கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர்
துன்பம் வரும்போது துவண்டு போவது இயற்கை. ஏன் நமக்கு மட்டும் இப்படி நிகழ்கிறது என்று மனம் சோர்ந்து போவதும் இயல்புதான். யாராவது ஆறுதல் சொன்னால் கூட "உனக்கு வந்தால் தெரியும்..." என்று மனம் சலித்துக் கொள்ளும்.
என்ன தான் செய்வது? வந்த துன்பமோ போவதாகத் தெரியவில்லை. நாம் செய்வதற்கோ ஒன்றும் இல்லை. ஆறுதல் சொல்லியும் ஒன்றும் ஆகப் போவது இல்லை.
மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும். அது வேறு பல துன்பங்களில் நம்மை ஆழ்த்தி விடும்.
அந்த மாதிரி சமயங்களில் நல்ல இலக்கியங்கள் மனதை சற்றே இளகச் செய்யும். ஒரு புன்முறுவலை கொண்டு வரும். நமக்கு வந்தது ஒன்றும் பெரிதில்லை. இதை விட பெரிய துன்பம் எல்லாம் வந்து இருக்கிறது மற்றவர்களுக்கு என்று மனம் கொஞ்சம் தெம்பு பெரும்.
கிட்கிந்தா காண்டம். கார் காலம்.
மழை பொழிகிறது. காடு. குளிர். எங்கும் ஈரம். மரம் செடி கொடிகளில் நீர் சொட்டிக் கொண்டு இருக்கிறது. தரை எல்லாம் சேறும் சகதியுமாக இருக்கிறது. சில நாட்களாக மழை விட்ட பாடில்லை.
இராமன் தனித்து இருக்கிறான்.
இதில் எங்காவது சந்தோஷத்துக்கு இடம் இருக்கிறதா? சீதையைக் காணவில்லை. இராமன் தனித்து இருக்கிறான். மழைக் காலம். இதில் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?
கம்பன் ஆரவாரமான மகிழ்ச்சியை காட்டுகிறான் இந்த இடத்தில்.
எப்படி?
"இராமனும், வானரங்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி நம் பகைவர்கள் எல்லோரும் அழிந்தார்கள் என்று தேவர்கள் பேசி, ஆராவாரம் செய்தது போல மேகம் இடி இடித்தது. இராமனையும் வானரங்களையும் தேவர்கள் வாழ்த்தி மலர் பொழிவது போல மழை பொழிந்தது"
என்று கம்பன் இந்த இடத்தைக் காட்டுகிறான்.
பாடல்
தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை
பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர்
ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்
தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_81.html
click the above link to continue reading
தீர்த்தனும் = இராமனும்
கவிகளும் = வானரங்களும்
செறிந்து = ஒன்று சேர்ந்ததால்
நம் பகை = நம் (தேவர்ககளின்) பகை
பேர்த்தனர் இனி' = அழித்தனர் இனி
எனப் பேசி, = என்று பேசிக் கொண்டு
வானவர் = தேவர்கள்
ஆர்த்தென, = சந்தோஷத்தில் சப்தம் எழுப்பிய மாதிரி
ஆர்த்தன மேகம் = மேகங்கள் இடி இடித்தன
ஆய் மலர் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட மலர்களை
தூர்த்தன ஒத்தன = பொழிந்ததை போன்று இருந்தது
துள்ளி வெள்ளமே. =துள்ளி வரும் மழை துளிகள்
இதனால் இராமனின் சோகம் போய் விட்டது என்று கூறவில்லை.
இந்த சோக சூழ்நிலையிலும் இப்படி ஒரு அழகான பாடலைத் தரும் கம்பனின் கவித் திறம் இரசிக்கும் படி இருக்கிறது அல்லவா.
ஏதோ ஒரு வகையில், இலக்கியங்கள் மனதுக்கு ஒத்தடம் தருகின்றன.
"வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும் " என்று ஒரு பக்குவத்தைத் தருகின்றன.
உண்டா, இல்லையா?
No comments:
Post a Comment