Friday, January 22, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

 இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?


சில் பள்ளிக்கூடங்கள், அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். படிக்கிற பிள்ளை எங்கும் படிக்கும். பின், பரீட்சை எல்லாம் முடிந்த பின், தங்கள் பள்ளி நூறு சதவீதம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரம் செய்வார்கள். இதில் அவர்கள் பெருமை என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. 


அது போல, 


ஆரவமுதனார் சொல்கிறார், 


"இராமானுசரே, நான் ஒன்றுக்கும் உதவாதவன். என்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை. இனி மேலும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்காக நீர் எனக்கு அருள் செய்யாமல் போனால், மற்றவர்கள் உம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நல்லவர்களுக்கு மட்டும் தான் நீர் அருள் செய்வீர். எம்மை போன்ற கதி அற்றவர்களை நீர் கண்டு கொள்ள மாட்டீர் என்று உம்மைத்தான் பரிகாசம் செய்வார்கள். எனவே, நீர் எனக்கு அருள் செய்வதுதான் உமக்கு நல்லது"


என்று நகைச்சுவைப் பட இராமானுசரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். 


அதாவது, சரண் என்று அடைந்து விட்டால், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வது இராமனுசரின் இயல்பு என்று எளிமையாக கூறுகிறார். 


பாடல் 


என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_22.html

Click the above link to continue reading


என்னையும் பார்த்தென் = என்னையும் பார்த்து என் 

இயல்வையும் பார்த்து = என் குணத்தையும் பார்த்து 

எண்ணில் = எண்ண முடியாத 

பல்குணத்த = பல குணங்களை கொண்ட 

உன்னையும் = உன்னையும் (இராமானுசரையும்) 

பார்க்கில் = பார்த்தால் 

அருள் செய்வதே நலம் = நீர் எனக்கு அருள் செய்வதே நல்லது 

அன்றியென்பால் = மாறாக, என் பால் 

பின்னையும் பார்க்கில் = மேலும் பார்த்துக் கொண்டே இருந்தால் 

நலமுள தே? = நல்லாவா இருக்கு 

உன் பெருங்கருணை = உன்னுடைய பெரும் கருணை 

தன்னையென் பார்ப்பர் = தன்னை என்ன என்று நினைத்துப் பார்ப்பார்கள்? 

இராமா னுச! = இராமானுசரே 

உன்னைச் சார்ந்தவரே? = உன்னுடைய அடியவர்கள் 


பணக்காரனுக்குத் தான் உதவி செய்வேன் என்றால், அது உதவியா? அவனுக்கு தேவை இல்லை. பிச்சை காரனுக்குத்தான் பசிக்கும், உணவு வேண்டும். சீ சீ , நீ பிச்சைகாரன், உனக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 


ஆரவமுதனார் சொல்கிறார்,


என்னைப் பார்த்து

என் இயல்பைப் பார்த்து 

பின்னும் பார்த்து 


என்று. 


அதாவது, நான் இப்போது மோசம். இனிமேல் ஏதாவது நல்லது செய்யக் கூடிய வாய்ப்புள்ள குணம் ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி, இப்ப இல்லை, பின்னாளில் வருமா என்றால் வராது. 


எனவே, இராமானுசரே, பேசாமல் யோசிப்பதை விட்டு விட்டு எனக்கு நீர் அருள் செய்யும்.இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை. உம் அடியவர்கள் உம்மைப் பற்றி வேறுவிதமாக நினைப்பார்கள் என்கிறார். 


அருமையான பாடல். எவ்வளவு மோசமான ஆளுக்கும் அருள் செய்வார் என்பது பொருள். 


மூல நூலை தேடித் பிடித்துப் படியுங்கள். தேன் சொட்டும் பாடல்கள். 



1 comment:

  1. ஆகா, சூட்சிதமான பாடல்!

    ReplyDelete