Tuesday, January 12, 2021

திருவாசகம் - ஒளி செய் மானிடம்

 திருவாசகம் - ஒளி செய் மானிடம் 


திருவாசகம் படிக்க படிக்க கண்ணில் நீர் நிறைவது என்னவோ உண்மைதான். 

நமக்கு கிடைத்து இருக்கும் கொடைகளை எண்ணிப் பாருங்கள். ஆரோக்கியமான உடல். இது நாள் வரை. கண் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு கால் இல்லாமல் இருந்திருந்தால்? எத்தனையோ குறைகள் இல்லாமல் இருக்கிறோம். என்றாவது அது பற்றி மகிழ்ந்தது உண்டா? திருப்தி அடைந்தது உண்டா? 

அறிவு இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. படிக்க ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கிறது. அறிவை அள்ளி அள்ளித் தர வரிசையில் நிற்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

அதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. 

இருப்பதை எல்லாம் புறம் தள்ளி விட்டு, இல்லாததை கொண்டா என்று எவ்வளவு கீழ்மையாக நாம் நடந்து கொள்கிறோம். 


மணிவாசகர் உருகுகிறார். 


எனக்கு முன்னால் வந்தவர்கள், உன் கருணை வேண்டும் என்று உண்மையிலேயே வேண்டி, அதைப் பெற்றுக் கொண்டார்கள். எவ்வளவோ பெரிய ஆள் நீ. எனக்காக அருள் செய்ய வந்தாய். அந்தக் கருணையைக் கூட நான் புரிந்து கொள்ளவில்லை. என்னே என் கீழ் மதி 


என்று நொந்து கொள்கிறார். 


பாடல் 


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;

ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_12.html


click the above link to continue reading


மாறு இலாத = மாற்றம் இல்லாத 

மாக் கருணை = பெரிய கருணை 

வெள்ளமே! = வெள்ளமே 

வந்து = இங்கு வந்து 

முந்தி = எனக்கு முன்னால் 

நின் மலர்கொள் = உன்னுடைய மலர் போன்ற 

தாள் இணை, = இரண்டு திருவடிகளை 

வேறு இலாப் = நீங்குதல் இல்லாத 

பதப் பரிசு பெற்ற = அந்தப் பாதங்களை அடையும் பரிசு பெற்ற 

நின் = உன் 

மெய்ம்மை அன்பர் = உண்மையான அன்பர்கள் 

உன் மெய்ம்மை மேவினார்; = உன்னை அடைந்தார் 

ஈறு இலாத நீ = முடிவே இல்லாத நீ 

எளியை ஆகி வந்து = எளிமையாக வந்து 

ஒளிசெய் மானிடம் ஆக = ஒளி பொருந்திய மானிட வடிவம் பெற்று 

நோக்கியும், = எனக்கு காட்சி தந்தும் 

கீறு இலாத  =  இளகாத 

நெஞ்சு உடைய = மனதை உடைய 

நாயினேன் = நாயைப் போன்றவன் 

கடையன் = கீழானவன் 

ஆயினேன் = ஆயினேன் 

பட்ட கீழ்மையே. = நான் பட்ட கீழ்மையே 


முக்தி வேண்டும், இறைவனை அடைய வேண்டும், அற வழியில் வாழ வேண்டும் என்பார்கள். சரி, எப்படி என்று சொன்னால், அதெல்லாம் சரிப்படாது,  நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள். பின்னும், முக்தி அடைவது எப்படி,  இறைவனை அடைவது எப்படி என்று படிப்பார்கள். 


என்ன சொல்வது அவர்களை. 


இறைவன் எத்தனையோ வழிகளில் வந்து அருள் செய்கிறான். அது வேண்டாம், இது சரி இல்லை என்று தள்ளி விட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்வது. உண்மையான  பக்தி உள்ளவர்கள், அருளை பெற்றார்கள். முக்தி அடைந்தார்கள். எனக்கு நீ எவ்வளவோ சொல்லியும், தந்தும் ஒன்றும் புரியாமல்  கடின நெஞ்சோடு வாழ்கிறேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பக்குவம் அடைந்து விட்டால், ஒரு வார்த்தை போதும். 




2 comments:

  1. இறைவன் மட்டுமல்ல, உண்மை வாழவு வாழ நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்? இப்படித்தான் உண்மையான வாழ்வு வாழ முடியும் என்றால், நம்மில் எத்தனை பேரால் முடிகிறது?

    கண்ணில் நீர் பெருக்கிய பாடல். அருமை.

    ReplyDelete