திருக்குறள் - எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
ரொம்ப பாடு பட்டு பணம் சம்பாதிக்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும் நாம் சேர்த்த செல்வம் எல்லாம் நாம் செலவழிக்கப் போவது இல்லை என்று. நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் உதவும் என்று சேர்கிறோம்.
நமக்குப் பின்னும் நம் பிள்ளைகள் துன்பப் படக் கூடாது என்று சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போக நினைக்கிறோம்.
ஆனால், நாம் சேர்த்தது வைத்த சொத்து அவர்களுக்கு போகும் என்பது என்ன நிச்சயம்? அது பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்வதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?
இருக்கிறது என்கிறார் வள்ளுவர். யாருடைய சொத்து அவர்களின் வாரிசுகளுக்கு பயன் படும் என்று சொல்கிறார்.
யார் ஞாயமாக, நடுவு நிலையில் நின்று வாழ்கிறார்களோ அவர்கள் சொத்து சிதைவின்றி அவர்களின் வாரிசுகளுக்குப் போய் சேரும் என்கிறார்.
பாடல்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_19.html
click the above link to continue reading
செப்பம் = நடுவு நிலைமை
உடையவன் = உள்ளவன்
ஆக்கம் = சேர்த்த சொத்து
சிதைவின்றி = ஒரு குறைவும் இன்றி
எச்சத்திற்கு = அவனின் வாரிசுகளுக்கு
ஏமாப்பு = காவல், இன்பம் தரும்
உடைத்து = உடையது
நடுவு நிலைமை என்றால் ஒரு பாற் சாராமல், நீதி, நேர்மை, ஞாயம் என்று இருப்பது.
இது மிக மிக கடினம்.
ஒரு சமுதாயத்தில் நாம் வாழும் போது நமக்கு உதவி செய்தவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் உதவி செய்தவர்கள், அதிகம் உதவி செய்தவர்கள், நெருங்கியவர்கள், உறவினர், நண்பர் என்று பலர் இருப்பார்கள். நமக்கு வேண்டியவருக்கும், மற்ற ஒருவர்க்கும் ஒரு சிக்கல் என்றால் நாம் நடுவு நிலைமையாக இருக்க முடியுமா? நமக்கு வேண்டியவர்களுக்கு சாதமாகத்த்தானே பேசுவோம்.
அப்படிச் செய்தால், நாம் நடு நிலை பிறழ்ந்தவர்கள் ஆவோம்.
ஒரு வீட்டின் தலைவன்/தலைவி, ஒரு பெரிய குடும்பத்தின் தலைவன், தலைவி, ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு நாட்டின் தலைவர் , ஒரு அதிகாரி, நீதிபதி என்று அனைவரும் நடு நிலையோடு இருக்க வேண்டும்.
தனக்கு ஒரு ஞாயம் பிறருக்கு ஒரு ஞாயம் என்று இருக்கக் கூடாது.
அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையிலேயே நடு நிலை பேண முடிவதில்லை.
தெரிந்தே நடு நிலை மாறி செயல் படுபவர்களின் செல்வம் அவர்களின் வாரிசுகளுக்குப் போய் சேராது என்கிறார் வள்ளுவர்.
போகிறதே, போகிறதை பார்கிறோமே என்றால், போகலாம், அது அவர்களுக்கு நன்மை செய்யாது, அது அவர்களுக்கு காவல் இருக்காது. ஏமாப்பு என்றால் அது தான் அர்த்தம்.
அப்பாவின் சொத்தை குடித்தே அழித்த பிள்ளைகள் எத்தனை, சூதில் விட்ட பிள்ளைகள் எத்தனை, கண்ட விதத்தில் ஊதாரித்தனமாக செலவழித்த பிள்ளைகள் எத்தனை, அந்த சொத்துக்காக, அந்தப் பிள்ளையை கொன்று அதை அபகரித்தவர்கள் எத்தனை...
என் கணவன்/மனைவி, என் பிள்ளை, என் பெற்றோர், என் உடன்பிறப்பு என்று நடு நிலை தவறி மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது.
பெரிய விஷயம். நாம் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது இல்லை.
கவலைப் பட வேண்டும்.
ஞாயம் - நியாயம் என குறிப்பிட்டு இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
ReplyDeleteஇருந்தாலும்,
உங்களது விளக்கங்கள் அருமை.