திருக்குறள் - செல்வத்தின் இயல்பு
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு இருக்கும். நீரின் இயல்பு கீழ் நோக்கி பாய்வது. நெருப்பின் இயல்பு சுடுவது.
செல்வத்தின் இயல்பு?
செல்வத்தின் இயல்பு, ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருப்பது. செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தான் அர்த்தம்.
செல்வம் நம் கையில் வந்தவுடன், அது நம்மை விட்டு செல்வதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்.
செல்வம் சக்தி வாய்ந்தது. அதை வைத்து நாம் பலவற்றை சாதித்துக் கொள்ளலாம். என்ன சாதிப்பது என்பது தான் கேள்வி.
பெரும்பாலானோர் அதை பல விதமான சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். வீடு, மனை, நிலம், தங்கம், ஷேர், bonds என்று முதலீடு செய்வார்கள். வட்டி வரும், சிலவற்றின் மதிப்பு உயரும். உங்கள் பணத்தைக் கொண்டு யாரோ அதை நல்ல விதமாக செலவழித்து அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்து, அந்த இலாபத்தில் உங்களுக்கு கொஞ்சம் தருகிறார்கள்.
அதாவது, நீங்கள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ் நாள் எல்லாம் உழைக்கிறீர்கள்.
வள்ளுவர் சொல்கிறார், "நிலையற்ற செல்வத்தை பெற்றால், நிலையான செயல்களை செய்ய வேண்டும்" என்று.
பாடல்
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_25.html
Click the aove link to continue reading
அற்கா = நிலையில்லா
இயல்பிற்றுச் = இயல்பை உடையது
செல்வம் = செல்வம்
அதுபெற்றால் = அந்த செல்வத்தைப் பெற்றால்
அற்குப = நிலைத்தவற்றை
ஆங்கே = அப்போது
செயல் = செய்ய வேண்டும்.
"அது பெற்றால்" ....பெற்றால் என்பது சந்தேகமானது. கடினமானது என்று பொருள். "நன்றாக படித்தால், முதல் மாணவனாக வரலாம்" என்று சொன்னால், படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்பது புலப்படும்.
"நிலையான" என்றால் என்ன?
இதுதான் மிகப் பெரிய கேள்வி. வாழ்வில், எது நிலையானது?
எவை நிலையானவை என்று வள்ளுவர் சொல்லவில்லை. நாம் தான் சிந்தித்து கண்டு பிடிக்க வேண்டும்.
இளமை? ஆரோக்கியம் ? பிள்ளைகள் ? வீடு ? தங்கம், தகரம் போன்ற உலோகங்கள்? சுவர்க்கம்? புண்ணியம் ? பாவம் ? அறிவு?
எது நிலையானது? எப்போதும் இருப்பது? மாறாதது?
இதற்கு விடை கண்டு பிடித்து விட்டால், நிலையில்லாதவற்றை நாம் செய்து கொண்டு இருக்க மாட்டோம்.
இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதை ஏன் சொல்ல்லாமல் விட்டார்? அவருக்கே தெரியாதோ?
இல்லை. வள்ளுவர் எதைச் சொன்னாலும், " அது எப்படி நிலையானது ?" என்று நம் மனம் கேள்வி கேட்கும். வாதம் செய்யும். எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது.
நாமே கண்டு பிடித்தால்தான் உண்டு.
கண்டு பிடிப்பது மிக எளிமையானது. வாதம் செய்யாமல் இருந்தால்.
முயன்று பாருங்கள். முரண்பாடு கொண்டு, எதிர் வாதம் செய்யாமல், அமைதியாக தேடினால் கிடைக்கும்.
🙏🙏🙏
ReplyDelete