கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இலங்கை நீங்குதல்
கம்ப இராமாயணத்தில் உள்ள நெருடலான பகுதிகளில் விபீஷண சரணாகதியும் ஒன்று.
வீடணன் செய்தது சரியா? சீதையை தூக்கி வந்த போதே, இராவணனை விட்டு விலகி இருந்தால் அவன் செய்த செய்கை நியாமானதாக இருக்கும். இராமன் படை எடுத்து வரும் வரை அமைதியாக இருந்து விட்டு, இராமன் வந்தவுடன், இராமன் பக்கம் போய் சேர்ந்தது சரியா ?
வீடணனைப் போலவே கும்பகர்ணனனுக்கும் , இராவணன் செய்ததில் உடன்பாடு இல்லை. அவனும் , இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்கவில்லை. அதற்காக கும்பகர்ணன் இராவணனை விட்டு விட்டுப் போய் விடவில்லை. இறுதி வரை அவனோடு இருந்து, அவனுக்காக போர் செய்து, உயிர் தியாகம் செய்தான்.
ஆனால், வீடணனோ, இராவணன் கூட இருந்து விட்டு, சண்டை என்று வந்த போது, எதிரியான இராமன் பக்கம் சேர்ந்து விட்டான்.
இந்நாள் வரையிலும் அந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதை சரியா , தவறா என்ற கோணத்தில் ஆராயாமல், திறந்த மனத்துடன் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
காப்பியத்துக்குள் போவோம்.
வீடணன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராவணன் கேட்கவில்லை. "நான் எவ்வளவோ சொன்னேன். நீ உணரவில்லை. என் பிழை பொறுப்பாய்" என்று இராவணனிடம் சொல்லி விட்டு வீடணன் இலங்கையை விட்டு அகன்றான்.
அங்கு ஆர்மபிக்கிறது இந்த சரணாகதிப் படலம்.
பாடல்
‘எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.
பொருள்
‘எத்துணை வகையினும் = எத்தனையோ வழிகளில்
உறுதி எய்தின = உனக்கு நல்லது செய்யக்கூடியவற்றை
ஒத்தன உணர்த்தினேன் = தேவையானவற்றைச் சொன்னேன்
உணர கிற்றிலை = நீ உணரவில்லை
அத்த! = தந்தை போன்றவனே
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே என்பார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே
என் பிழை பொறுத்து அருளுவாய் = என் குற்றத்தை பொறுத்து அருள் செய்வாய்
எனா = என்று கூறி விட்டு
உத்தமன் = நல்லவனான வீடணன்
அந்நகர் ஒழியப் போயினான் = அந்த நகரமான இலங்கையை விட்டு விலகிப் போயினான் .
இது மேலோட்டமான பொருள். உட்பொருள் என்ன?
வீடணன் எவ்வளவோ விதங்களில் எடுத்துச் சொன்னான். இராவணன் கேட்கவில்லை. தான் நினைத்துதான் சரி என்று அடம் பிடித்தான்.
வாழ்க்கை நமக்கு பல விதங்களில் நல்லதை நாளும் எடுத்துச் சொல்கிறது. நாம் தான் கேட்பது இல்லை. நாம் நினைப்பதே சரி என்று முரட்டுப் பிடிவாதத்தோடு இருக்கிறோம். "நான் செய்வது, நினைப்பது எப்படி தவறாக இருக்க முடியும் " என்று பலதடவை நினைக்கிறோம். மற்றவர்கள் சொல்வது சுத்தமாக தவறு என்று நினைக்கிறோம். அதுதான் அரக்க குணம்.
நல்லவர்கள் சொல்லிப் பார்ப்பார்கள். கேட்கவில்லை என்றால் நம்மை விட்டு விலகிப் போய் விடுவார்கள்.
நல்லவர்களோடு நட்பு கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை ஏற்று நடக்க வேண்டும்.
பெரியாரைத் துணை கோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.
பெரியவர்கள் சொல்வதை எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டு விட்டு, "இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது " என்ற நாம் போன வழியிலேயே போய்க் கொண்டிருந்தால் இராவணனுக்கு நேர்ந்ததுதான் நமக்கும் நேரும் என்பது முதல் பாடம்.
படிப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_22.html
No comments:
Post a Comment