திருக்குறள் - செல்வம்
நிலை இல்லாதவற்றை நிலை என்று நினைக்கும் புல்லறிவாண்மை கடை என்று முதல் குறளில் கூறினார்.
அப்படி என்றால் எது எல்லாம் நிலை இல்லாதது என்ற கேள்வி பிறக்கும் அல்லவா?
இரண்டு விடயங்கள் நிலை இல்லாதவை - ஒன்று செல்வம் , இன்னொன்று இந்த உடம்பு.
நாம் இரண்டும் நிலையானவை என்று நினைத்து அவற்றை சேர்க்க, பாதுகாக்க படாத பாடு படுகிறோம்.
மருந்து, மாத்திரை, ஸ்கேன், அது இது என்று இந்த உடம்பை எப்படியாவது நிரந்தரமாக இருக்கப் பண்ணி விடலாம் என்று நினைக்கிறோம்.
இந்த உடம்பு அழியும். என்ன செய்தாலும் அழியும். மாற்றவே முடியாது.
அதே போல் தான் செல்வம். பணத்தை அதில் முதலீடு செய்யலாம், இதில் போடலாம் என்று போட்டு, அதை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நம்மை விட்டு போகத்தான் போகிறது.
அது எப்படி போகும். அங்க வீடு வாங்கி போட்டு இருக்கிறேன், இங்கே மனை, அந்த கம்பெனி ஷேர், இந்த வங்கியில் நிரந்தர வைப்பு , கொஞ்சம் தங்கம் என்று பிரித்து பிரித்து போட்டு இருக்கிறேன். எப்படி இந்த செல்வம் என்னை விட்டுப் போகும் என்று கேட்கலாம்.
நம்மை விட ஆயிரம் மடங்கு செல்வம் இருந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடம் கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என்று எல்லாம் இருந்தது. எங்கே அந்த செல்வம்?
இராஜ இராஜ சோழனின் வாரிசுகள் எங்கே? அசோக சக்ரவர்த்தியின் பிள்ளைகள் எங்கே?
வரலாறு பேரரசுகளை புரட்டிப் போட்டு இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் இருந்த இடம் இடம் தெரியாமல் செத்தார்கள்.
நாம் நம் செல்வத்தை காத்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருக் காலும் முடியாது.
உள்ளங்கை நீர் போல அது ஒழுக்கிக் கொண்டே இருக்கும்.
நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு செல்வம் எப்படி வந்தது என்று. வருகின்ற காலத்தில் பல இடங்களில் இருந்து வரும்.
சம்பளம் வரும், வட்டி வரும், வாடகை வரும், ஷேர் இருந்தால் டிவிடெண்ட் வரும், வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயரும். இப்படி பல வழிகளில் செல்வம் வரும். இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம் என்று பல விதங்களில் வந்து குவிந்து விடும். எனக்கு இவ்வளவு சொத்தா என்று நீங்களே வியப்பீர்கள்.
மனதில் நன்றாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு நாள் இவை அனைத்தும் போகும்.
வள்ளுவர் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.
சினிமா தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். படம் பார்க்க பலர் வருவார்கள். வரும்போது ஒவ்வொருவராக வருவார்கள். ஆறு மணி படம் என்றால் சிலர் ஐந்து மணிக்கு வருவார்கள், சிலர் 5:10 க்கு வருவார்கள், சிலர் 5:30 வருவார்கள்.
படம் முடிந்தவுடன் எல்லோரும் ஒன்றாகப் போய் விடுவார்கள். முதலில் வந்தவன் முதலில் போகவும், கடைசியாக வந்தவன் கடைசியாகப் போகவும் என்று இருக்காது.
வரும் போது ஒன்று ஒன்றாக வருவார்கள். போகும் போது ஒன்றாகப் போவார்கள்.
அது போல, செல்வம் வரும் போது தனித்தனியாக வரும். போகும் போது மொத்தமாக போய் விடும்.
பாடல்
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_21.html
(click the above link to continue reading)
பொருள்
கூத்தாட்டு = கூத்தாடும்
அவைக் = கொட்டகை, இன்று தியேட்டர்
குழாத்து = கூட்டம்
அற்றே = போல
பெருஞ்செல்வம் = பெரிய செல்வம்
போக்கும் = போகும்
அது = அந்த செல்வம்
விளிந் தற்று = ஒழிந்து போகும்.
கொட்டகைக்கு எப்படி பல இடங்களில் இருந்து ஆட்கள் வருவார்களோ, அது போல செல்வம் பல இடங்களில் இருந்து வரும்.
படம் முடிந்தவுடன் எல்லோரும் அவரவர் இடத்துக்குப் போவது போல, செல்வம் வந்த வழியே போய் விடும்.
தனித்தனியே வந்து, ஒன்றாகப் போய் விடும்.
சரி, ஒத்துக் கொள்வோம். அதுக்கு என்ன இப்ப? இருக்கிற செல்வத்தை எல்லாம் தூக்கி தெருவில் போட்டு விடுவோமா? செல்வம் சேர்க்காமலே இருந்து விடுவோமா? பொருள் என்பதற்கு ஒரு அதிகாரமே வைத்து இருக்கும் வள்ளுவர் என்னதான் சொல்கிறார் என்று கேட்டால்...
மேலும் சிந்திப்போம்....
simple and excellent way of detailing the kural
ReplyDeleteKindly continue your service to society
நல்ல குறள். நன்றி.
ReplyDelete