திருக்குறள் - நோக்கக் குழையும் விருந்து
விருந்து என்பதை ஒரு அறமகாச் சொன்னவர்கள் நம்மவர்கள். விருந்தின் மேன்மைப் பற்றி சொல்லாத இலக்கியம் இல்லை. கணவனை பிரிந்த மனைவி கூட, அவள் பிரிவை பற்றி கவலைப் படாமல், "ஐயோ, நான் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியவில்லையே, அவர் எப்படி விருந்தினர் வந்தால் சமாளிப்பாரோ" என்று வருந்துகின்ற காட்சிகளை காண்கிறோம்.
அதெல்லாம் சரி, விருந்து கொடுப்பவன் எப்படி கொடுக்க வேண்டும், என்பதற்கு ஆயிரம் விதிமுறை சொல்லி இருக்கிறார்கள். இந்த விருந்தினன் எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது சொல்லி இருக்கிறார்களா?
வீட்டுக்கு விருந்துக்கு வருபவன் எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கு ஏதாவது விதி இருக்கிறதா ?
சிலர் இருக்கிறார்கள்.
முதலில், சொல்லாமல் கொள்ளாமல் வந்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். வந்தவனை போ என்றா சொல்ல முடியும். நாம் ஏதோ ஒரு அவசரத்தில் அல்லது ஒரு சங்கடத்தில் இருப்போம். அவன் பாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு ஊர் கதை எல்லாம் பேசிக் கொண்டு இருப்பான். நம் அவஸ்தை தெரியாமல்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள், வீட்டில் வந்து என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்ற இங்கிதம் தெரியாதவர்கள். மனைவி, பிள்ளைகள் இருக்கும் போது எதைப் பேசலாம், எதைப் பேசக் கூடாது என்ற பாகுபாடு இல்லாமல், கண்டதையும் பேசிக் கொண்டு இருப்பது. நாம் இங்கே நெளிந்து கொண்டு இருப்போம். அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லாமல், பேசிக் கொண்டே போவான்.
மூன்றாவது, நேரத்தின் அருமைதெரியாதவர்கள். நாம் எப்படி எல்லாமோ எடுத்துச் சொல்லி பார்ப்போம். "அவசரமா வெளியே போகணும், ஒருவரை பார்க்கப் போகணும்" என்றெல்லாம் சொல்லிப் பார்போம். ம்ஹும்...ஒரு அசைவும் இருக்காது.
நான்காவது, வீட்டின் நிலைமை புரியாமல் சில பேர் உட்கார்ந்து கழுத்தை அறுத்துக் கொண்டு இருப்பார்கள். மனனவி எங்கோ வெளியே போக கிளம்பிக் கொண்டு இருப்பாள். "நல்ல காப்பி கிடைக்குமா" என்று உரிமையோடு கேட்டு நடு வீட்டில் உட்கார்ந்து கொள்வார்கள்.
இன்னும் சிலர், ஒரு வீட்டில் எவ்வளவு சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம், என்ற இங்கிதம் தெரியாதவர்கள். வீட்டுக்கு வந்தால், ஹாலில் உட்கார வேண்டும். அடுப்படிக்கு உள்ளே போவது, படுக்கை அறையை எட்டிப் பார்ப்பது, அங்குள்ள புத்தகங்களை எடுத்துப் போட்டு புரட்டுவது, என்று அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.
இன்னும் சிலர், நாசூக்கு என்பது அணு அளவும் இல்லாத ஆட்கள். சாப்பிட ஏதாவது கொடுத்தால், "ரொம்ப நல்லா இருக்கே, இன்னும் கொஞ்சம் இருக்கா" என்று நேரடியாக கேட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்துவார்கள்.
வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், "இங்க வா, மாமா கிட்ட வா என்று அதை கன்னத்தைப் பிடித்து கிள்ளுவது " போன்ற அநாகரீகமான செயலில் ஈடு படுபவர்களும் உண்டு.
இப்படிப் பட்ட ஆட்களுக்கு வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?
சொல்லாமல் இருப்பாரா?
பாடல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_83.html
(please click the above link to continue reading)
மோப்பக் = முகர்ந்து பார்த்தால்
குழையும் = வாடி விடும்
அனிச்சம் = அனிச்சம் மலர்
முகந்திரிந்து = முகம் சற்றே மாறி
நோக்கக் = பார்த்தால்
குழையும் = வாடி விடும்
விருந்து. = விருந்தினர்
மலர்களில் மிக மென்மையானது அனிச்சம் மலர். அதை பறிக்கக் கூட வேண்டாம். முகர்ந்து பார்த்தாலே வாடி விடும். அவ்வளவு மென்மை. விருந்தினர்கள் அதை விட மென்மையானவர்கள். வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் முகம் மாறி பார்த்தாலே விருந்தினர்கள் வாடி விடுவார்கள்.
அதெல்லாம் சரி, அதுக்கும் இந்த விருந்தினர்க்கும் என்ன சம்பந்தம்.
வள்ளுவர் சொல்கிறார், ஒரு விருந்தினன் அந்த அளவுக்கு மென்மையா, இருக்கணும்.
விருந்துக்கு போன வீட்டின் நிலை என்ன, அங்குள்ள கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, எங்காவது கிளம்பிக் கொண்டு இருக்காங்களா, பேசலாமா, கூடாதா, என்று எல்லாவற்றிலும் ஒரு நாசுக்கு, பண்பாடு, ஒரு மென்மை இருக்க வேண்டும்.
அவன் தான் விருந்தினன். அவனைத்தான் விழுந்து விழுந்து உபசரிக்கச் சொல்கிறது நம் இலக்கியங்கள்.
மாறாக, இங்கிதம் தெரியாமல், பண்பாடு இல்லாமல், வீட்டின் சூழ் நிலை தெரியாதவனை விருந்து பாராட்டச் சொல்லவில்லை.
எனவே, அப்படிப்பட்டவர்கள் வந்தால், தயங்காமல் மனதில் பட்டதைச் சொல்லி அவர்களின் எல்லையை காட்டுவது தவறு இல்லை. நீங்கள் செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். நம் கலாச்சாரம், பண்பாடு, எல்லா விருந்தினரையும் ஒரு சேர பார்க்கச் சொல்லவில்லை.
இந்தக் குறள் விருந்தோம்புவர்களை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறது என்ற இத்தனை நாள் எண்ணியிருந்தேன். விருந்தினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறது என்பதை இன்றுதான் யோசித்தேன்.
ReplyDeleteமிக அருமை.