாடுகிறது.

சீதையை தூக்கிச் சென்ற இராவணனின் தம்பி ஆழ்வார் !

காரணம், அவன் இறைவனை அறிந்தான்.

வீடணன் ஏன் இராமனிடம் சென்றான் ?

இலங்கை அரசு வேண்டியா ? புகழ் வேண்டியா ? உயிருக்கு பயந்தா ?

இல்லை, இந்த பிறவி சூழலில் இருந்து விடு பட.

"புல்லி இப் பிறவி போக்குதும்" என்றான்.

அரக்கப் பிறவி போய் ஆழ்வாராக அவதரித்தான்.

"எல்லையில் இல் பெருங் குணத்து "


இராமனுடைய நல்ல குணங்களுக்கு ஒரு எல்லை இல்லை. அது விரிந்து கொண்டே போகிறது என்கிறான்.

நல்லவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப் பிறவியைப் போக்க, அதுவே வழி. அது அல்லாத வழி எல்லாம் அரக்கர்கள் வழி.

வீடணன் செய்தது சரியா தவறா ?


http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_25.html

2 comments:

  1. “இராமன் நேரில் வந்த போது , அவன் இறைவன் என்று வீடணன் கண்டு கொண்டான். இராவணன் கண்டு கொள்ள வில்லை,” என்று கூறினீர்கள்.ரொம்ப சரியான வார்த்தைகள்.அப்படி இனம்கண்டு கொள்வது எல்லோருக்கும் எளிதில வருவதில்லை. மிக சிலருக்கே வருகிறது.அது பூர்வ ஜன்ம புண்யத்தினால்தான் தான் என தோன்றுகிறது.

    ReplyDelete
  2. பக்தி இருந்தால்தான் இந்தப் பாடலை ஒப்புக்கொள்ள முடியும் போல இருக்கிறது.

    ReplyDelete