Thursday, November 12, 2020

திருக்குறள் - நீர் இன்றி அமையாது உலகு

திருக்குறள் - நீர் இன்றி அமையாது உலகு 

நாம் எல்லாம் ஒழுக்கமானவர்கள். ஒரு தப்பு தண்டா செய்வது இல்லை. சட்டம், நீதி, நேர்மை, சமுதாய பண்பாடு இவற்றிற்கு பயப்படுபவர்கள்.  அதில் நமக்கு ஒரு பெருமையும் உண்டு. 


நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், நம் பண்பாடு, ஒழுக்கம், ஆசாரம் எல்லாம் நம் குலத்தில் இருந்து வந்தது, நம் பெற்றோர்கள் நமக்குத் தந்தது, நாம் படித்து உணர்ந்தது என்று. 

வள்ளுவர் சொல்கிறார், வானம் பொய்த்தால், இந்த உலகில் யாரும் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று. 


இந்த உலகில் ஒழுக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், மழை இடை விடாது பெய்ய வேண்டும். அது தன் விருப்பத்துக்குப் பெய்தால், அல்லது பெய்யாமல் இருந்தால், உலகில் ஒரு ஒழுக்கமும் இருக்காது. 

உண்ண உணவும், குடிக்க நீரும், உடுக்க உடையும் இல்லை என்றால் என்ன ஒழுக்கம் இருக்கும் ?


அனைத்து அறங்களும் , பூஜைகளும், ஆசார அனுஷ்டானங்களும், தர்மங்களும், நீதி, நேர்மை, வாய்மை போன்ற உயர் குணங்களும் மழையினால் நிலை பெற்று நிற்கின்றன. 


பசி வந்து விட்டால் என்ன தர்மம் நிற்கும். 


உலகுக்கு காயத்ரி மந்திரம் தந்த விச்வாமித்ரனை நாய் கறி தின்னத் தூண்டியது பசி. அப்படி என்றால், ஒழக்கம் எங்கே நிற்கிறது என்று புரிகிறதா?


பாடல் 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_12.html

(click the above link to continue reading)



நீர்இன்று = நீர் இல்லாமல் 

அமையாது  = இருக்காது, இயங்காது 

உலகெனின் = உலகம் என்றால், என்று கூறினால் 

யார்யார்க்கும் = யாராக இருந்தாலும் 


வான்இன்று = வானம் இன்றி , மழை இன்றி 

அமையாது ஒழுக்கு = அமையாது ஒழுங்கு , அறம் 


நீர் இல்லாமல் உலகம் இல்லை. அது போல், மழை இல்லாமல் ஒழுக்கம் இல்லை. 


உயிர் வாழ மட்டும் அல்ல, ஒழுக்கத்தோடு, பண்போடு, அறத்தோடு வாழவும் மழை வேண்டும். 

மழை எவ்வளவு உயர்ந்தது என்று புரிந்து கொள்ள உதவும் பாடல். 

இவ்வாறாக, வான் சிறப்பு என்ற அதிகாரம் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தோம். 

இனி, மற்றுமொரு அதிகாரம் பற்றி சிந்திப்போமா ?


No comments:

Post a Comment